ஹெல்தி கேக் வகைகள்!

நன்றி குங்குமம் டாக்டர்

வாழைப்பழ கேக்

தேவையானவை:

வாழைப்பழம் - 4

முட்டை - 2

எண்ணெய் - 4 தேக்கரண்டி

உப்பு - ¼ தேக்கரண்டி

மைதா மாவு - 250 கிராம்

பேக்கிங் பவுடர் - 1 தேக்கரண்டி

கோகோ பவுடர் - 5 கிராம்

கெட்டியாக காய்ச்சிய பால் - 250 மில்லி

பிரெஷ் கிரீம் - 250 மில்லி

சர்க்கரை - 25 கிராம்

சாக்லேட்துண்டுகள் - தேவையானஅளவு.

செய்முறை: 

நன்றாகப் பழுத்த 2 வாழைப்பழத்தை மிக்சியிலிட்டு  அரைத்துக்கொள்ளவும். மீதம் இருக்கும் வாழைப்பழத்தை சிறு சிறு வில்லைகளாக வெட்டிக்கொள்ளவும். பின்னர், ஒரு பாத்திரத்தில் முட்டை, எண்ணெய், அரைத்த வாழைப்பழம் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும். மற்றொரு பாத்திரத்தில் கோகோ பவுடர், மைதா மாவு, பேக்கிங் பவுடர் மூன்றையும் கொட்டி சலித்துக்கொள்ளவும். இதை முட்டைக் கலவையில் சேர்த்துக் கட்டியில்லாமல் கலக்கவும். பின்பு அந்தக் கலவையில் காய்ச்சியப் பாலை சிறிது சிறிதாக ஊற்றி தோசை மாவு பதத்துக்கு வரும் வரை நன்றாகக் கலக்கவும். அதனை மூடி, குளிர்சாதனப் பெட்டியில் 2 மணி நேரம் வைக்கவும்.

பிறகு நான்-ஸ்டிக் தவாவில், சிறு சிறு அடைகளாக மிதமான தீயில் சுட்டெடுக்கவும். ஒரு பாத்திரத்தில் பிரெஷ் கிரீம், சர்க்கரை சேர்த்து, எக் பீட்டர் கொண்டு கிரீம் பதத்திற்கு வரும் வரை  பீட் செய்யவும். வாழைப்பழ அடையின் மேல், தயார் செய்த பிரெஷ் கிரீமைத் தடவி அதன் மேல் வெட்டப்பட்ட வாழைப்பழ வில்லைகளை வைக்கவும். பின்னர் மீண்டும் அதன் மேல் பிரெஷ் கிரீமைத் தடவவும். இதே போன்று, ஒன்றன் மீது ஒன்றாக வாழைப்பழ அடைகளை அடுக்கவும். பின்பு அந்த அடுக்கின் மீது உருக்கிய சாக்லேட் ஊற்றி அலங்கரிக்கவும். இப்பொழுது சுவையான வாழைப்பழ கேக் தயார்.

பலன்கள்: வாழைப்பழத்தில் வைட்டமின்-ஏ, வைட்டமின்-பி மற்றும் மெக்னீசியம் தவிர, வைட்டமின்-சி, பொட்டாசியம் மற்றும் வைட்டமின்-பி6, தயமின், ரிபோஃப்ளேவின் ஆகியவை  நிறைந்து உள்ளன.  உடலில் கால்சியம் சத்து குறைவாக உள்ளவர்கள், தினமும் வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் கால்சியம் அளவு  கண்டிப்பாக அதிகரிக்கும்.

தினை வெனிலா ஸ்பாஞ்ச் கேக்

தேவையானவை:

தினை மாவு - 35 கிராம்

கோதுமை மாவு - 35 கிராம்

உப்பில்லாத வெண்ணெய் - 30 கிராம்  

சர்க்கரை - 60 கிராம்  

பேக்கிங்பவுடர்  - கால் தேக்கரண்டி  

உப்புத்தண்ணீர் - 1 தேக்கரண்டி  (ஒரு டீஸ்பூன் தண்ணீரில் ஒரு சிட்டிகை உப்பைக் கரைக்கவும்)

எண்ணெய் - 1 தேக்கரண்டி

வெனிலா எசென்ஸ் மற்றும் பைனாப்பிள் எசென்ஸ் - 1 தேக்கரண்டி

முட்டை - 1.

செய்முறை:

தினையை 4 மணி நேரம் ஊறவைக்கவும். பின்பு தண்ணீர் இறுத்து வெயிலில் லேசாக உலர்த்தி எடுக்கவும். இதனை வாணலியில் சேர்த்து ஈரம் போக லேசாக வறுத்து ஆறவைத்து மிக்ஸியில் நைஸாக அரைத்துக் கொள்ளவும். இனி, தினைமாவு, கோதுமை மாவு, பேக்கிங் பவுடர் மூன்றையும் ஒன்றாகச் சேர்த்து கலந்து சலித்து வைக்கவும். ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் மற்றும் சர்க்கரையைத் தனியாக எடுத்து சிறிது நேரத்துக்கு நன்றாகக் கலக்கவும். பிறகு  முட்டை சேர்த்து ஹேண்ட் பீட்டரால் நன்கு அடிக்கவும். இத்துடன் உப்புத்தண்ணீர் மற்றும் எண்ணெயைச் சேர்த்துக் கலக்கி சலித்த மாவை ஒன்றாகச் சேர்த்து நன்றாகப் பொங்கி வரும் வரை கலக்கவும்.

பின்னர் வெனிலா மற்றும் பைனாப்பிள் எசன்ஸை இதனுடன் ஊற்றி விடவும். கலவை தோசை மாவு பதத்துக்கு இருக்க வேண்டும்.  எல்லாவற்றையும் ரெடி செய்தவுடன், கேக் செய்யும் பாத்திரத்தில் ஒரு டீஸ்பூன் அளவு எண்ணெயைத் தடவி அதன் மேல் சிறிது கோதுமைமாவு தூவி பாத்திரம் முழுக்கப் பரப்பி விடவும். அதன் மேல் கேக் மாவைக் சமமாக ஊற்ற வேண்டும். இதை குக்கரில் வைத்து 25-30 நிமிடம் மிதமான சூட்டில் வேகவைத்து இறக்கி விடவும். கேக் ஆறியதும் க்ரீம் தடவி அழகுபடுத்தலாம். இப்போது சுவையான  தினை கேக் தயார்.

பலன்கள்: இதயத்துக்கு பலம் சேர்க்கும் பி1 வைட்டமின் தினையில்  நிறைந்துள்ளது.  தினை எடுத்து கொள்வதால் இதய நோய் வராமல் தடுக்க முடியும். மேலும், மறதி நோய் என்னும் அல்சைமர் நோய் தீவிரமாகாமல்  தடுக்கும்.

தொகுப்பு : ஸ்ரீதேவி குமரேசன்

Related Stories: