குழந்தைகளின் மனச்சோர்வை நீக்குவோம்!

நன்றி குங்குமம் தோழி

குழந்தைப் பருவத்தில் ஏற்படும் வலுவான அடித்தளம்தான் அவர்களின் ஆரோக்கியமான மற்றும் பயனுள்ள வாழ்க்கைக்கு பிற்காலத்தில் வழிவகுக்கும். குழந்தைகளின் நல்ல மன ஆரோக்கியம் என்பது  வீடு மற்றும் பள்ளியில் சிறப்பானதொரு நட்புறவை வளர்க்கப் பெரிதும் உதவுகிறது.  கவலை மற்றும் மனச்சோர்வு போன்ற பிற மனநலப் பிரச்சனைகளை தடுக்கவும் இது உதவும்.

குழந்தைகள் எப்போதும் மகிழ்ச்சியானவர்கள் என நாம் நினைத்துக் கொள்கிறோம் ஆனால் சின்னச் சின்ன பிரச்னைகளுக்கும் குழந்தைகள் மனம் உடைகிறார்கள். மனச்சோர்வு என்பது ஒரு பொதுவான மனநலக் கோளாறாகும். இது பெரும் வியாதியில் அடங்காது என்றாலும் குழந்தைகளின் இயல்பு வாழ்வை கொஞ்சம் கடினமாக்கும். உடல் ஆரோக்கியத்தைப் போலவே குழந்தைகள் ஓடியாடி மகிழ்ச்சியோடு இருக்க மன ஆரோக்கியமும் முக்கியமான அடித்தளத்தைக் கொண்டது.

குழந்தைகளின் மனச்சோர்வுக்கான காரணங்கள்

பள்ளிகளில் தோல்விகளை சந்திக்கும்பொழுதும் பெற்றோர்களிடையே சண்டை நேர்வதை பார்க்கும் போதும் அவர்கள் மனநிலையில் பெரும் தாக்கம் ஏற்படுகிறது. இதுமட்டுமின்றி விவரம் அறியா பாலின துஷ்பிரயோகம் அதனால் உண்டாகும் அதிர்ச்சி, சகோதரர்களுக்கிடையில் பாகுபாடு காட்டும் நிகழ்வுகளாலும்  அதன்மூலம் புறக்கணிப்பை உணர்வதாலும் விரக்திக் கொள்கின்றனர். மேலும் உறவுகள் இல்லாத தனிமை, பெற்றோர்களை விட்டு நீண்ட நேரம் பிரிந்திருத்தல் என அவர்களை சுற்றி நடக்கும் விஷயங்களாலும் மனதளவில்  நிலைகுலைகிறார்கள். இது தவிர குடும்ப வறுமை மற்றும் தங்கள் நட்புக்களிடையே ஏற்படும் சண்டைகள் என அனைத்துமே குழந்தைகளின் மன ஆரோக்கியத்தை பாதிக்கச் செய்பவை.

மனச்சோர்வின் அறிகுறிகள்  

குழந்தைகள் ஒவ்வொருவரும் மனச்சோர்வை வித்தியாசமாக வெளிக்காட்டுகிறார்கள், அவர்களுக்குள் சில உணர்வுகள் மற்றும் நடத்தைகள் கீழ்கண்டவற்றுள் பொதுவானவையாக இருக்கிறது.

*குழந்தைகள் அமைதியாக மற்றும் காரணமற்ற சோகமான மனநிலையோடு திரிவது.

*எந்தக் குழந்தைகளோடும் சேராது தனிமையாகவோ, மகிழ்ச்சியற்று இருத்தல்.

*தன்னைப் பற்றிய  சுயவிமர்சனம் மற்றும் தன் குறைகளை தானே கண்டறிந்து சொல்வது அல்லது தன்னால் எதுவும் முடியவில்லை என சுயபச்சாதாபம் கொள்வது.

*ஆற்றல் மற்றும் முயற்சி இல்லாமை, சோம்பேறித்தனத்தை விரும்புவது.

*சரியானத் தூக்கம் மற்றும் போதிய உணவு எடுத்துக்கொள்ளாமல் இருத்தல்.

*அடிக்கடி உடல் உபாதைகளை தெரிவித்தும் காரணமற்று அழுவதும்.

*கவனச்சிதறல், ஞாபக மறதி மற்றும் படிப்பில் ஆர்வமின்மை.

*எரிச்சல் அல்லது கோபம்.

*எதிலும் நம்பிக்கையற்ற உணர்வு.

*எதிர்மறை எண்ணங்கள் வளர்த்துக்கொள்வது மற்றும் நண்பர்கள், குடும்பத்தினரிடமிருந்து விலகி நிற்பது.

குழந்தைகள் இவ்வாறான மனச் சோர்வில் இருப்பதற்கான அறிகுறிகள் காண நேர்ந்தால்...

*அவர்களுக்கு தனிமை தருவதை தவிர்க்கவும். நம்பிக்கையான  குடும்ப உறுப்பினர்களோடும் நண்பர்களோடும் பழகச் செய்ய வேண்டும்.

*குழந்தைகளை தொடர்ந்து ஏதாவது பேச ஊக்கப்படுத்த வேண்டும்.

*பள்ளியை தொடர்பு கொண்டு ஆசிரியரிடம் அவர்களின் நடத்தைப் பற்றி அடிக்கடி விசாரிக்க வேண்டும்.

*சோகம் மற்றும் மனச்சோர்வு சரியானதல்ல என குழந்தைகளை மடியில் அமர்த்தி பேசுங்கள்.

*இரண்டு குழந்தைகள் இருப்பின் அவர்களுக்குள் பாகுபாடு உணர்வு உண்டாகாத அளவிற்கு பெற்றோர்கள் நடக்க வேண்டும்.

*குழந்தைகள் முன் தீய வார்த்தை பேசுவது சண்டையிட்டுக் கொள்வது அனைத்தும் அவர்கள் மனதை சிதைக்கக்கூடியவை.

*குழந்தைகளை நீண்டநேரம் வீட்டில் தனியாக விட்டு செல்வதை தவிர்க்க வேண்டும்.

*அவர்களோடு நேரம் செலவழிப்பது, விளையாடுவது, பயணம் மேற்கொள்வது அனைத்தும் குழந்தைகளின் மனதை ஆரோக்கியமானதாக மாற்றக்கூடியவை.

*தீர்வுக்காண முடியாத சில கேள்விகளுக்கு குழந்தைகள் நல மருத்துவர் மற்றும் உளவியல் நிபுணர்களை அணுகலாம்.

தொகுப்பு : மதுரை சத்யா

Related Stories: