×

இன்று காலை கொச்சி அழைத்துவர ஏற்பாடு விசைப்படகு மீது மோதியது ‘எம்.வி தேச சக்தி’ கப்பல் 8 சோதனையில் முக்கிய தடயங்கள் சிக்கியது 8 கேப்டன் உட்பட 3 பேர் கைதாகின்றனர்

நாகர்கோவில், ஆக.15:  விசைப்படகு மீது மோதிய கப்பல் எம்.வி தேச சக்தி என்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் கப்பல் கேப்டன், 2 பணியாளர்களை கைது ெசய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். கேரளா மாநிலம் கொச்சி அருகே முனம்பத்தில் இருந்து ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற குமரி மாவட்ட மீனவர்கள் உள்ளிட்ட 14 பேர் சென்ற விசைப்படகு மீது கடந்த 7ம் தேதி அதிகாலை இந்திய சரக்கு கப்பல் மோதியது. இதில் 3 பேர் இறந்தனர். 9 பேர் மாயமாகிய நிலையில் அவர்களின் 2 பேரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குமரி மாவட்ட மீனவர்கள் 7 பேரை தேடி வருகின்றனர். விபத்து நடந்து ஒரு வாரத்திற்கும் மேல் ஆகியுள்ள நிலையில் கப்பலின் கேப்டன் மீது இதுவரை வழக்குபதிவு செய்யப்படவில்லை எனவும், கப்பலை பறிமுதல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்தது. கப்பலில் மோதியதாக கருதப்படும் ஷிப்பிங் கார்பரேஷன் ஆப் இந்தியாவின் கப்பல் மங்களூரு துறைமுக பகுதியில் நிறுத்திவிடப்பட்டுள்ளது.

கச்சா எண்ணெய் ஏற்றி வர சென்னையில் இருந்து ஈரான் செல்லும் வழியில் கப்பல் விசைப்படகு மீது மோதியுள்ளது. இருப்பினும் முதலில் கப்பல் நிற்காமல் சென்றது. ஷிப்பிங் டைரக்டர் ஜெனரல் அளித்த தகவலை தொடர்ந்து கப்பல் மங்களூரு துறைமுகத்தில் நிறுத்திவிடப்பட்டிருந்தது. பின்னர் புது மங்களூரு துறைமுக பகுதிக்கு கொண்டுவரப்பட்ட கப்பலின் மேல் பாகத்தில் சோதனை நடத்தப்பட்டது. அதில் தடயங்கள் ஏதும் சிக்கவில்லை. இந்தநிலையில் மும்பையில் இருந்து அழைத்துவரப்பட்ட நீர்மூழ்கி வீரர்கள் உதவியுடன் கப்பலின் அடிப் பகுதியில் சென்று ஞாயிற்றுகிழமை முதல் சோதனை நடத்தப்பட்டு வந்தது.இது தொடர்பாக வீடியோ பதிவுகளும் எடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. இதில் விசைப்படகு மீது கப்பல் மோதியதற்கான தடயங்கள் சேகரிக்கப்பட்டு விசைப்படகு மீது மோதியது ‘எம்.வி தேச சக்தி’ என்ற கப்பல்தான் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மங்களூருவில் முகாமிட்டிருந்த மட்டாஞ்சேரி போலீசார் கப்பல் கேப்டன் மற்றும் சம்பவத்தின்போது பணியில் இருந்த 2 பணியாளர்கள் என்று மூன்று பேரை போலீசார் கஸ்டடியில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் மூன்று பேரும் இன்று காலையில் கொச்சி அழைத்துவரப்பட உள்ளனர். விசாரணை முடிவில் இவர்கள் கைது செய்யப்பட வாய்ப்புகள் உள்ளது.

கப்பற்படை அதிகாரிகளுடன் விஜயகுமார் எம்.பி. சந்திப்பு
குமரி மாவட்ட மீனவர்களை தேடும் பணியை தீவிரப்படுத்துவது தொடர்பாக ஏற்கனவே மத்திய ராணுவ அமைச்சர் நிர்மலா சீத்தாராமனை, விஜயகுமார் எம்.பி. சந்தித்து தேடும் பணியை துரிதப்படுத்த வேண்டுகோள் விடுத்திருந்தார். பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் விஜயகுமார் எம்.பி.யை சந்தித்து மனு அளித்தனர். இதைத்தொடர்ந்து தேடும் பணியை தீவிரப்படுத்த விஜயகுமார் எம்.பி. நேற்று முன்தினம் கொச்சி புறப்பட்டு சென்றார்.

 நேற்று காலை அவர் கொச்சியில் கடற்படை அதிகாரிகளை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் கடற்படை அதிகாரிகள் கூறுகையில், 6 கப்பல்களில் தேடுதல் பணி நடக்கிறது. சேதமடைந்த விசைப்படகு கடலில் சுமார் 80 மீட்டர் ஆழத்தில் உள்ளதாக தெரிய வந்துள்ளது. முதற்கட்டமாக படகை மீட்பதை விட அதில் சிக்கி இருப்பவர்கள் வெளியேறி கடலில் எங்காவது தத்தளிக்கிறார்களா? என்பதை கண்டுபிடிக்கும் வகையில் தேடுதல் வேட்டை நடக்கிறது என்றனர்.அப்போது விஜயகுமார் எம்.பி., மாயமான மீனவர்களின் குடும்பத்தினர் மிகுந்த கவலையுடன் உள்ளனர். குமரி மாவட்ட கடற்கரை கிராமங்களில் பதட்டம் நிலவுகிறது. எனவே மீனவர்களை விரைந்து கண்டுபிடிக்க வேண்டும் என்றார். இது சம்பந்தமாக கொச்சி மாவட்ட கலெக்டரையும் அவர் சந்தித்து பேசினார்.

Tags :
× RELATED மழைநீர் வடிகாலில் கழிவை விட்ட...