×

மழைநீர் வீணாவதை தடுக்க நீர்நிலைகளை உருவாக்க விவசாயிகள் கோரிக்கை

உடுமலை: மழைநீர் வீணாவதை தடுக்க புதிய நீர்நிலைகளை உருவாக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இந்தாண்டு தென்மேற்கு பருவமழை வழக்கத்தைவிட தீவிரமடைந்து கேரளா, கர்நாடகா மாநிலங்களில் வெள்ள சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. கேரளாவில் 27 அணைகளும், கர்நாடகாவில் மிக முக்கியமான அணைகளான கேஆர்எஸ், கபிணி அணைகளும் நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கேரளாவில் 5 மாவட்ட மக்கள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுபோன்ற அசாதாரண சூழ்நிலை ஏற்படும் போதுதான் அரசு நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்கிறது. முன்கூட்டியே எந்த பாதுகாப்பு நடவடிக்கையும் எடுப்பதில்லை. தண்ணீர் வீணாவதை தடுக்க தரிசு நிலங்களில் கூடுதலாக எவ்வளவு புதிய ஏரி, குளங்கள் அமைக்க முடியும். அதன்மூலம், புதிய பாசன பகுதிகளை ஏற்படுத்த முடியும் என்பதை திட்டமிட்டு அரசு செய்ய முன்வர வேண்டும். இதனால் பெரும்பகுதி மழைநீர் சேகரிக்கப்பட்டு நிலத்தடி நீர்மட்டம் உயரும்.

அதேநேரம், ஆற்றின் போக்கில் ஆண்டுதோறும் தண்ணீர் செல்லவும், நீர்வாழ் உயிரினங்கள் உயிர் பாதுகாப்பு பெறவும் வழி ஏற்படும். திட்டமிடுதலும், செயல்பாடும் இப்போதைய உடனடி தேவையாகும். சரியான நீர் சேமிப்பு திட்டங்கள் இல்லாத காரணத்தால் மீண்டும் வறட்சி நிலைக்கு தள்ளப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட துறை நிபுணர்களின் ஆலோசனையை பெற்று நீர் மேலாண்மையை சரிவர கையாள வேண்டும். அடுத்து வரும் வடகிழக்கு பருவமழைக்காக அரசு சார்பில் எந்த திட்டமிடலும் இருப்பதாக தெரியவில்லை. 10 அல்லது 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை அசாதாரண மழை பொழிவு ஏற்படுகிறது. இயற்கையின் அருட்கொடையான மழைநீரை கையாள விஞ்ஞானப்பூர்வமான திட்டமிடல் அவசியம்.

இதனால், சேதத்தை தவிர்க்க முடியும் என்கின்றனர் விவசாயிகள். இதுகுறித்து விவசாயி கோபாலகிருஷ்ணன் கூறுகையில்,`மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து வரும் தண்ணீரின் அளவை கணக்கிட்டு, புதிய நீர்நிலைகளை உருவாக்குவது குறித்து சிந்திக்க வேண்டும். ஏற்கனவே உள்ள ஆற்றின் போக்கில் எத்தனை இடங்களில் தடுப்புணை கட்ட முடியும். சமவெளி பகுதியில் இருந்து ஆற்றில் கலக்கும் ஓடைகளின் குறுக்கே புதிதாக எத்தனை குளங்களை அமைக்க முடியும் என திட்டமிட்டு பாதிப்பு ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Tags :
× RELATED அமராவதி பூங்காவில் தென்னை மரங்கள், சிற்றுண்டிச்சாலை பொது ஏலம்