×

குமரி மலையோர பகுதியில் கனமழை பெருஞ்சாணியில் 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு

குலசேகரம், ஆக. 15: கனமழையால் பெருஞ்சாணி அணையில் இருந்து 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. மலையோர பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்வதால் அணைகள் மற்றும் நீர் நிலைகள் நிரம்பியுள்ளன. ஆறுகளிலும் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள பெருஞ்சாணி, சிற்றாறு, கோதையாறு அணைகள் உச்ச கொள்ளளவை எட்டியுள்ளன. பேச்சிப்பாறை அணையில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் நீர் தேக்கப்படவில்லை.77 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் நேற்றுமுன்தினம் காலை 76.20 அடியாக இருந்தது. அணை நிரம்பியதால் நேற்று முன்தினம் காலை மறுகால் மதகு திறக்கப்பட்டது. காலை 1000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால், மதியம் 1500 கன அடியும், மாலையில் 2000 கனஅடியும் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இரவில் 3000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

நேற்று காலை இது 5000 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. பிற்பகலில் 10 ஆயிரம் கன அடியாகவும், மாலை 12 ஆயிரம் கனஅடியாகவும் அதிகரித்தது. நேற்று மாலை 6 மணியளவில் அணைக்கு 12 ஆயிரம் தண்ணீர் வந்துகொண்டிருந்த நிலையில் அதே அளவு தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இரவு 8 மணியளவில் இது 15 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது. மலைப்பகுதியில் மழையின் வேகம் அதிகரித்ததால், பாதுகாப்பு கருதி கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.பரளியாற்றில் மழை நீரும், பெருஞ்சாணி அணையில் இருந்து திறந்து விடப்படும் நீரும் சேர்ந்து ஓடுவதால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மாத்தூர் தொட்டி பாலம் சப்பாத்தை மூழ்கடித்து தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் மக்கள் மாற்று பாதையில் செல்கின்றனர்.
சிற்றார் அணைகளில் இருந்தும் வினாடிக்கு 250 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் கோதையாற்றில் கலந்து வருவதால் திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அருவியில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பேச்சிப்பாறை அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் கோதையாறு இடதுகரை கால்வாய் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. இது பெருஞ்சாணி அருகே உள்ள புத்தன் அணைக்கு வந்து அங்கிருந்து பிற கால்வாய்கள் வழியாக திருப்பி பாசனத்துக்கு அனுப்பப்படுவது வழக்கம்.நேற்று காலை கோதையாறு இடதுகரை கால்வாய் மற்றும் பெருஞ்சாணி அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் புத்தன் அணைக்கு ஒரே நேரத்தில் வந்தது. இதனால் நீரின் அழுத்தம் காரணமாக பேச்சிப்பாறை அணையில் இருந்து வந்த தண்ணீர் பாய்ந்து செல்ல முடியாமல் கால்வாயில் பெருகி எதிரே செல்லும் சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் குற்றியாணி பகுதியில் கோதையாறு இடதுகரை கால்வாயில் உடைப்பு ஏற்பட்டது.இதனால் பெருஞ்சாணி செல்லும் சாலை துண்டிக்கப்பட்டது. உடைப்பு வழியாக வெளியேறும் தண்ணீர் அருகில் உள்ள ரப்பர் தோட்டங்கள் வழியாக பாய்ந்து பரளியாற்றில் கலந்துவருகிறது.இதனால் திருவட்டாரில் தாழ்வான பகுதிகளில் உள்ள வாழை, ரப்பர் தோட்டங்களில் தண்ணீர் சூழ்ந்தது. பரளியாற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால் மலவிளை - மாத்தூர் இணைப்பு பாலம் தண்ணீரில் மூழ்கியுள்ளது. பாலத்தில் சுமார் 3 அடி உயரத்திற்கு தண்ணீர் பாய்ந்து செல்கிறது.  திருவட்டார் கூற்றவிளாகம் பாலம் மற்றும் அதையொட்டி சற்று தாழ்வான பகுதியில் உள்ள கூற்றவிளாகம் சாலையும் மூழ்கியது. இதுபோல் அருவிக்கரை - அணைக்கரை இணைப்பு பாலமும் மூழ்கியது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

இதுபோல் கனமழையால் கோதையார் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகம் முழுவதும் தண்ணீர் தேங்கியுள்ளது. குற்றியாறில் அதிக தண்ணீர் பாய்ந்து வருவதால் மோதிரமலை - குற்றியாறு பாலம் மூழ்கியது.1992க்கு பிறகு வெள்ளப்பெருக்கு
பெருஞ்சாணி அணையில் இருந்து 1992ம் ஆண்டுக்கு பிறகு இப்போது தான் அதிக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதுபோல் அப்பர் கோதையாறு, கோதையாறு அணைகளும் நிரம்பியுள்ளன. அங்கிருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் பேச்சிப்பாறை அணைக்கு வந்துகொண்டிருக்கிறது.பழுதான ஷட்டர்புத்தன்அணையில் இருந்து பாசன கால்வாய்கள் மற்றும் பரளியாற்றில் தண்ணீரை பிரித்து அனுப்ப தனித்தனி ஷட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து புத்தன்அணைக்கு வரும் தண்ணீரை தேவைக்கேற்ப இந்த ஷட்டர்கள் வழியாக பிரித்து அனுப்புவது வழக்கம். இதுபோல் பெருஞ்சாணி அணை மறுகால் தண்ணீரும் புத்தன் அணையை கடந்துதான் செல்ல வேண்டும். இவ்வாறு மறுகால் திறக்கும் போது புத்தன் அணை ஷட்டர்கள் அனைத்தையும் மொத்தமாக திறந்து வைப்பது வழக்கம். அப்போது தண்ணீர் எளிதாக வெளியேறி பரளியாற்றில் கலந்து சென்றுவிடும். ஆனால் நேற்று பெருஞ்சாணியில் இருந்து அதிக அளவில் உபரிநீர் வெளியேற்றப்பட்ட நிலையில் புத்தன்அணை ஷட்டர்கள் சரியாக இயங்காததால் முழுமையாக திறக்க முடியவில்லை. இதனால் பேச்சிப்பாறை மெயின் கால்வாயில் அழுத்தம் அதிகரித்து உடைப்பு ஏற்பட்டுள்ளது.


Tags :
× RELATED மழைநீர் வடிகாலில் கழிவை விட்ட...