கண்ணைக் கட்டிக் கொள்ளாதே- கண்வலி ஏ டூ இசட்

நன்றி குங்குமம் டாக்டர்

கண் மருத்துவர் அகிலாண்ட பாரதி

கடந்த மாதம் கண்வலி பலரைப் பாடாய்ப் படுத்திப்போனது. அடைமழை போல் பலரையும் ஒரே நேரத்தில் தாக்கி, தற்போது தூவானமாய் ஆங்காங்கே ஒன்றிரண்டு பேரை பாதித்து வருகிறது. கடந்த பத்து வருடங்களில் இது மிகத் தீவிரமான ‘கண்வலி சீசன்’ எனலாம்.“கண் வலி தானே? வந்துட்டு, அதுவா போயிடும்” என்று சிலரும், “இதுவரைக்கும் எனக்கு கண் வலி வந்ததே இல்லை.. தாங்க முடியலை” என்று சிலரும், “என் குழந்தைக்கு இரண்டு நாள்ல சரியாப் போயிடுச்சு. எனக்கு அஞ்சு நாளாகியும் சரியாகலையே?” என்று சிலரும் கண்வலி குறித்த தங்கள் பார்வையை முன் வைக்கின்றனர்.

குறிப்பிட்ட பருவகாலத்தில் மனிதர்களை பாதிக்கும் பல தொற்று நோய்களில் ஒன்றுதான் கண் வலியும்.  மழை நேரத்தில் வரும் ஜலதோஷம், காய்ச்சல், ஃப்ளூ போன்ற நோய்களைப் போன்றே இதுவும் வைரஸ் கிருமியால் ஏற்படுவது. பெரும்பாலும் அடினோ வைரஸ் கிருமி இதற்குக் காரணமாக இருக்கலாம். மழை, குளிர் நேரத்தில் தொற்று அதிகமாக இருப்பதற்குக் காரணம், குறைந்த தட்பவெப்ப நிலையில் வைரஸ் கிருமிகள் நீண்ட நேரம் உயிரோடிருப்பது தான். வெயில் காலத்திலும் அரிதாக ஒன்றிரண்டு பேருக்குக் கண் வலி ஏற்படக்கூடும். ஆனால் புவியின் வெப்பம் காரணமாக அவை விரைவில் இறந்தும் போய்விடும். மழை நேரம் கிருமிகளின் வளர்ச்சிக்கும் பெருக்கத்திற்கும் உகந்ததாக இருப்பதால் தொடர்ச்சியாகப் பலரை பாதிக்கிறது.

“என் குழந்தைக்கு முதன்முதல்ல ஸ்கூல்ல இருந்து வந்துச்சு. அதுக்கப்புறம் ஒவ்வொருத்தருக்கா எங்க வீட்ல எல்லாருக்கும் வந்துட்டுப் போயிடுச்சு” என்பது பல குடும்பத்தினர் சந்தித்த விஷயம்.‌ஒரே வீட்டில் இருப்பவர்கள், பொருட்களைத் தங்களுக்குள் பரிமாறிக் கொள்வதும், அருகருகே வசிப்பதுமாக இருப்பதால் தொற்று எளிதில் பரவுகிறது (fomite transfer). பள்ளிக் குழந்தைகள் தங்களுக்குள் பேனா, பென்சில், நோட்டு போன்றவற்றைப் பரிமாற்றம் செய்து கொள்வதும் கண் வலியின் பரவலுக்கு முக்கிய காரணம். கண்ணில் வலியும், தொடர்ச்சியாக நீர் வடிதலும் இருக்கிறது என்றால் ஒரு குழந்தை அடிக்கடி கண்ணைக் கசக்குவதும், கைகுட்டையால் துடைப்பதும் இயல்பு. பின்பு அதே கையால் தன்னுடைய பொருட்களையும், நண்பர்களுடைய பொருட்களையும் கையாளுகையில் கண்ணீரின் மூலமாக வெளியேறிய அடினோ வைரஸ் கிருமிகள் அப்படியே பத்திரமாக மற்றவருக்கும் போய்விடுகின்றன.

 எங்கள் ஊரில் சில பள்ளிகளில் கண் வலி இருந்தால் பள்ளிக்கு வர வேண்டாம் என்று சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அந்தப் பள்ளிக்கூடத்துப் பிள்ளைகள் பாதிப்பிலிருந்து பெருமளவு தப்பித்து விட்டார்கள். கண்வலி வந்தாலும் நீ பள்ளிக்கூடத்திற்கு வர வேண்டும், ஸ்பெஷல் க்ளாஸும் உண்டு என்று சொன்ன பள்ளிகளில் நூற்றுக்குத் தொண்ணூறு குழந்தைகள் கண்வலியால் பாதிக்கப்பட்டனர். பின் அவர்களது குடும்பத்தினர், ஆசிரியர்கள், ஆசிரியர்களின் குடும்பத்தினர் என்று தினந்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்குக் கண்வலி வந்து போனது. 3 வாரங்களுக்கும் மேலாக நாளொன்றுக்கு முப்பது நோயாளிகளுக்குக் குறையாமல் பார்க்க முடிந்தது. தற்போது கடந்த ஒரு வாரத்தில் அது வெகுவாகக் குறைந்து, தினமும் இரண்டு அல்லது மூன்று நோயாளிகளை சந்திக்கிறேன்.

கண்வலி சுயமருத்துவம் பார்க்கப்படும் கண் நோய்களில் முதலிடத்தைப் பிடிக்கிறது. நூற்றுக்கு 95 பேர் மருந்துக் கடையில் சொட்டு மருந்தினை வாங்கிப் போட்டுக்கொண்டு சரியாகாத பட்சத்தில் தான் மருத்துவரிடம் வருகிறார்கள். பழைய மருந்துகள், மற்றவருடைய மருந்துகள், கண்ணழுத்தம், ஒவ்வாமை போன்ற பிற பிரச்சனைகளுக்காகக் கொடுக்கப்பட்ட கண் மருந்துகள் இவற்றைப் பயன்படுத்துபவர்களும் உண்டு.

பெரும்பாலான வைரஸ் தொற்றுக்கள் எந்தவித மருந்துகளும் இல்லாமல் குணமாகக் கூடியவை. கூடுதலாக பாக்டீரியா தொற்று ஏற்படாமல் தவிர்ப்பதற்காகவே மிதமான ஆன்டிபயாட்டிக் மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். தொற்று தீவிரமாக இருக்கையில் ஆன்ட்டி- வைரல் மருந்துகள் கொடுக்கப்படும். இவை பெரும்பாலும் களிம்பு வடிவிலேயே கிடைக்கின்றன.

ஸ்டீராய்டு மருந்தைத் தொற்று ஆரம்பித்த முதல் வாரத்தில் பயன்படுத்தவே கூடாது. அழற்சி ஏற்படும் பட்சத்தில், இரண்டாம் வாரத்தில் மருத்துவர் பரிந்துரைத்தால் மட்டுமே பயன்படுத்தலாம். வைரஸ் கிருமி உயிருடன் இருக்கும் காலம் சராசரியாக 3 முதல் 5 நாட்கள் மட்டுமே. அதன் பின் அந்தத் தொற்றுக்கு நம் உடல் ஆற்றும் எதிர்வினையால் சில பாதிப்புகளைக் காண முடிகிறது. மிகுந்த வீரியம் மிக்க கிருமியாக இருந்தாலோ, நோயாளி எதிர்ப்பாற்றல் குறைந்தவராக இருந்தாலோ, வழக்கமாகக் கண்ணின் வெண்படலத்தில் மட்டுமே இருக்கும் பாதிப்பு கருவிழியையும் தாக்கி அதில் சில புள்ளிகள் (keratitis) தோன்றக்கூடும்.

இந்த முறை நிறைய நோயாளிகளுக்கு கண்வலி வந்துவிட்டுப் போன பின்பு வெண்படலத்தில் ரத்தக்கசிவு (subconjunctival hemorrhage) தோன்றியது.  “வலி, எரிச்சல், நீர் வடிதல் எதுவுமே இல்லை. கண்ணு மட்டும் ரத்தமா இருக்குது. சரியாகாமல் பள்ளிக்கூடத்துக்கு வரக்கூடாதுன்னு சொல்லிட்டாங்க. இவனுக்கு ஒரு வாரமா இப்படியே இருக்கே.. எத்தனை நாள் பள்ளிக்கூடத்துக்கு போகாமல் இருக்க முடியும்” என்று ஆதங்கப்பட்டார் ஒரு தாய்.

 அந்தச் சிறுவனுக்கு வெண்படலத்திற்குக் கீழ் சிறிய ரத்தக்கசிவு ஏற்பட்டிருந்தது. இப்படிப்பட்ட கசிவு தோன்றி விட்டால், அது முற்றிலும் மறைய குறைந்தது 15 முதல் 20 நாட்கள் ஆகும். ரத்த நாளங்களின் வலுவின்மை, உயர் இரத்த அழுத்தம், இருமல், வாந்தி போன்ற காரணங்களால் இந்த ரத்தக்கசிவு ஏற்பட்டிருக்கக் கூடும். சிலருக்கு எந்தவித காரணம் இன்றியும் இத்தகைய ரத்தக்கசிவு நேரலாம்.

இதை விளக்கிச் சொல்லி என்னுடைய பரிந்துரைச் சீட்டிலேயே, ‘சிறுவனின் தற்போதைய நிலை தொற்று ஏற்படுத்தக் கூடியது அல்ல. தாராளமாகப் பள்ளியில் அனுமதிக்கலாம்’ என்று எழுதி அனுப்பினேன். இதே மாதிரியான ரத்தக்கசிவுடன் வரும் பெரியவர்களுக்கு ரத்த அழுத்தத்தைப் பரிசோதித்துப் பார்க்கையில், சிலருக்கு சற்று அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களுக்கு ஏற்கனவே இருந்திருந்த உயர் ரத்தஅழுத்த நோயின் அறிகுறியாக இந்த ரத்தக்கசிவு அமைந்தது.

கண் வலி வந்து விட்டுப் போனதிலிருந்து என் மகன் கண்களைக் கசக்கிக் கொண்டே இருக்கிறான் என்பது சில பெற்றோர் கூறும் அறிகுறி.  இது ஒவ்வாமையால் இருக்கலாம். ஒவ்வாமைக்குக் காரணம், இறந்து போன வைரஸ் கிருமியாக இருக்கலாம், அல்லது கைகுட்டையால் அடிக்கடி கண்ணைத் துடைத்ததால் இருக்கக் கூடும். சில சமயம் மருந்துகளாலும் இத்தகைய ஒவ்வாமை ஏற்படலாம்.

கண்வலி பாதித்த நபரைப் பார்த்ததால் எனக்கும் கண்வலி வந்தது என்ற நம்பிக்கை மக்களிடையே பரவலாக இருக்கிறது. இது முற்றிலும் தவறானது. ஒருவரைப் பார்ப்பதாலேயே கண்வலி வந்து விடாது. அவர் பயன்படுத்திய பொருட்களை நாம் பயன்படுத்துவது, பின் அதே கையை நம் கண்ணில் வைப்பதே கண்வலி பரவுவதற்கு முக்கியக் காரணம். கண் வலியுடன் ஜலதோஷம், தும்மல், இருமல் போன்ற அறிகுறிகளும் இருக்கும் என்பதால் இருமுதல் மற்றும் தும்முதல் மூலமாகவும் தொற்று பரவக் கூடும். கறுப்புக் கண்ணாடி அணிவதால், வெயில் படும்பொழுது ஏற்படும் கூச்சத்தைக் குறைக்கலாம். ஏதாவது ஒரு வகை கண்ணாடி அணிந்திருக்கும் பொழுது ஒப்பீட்டளவில் நாம் கையை அடிக்கடி கண்களுக்குக் கொண்டு போக மாட்டோம். அந்த வகையில் கண்வலி பரவலை அதிக அளவில் குறைக்க முடியும்.

கண்வலி பாதித்த நபர்கள் கையில் கைகுட்டையுடன் இருப்பதைப் பார்க்கலாம்.  அதை விட நான்கைந்து உருண்டைகளாகப் பஞ்சினை உருட்டிக் கையில் வைத்துக் கொள்ளுங்கள் என்பது நான் கூறும் அறிவுரை. கைக்குட்டை கையில் இருந்தால் நம்மை அறியாமலே அடிக்கடி கண்ணைத் துடைப்போம். அப்புறம் அந்தக் கைக்குட்டையை ஆங்காங்கே வைப்பதும் நடக்கும். அதை விட, அதிகமாக தண்ணீர் வடியும் நேரம் அதை சிறிது பஞ்சினால் துடைத்துவிட்டு அந்தப் பஞ்சைக் குப்பைத் தொட்டியில் போடலாம்.‌கண்களில் கை வைக்கும் ஒவ்வொரு முறையும் கையில் சானிடைசர் போடுவது நல்லது. இதன் மூலம் 100% ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு கண் வலி பரவுவதைத் தவிர்க்கலாம்.

ஒரு நோயாளியைப் பரிசோதித்த பின்பு கையில் சானிடைசர் போடுவது கண் மருத்துவர்களின் வழக்கம். கூடவே கண்வலி வந்த நோயாளியைப் பரிசோதித்த கருவிகளையும் ஸ்பிரிட் கொண்டு துடைத்து விடுவார்கள். இது குறித்த கல்வி கண் மருத்துவமனையில் பணிபுரியும் அனைவருக்கும் வழங்கப்படும்.‌மருத்துவமனை வளாகத்தில் வைத்து தொற்றின் விகிதத்தைக் குறைப்பது இதன் முக்கிய நோக்கம்.

கண்வலி வந்தால் என்னென்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்வதை விட, என்னென்ன செய்யக்கூடாது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவது மிக அவசியம். கண்வலி என்று நினைத்து வேறு பல முக்கிய நோய்களை கவனிக்காமல் விட்டுவிடும் நோயாளிகள் அதிகம். கண்வலி வந்த நோயாளிகள் பலர் தங்கள் வழக்கமான சொட்டு மருந்துகளை

நிறுத்தியதையும் பார்க்க முடிகிறது.

சமீபத்தில் வந்து விட்டுப் போன கொரோனா பெருந்தொற்று காரணமாக சில நல்ல பழக்க வழக்கங்கள் நம் சமூகத்தில் பரவியிருந்தன. அடிக்கடி கை கழுவுதல், சமூக இடைவெளி, முகக்கவசம் மற்றும் சானிடைசர் பயன்பாடு போன்றவற்றை கண் வலி உள்ளிட்ட எந்த வைரஸ் தொற்று அதிகம் பரவினாலும் தாமாகவே முன்வந்து செயல்படுத்த வேண்டும். இதன் மூலம் தொற்றையும், அதன் தீவிரத்தையும் பல மடங்கு குறைக்கலாம்!

Related Stories: