×

கற்கள் பெயர்ந்து கிடக்கும் கூனிமேடு டானா நகர் சாலை

மரக்காணம், ஆக. 14:   மரக்காணம் ஒன்றியத்திற்கு உட்பட்டது கூனிமேடு ஊராட்சி. இந்த பஞ்சாயத்தில் உள்ளது டானா நகர். இ.சி.ஆரில் இருந்து இப்பகுதிக்கு சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு இணைப்பு சாலை உள்ளது. இந்த டானா நகரைச் சுற்றிலும் எம்.ஜி.ஆர் நகர், மாரியம்மன் கோயில், நளவெண்பா தெரு ஆகியவை அமைந்துள்ளது. இதில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் வசிக்கின்றனர். இவர்கள் அனைவரும் இச்சாலை வழியாகத்தான் மற்ற இடங்களுக்கு செல்லும் நிலை உள்ளது. இதுபோல் பருவ மழைகாலத்தில் அதிகப்படியான மழை பெய்தால் கூனிமேடு பகுதியில் இ.சி.ஆர் சாலையில் தண்ணீர் சூழ்ந்து போக்குவரத்து பாதிக்கப்படும். அப்போது டானா நகர் இணைப்பு சாலை வழியாகத்தான் அனைத்து வாகனங்களும் திருப்பி அனுப்பப்படும்.

இதனால் இச்சாலை இ.சி.ஆர் சாலைக்கு அடுத்தபடியான முக்கிய சாலையாக உள்ளது. இந்த சாலை கடந்த 25 ஆண்டுக்கு முன் தார் சாலையாக இருந்தது. அதன்பிறகு இச்சாலையை பராமரிப்பு செய்யவில்லை என்று பொதுமக்கள் குறை கூறுகின்றனர். இதனால் சாலை தற்போது கற்கள் பெயர்ந்து மண் சாலைபோல் காட்சியளிக்கிறது. இதனால் இவ்வழியாக செல்லும் அனைத்து வாகன ஓட்டிகளும் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து இப்பகுதி பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு
கொடுத்துள்ளனர். ஆனால் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இப்பகுதி பொதுமக்களின் நலன் கருதி இ.சி.ஆர் டானா நகர் சாலையை உடனடியாக சரிசெய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags :
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை