×

40+ ஆண்கள்… ஹெல்த் கைடு!

நன்றி குங்குமம் டாக்டர்

40 வயதினிலே...


‘என்னாப்பா இது! 40 வயசுலயே ஹார்ட் அட்டாக்ல இறந்துட்டாரா’, ‘40 வயசுலயே கல்லீரல் சிதைஞ்சுபோச்சா?’ என்ற உரையாடல்கள் இப்போதெல்லாம் சாதாரணம். மது, புகைப் பழக்கம் காரணமாக, கல்லீரல் சிதைவு, இதய நோய்கள், புற்றுநோய், ஸ்ட்ரோக், உயர் ரத்த அழுத்தம் என 40 வயது மரணங்களின் அதிகரிப்பு நம்மை நிலைகுலையச் செய்கின்றன. வாழ்க்கையின் இரண்டாம் இன்னிங்ஸ் 40 வயதுக்குப் பிறகுதான். இயற்கையிலேயே 40 வயதில் உடல் மற்றும் மனதளவில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும். உடல் நலனில் அக்கறையோடு பக்குவமாக இருந்தால், நாற்பதிலும் நலம்தான்!

40+ஆண்கள்

உடல் அளவில், 15 வயதில் மது மற்றும் சிகரெட் பழக்கம் ஆரம்பித்தவர்களுக்கு, 40 வயதில்தான் அதன் வீரியம் புரியும். 20-25 வருடங்கள் தொடர்ந்து மது அருந்தியதன் விளைவு, கல்லீரல் சிதைவடைய ஆரம்பிக்கும். கண் பார்வை மங்கும். நோய் எதிர்ப்புச் சக்தி பெருமளவு குறையும். தொப்பை வரும். நுரையீரல் செயல்திறன் குறையும். சிலருக்கு நுரையீரலிலும், தொண்டையிலும் புற்றுநோய் செல்கள் வளர ஆரம்பிக்கும். மது மற்றும் புகைப்பிடித்தல் ஆகிய இரண்டு பழக்கமும் இருந்தால், உணவுக் குழாய் தொடங்கி, மலக்குடல், ஆசனவாய் வரை உள்ள உறுப்புகளில் எதில் வேண்டுமானாலும் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம்.

40 வயதினிலே...

மரபியல் காரணிகளுடன், தவறான உணவுப்பழக்கம் மற்றும் தவறான வாழ்வியல்முறையைப் பின்பற்றும்போது, சர்க்கரை நோய், உடல் பருமன் வந்துவிடும். சர்க்கரை நோயைத் தொடர்ந்து, உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, பக்கவாதம், சிறுநீரகச் செயலிழப்பு போன்ற பல பிரச்னைகள் வரிசை கட்டி நிற்கும்.குடும்பம், குழந்தைகள் என்று செட்டிலாகி, வாழ்க்கையில் ஓர் இலக்கை நிர்ணயித்து, அதை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் காலகட்டம். பிள்ளைகள் ஓரளவுக்கு வளர்ந்திருப்பார்கள்.

இந்த சமயத்தில் பதின் பருவத்தைப் போலவே மிருகத்தனம் தலைதூக்கும். தனது செயல்களை எதிர்த்து யாரும் எந்தக் கேள்வியும் கேட்கக் கூடாது என்ற எண்ணம் இருக்கும். ஈகோ அதிகரிக்கும். யாராவது ஏதாவது  கேள்வி கேட்டுவிட்டால், கேள்வி கேட்ட நபர் மீது மிகுந்த கோபம் ஏற்படும். செக்ஸ் ஆர்வம் அதிகமாக இருக்கும். ஆனால், மனைவியுடனான தாம்பத்திய வாழ்க்கையில் ஈர்ப்பு குறையும். எனவேதான், 40 வயதைத் தாண்டிய சில ஆண்கள், மற்றொரு பெண்ணுடனான உறவு எனப் பாதை மாறுகின்றனர். இவை அனைத்தும் மனதளவில் ஏற்படும் மாற்றங்கள்.

எளிய தீர்வுகள்!

வாழ்க்கை முறையை மாற்றுங்கள். தினசரி அதிகாலை ஆறு மணிக்கு எழுந்து, ஒரு சொம்பு தண்ணீர் பருகுங்கள். அல்லது ஒரு லிட்டர் நீர் பருகுங்கள். தினசரி ஒரு மணி நேரமாவது நடைப்பயிற்சி செய்யுங்கள்.வீட்டுப்பக்கம் ஏதும் ஜிம் இருந்தால், உடனடியாக இணையுங்கள். தினசரி ஒரு மணி நேரம் ஜிம்மில் பாடுபடுவது உங்களின் ஆரோக்கியத்தை அரவணைக்கும். மூன்று வேளையும் தவறாமல் உண்ணுங்கள். எந்த வேலை உணவையும் தவற விடாதீர்கள். அசைவம்தான் பிடிக்கும் என்றோ சைவம்தான் பிடிக்கும் என்றோ பிடிவாதமாய் ஒன்றையே சாப்பிட்டுக்கொண்டு இருக்க வேண்டாம்.

இரண்டையும் கலந்து சாப்பிடுங்கள். சமவிகித உணவே ஆரோக்கியமானது. நீங்கள் உண்ணும் உணவில் கார்போஹைட்ரேட், புரதச்சத்து, கொழுப்புச்சத்து, வைட்டமின்கள், தாது உப்புக்கள், நுண்ணூட்டச்சத்துக்கள் போன்றவை இருக்க வேண்டியது அவசியம்.எனவே, சைவம் அசைவம் இரண்டையும் சாப்பிடுங்கள். சோற்றை குறைவாக்கிவிட்டு காய்கறிகள், கீரைகள், பழங்களைச் சாப்பிடுங்கள்.

மிட் மார்னிங் நேரத்தில் பழச்சாறு அல்லது லெமன் டீ, க்ரீன் டீ குடிக்கலாம். பஜ்ஜி, போண்டா போன்றவற்றைத் தவிர்த்திடுங்கள். மாலை வேளையில் நட்ஸ், சுண்டல், முளைகட்டிய தானியங்களைச் சாப்பிடலாம்.இரவில் அளவாக உண்டுவிட்டு, படுக்கைக்குச் சென்றுவிடுங்கள். நள்ளிரவில் மனதை ரிலாக்ஸாக்க உறங்கும் முன் நல்ல இசையைக் கேட்பது, புத்தகங்கள் வாசிப்பதைச் செய்யலாம்.

பின்னிரவு வரை விழித்திருக்காதீர்கள். வேலை என்றாலும் மறுநாள் செய்வதே நன்று. இரவு நேரம் தூக்கம் கெட்டால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும். சர்க்கரையும் தாக்கக்கூடும். இளம் வயதில் இருந்தே, புகை பிடிப்பது, மது அருந்துவது போன்ற தீய பழக்கங்களைத் தவிர்க்க வேண்டும்.

ஆறு மாதங்களுக்கு ஒருமுறை கொலஸ்ட்ரால் பரிசோதனை, ரத்த அழுத்தப்  பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். குடும்பத்தில் யாருக்காவது சர்க்கரை நோய் இருந்தால், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சர்க்கரை நோய் பரிசோதனை செய்து கொள்ளவும். அனைவருமே ஆண்டுக்கு ஒருமுறை கண் பரிசோதனை மற்றும் கிளைக்கோமா எனப்படும் கண் நீர் அழுத்த நோய்ப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

ஆண்கள், 30 வயதுக்கு மேல் கொலஸ்ட்ரால், ரத்தத்தில் சர்க்கரை அளவு போன்றவற்றைக் கண்காணிக்க வேண்டும்.ஆண்களுக்கு 40 வயதில் வரும் கோபம் இயல்பானது என்பதைப் புரிந்து, டென்ஷனைத் தவிர்த்திடுங்கள்.

குடும்பத்தோடு நேரம் செலவிடுவது அவசியம். குடும்பத்தோடு இணைந்து, உடற்பயிற்சி, செய்வது மன அழுத்தத்தைக் குறைக்கும்.நீங்கள் சம்பாதிக்கிறீர்கள் என்பதால், நீங்கள் என்ன சொல்கிறீர்களோ, அதைத்தான் குடும்பம் கேட்க வேண்டும் என எண்ணாமல், குடும்பத்தில் உள்ளவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளியுங்கள்.

உடற்பயிற்சி, சத்தான உணவுகள், வாழ்வியல் மாற்றம் ஆகியவை மூலம் பெண்கள் நாற்பதில் ஏற்படும் அவதியை தவிர்க்க முடியும்.வரும் முன் காப்போம்!சென்னையில், 40 வயதைக் கடந்தவர்களில் 10 பேரைச் சோதித்தால், நான்கு அல்லது ஐந்து பேருக்குச் சர்க்கரை நோய் இருப்பது உறுதி ஆகிறது. இரண்டு மூன்று மணி நேரம் தொடர்ந்து டி.வி பார்ப்பவர்களுக்கு, ஒரு ஆண்டில் 4.5 கிலோ வரை எடை கூடுகிறது என்கின்றன ஆய்வுகள். இவற்றைத் தடுக்க, வரும் முன் காப்பதே புத்திசாலித்தனம்.

ஆரோக்கியத்தைக் காப்பதில் மூன்று நிலைகள் இருக்கின்றன. சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், நுரையீரல் தொற்று முதலான நோய்களை வரவிடாமல் தடுப்பது முதல் நிலை. சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் போன்றவை இருந்தால், அதைத் தொடர்ந்து இதய நோய்கள், ஸ்ட்ரோக் போன்றவை வராமல் தடுப்பது இரண்டாம் நிலை. மூன்றாவது நிலை அனைத்து நோய்களும் வந்த பிறகு, மருத்துவமனையில் பரிசோதனை செய்துகொண்டு சரியாக சிகிச்சையை எடுத்துக்கொள்வது.

 நம் ஊரில் மூன்றாவது நிலையைப் பின்பற்றுபவர்களே அதிகம். மூன்றாவது நிலைக்கு வரும்போது, உடல் உறுப்புகள் பெருமளவு பாதித்து இருக்கும். மரணபயம் எட்டிப் பார்க்கும். சிகிச்சைக்குப் பெரும் பணம் செலவிட வேண்டியிருக்கும். எனவே, முதல் நிலை இரண்டாம் நிலையிலேயே வரும் முன் காப்பதன் அவசியத்தை உணர்ந்து, விழிப்புணர்வு பெற வேண்டியது அவசியம்.

தொகுப்பு : சரஸ்

Tags :
× RELATED கவுன்சலிங் ரூம்