×

கூட்டுறவு தேர்தலை முறையாக நடத்தக்கோரி வங்கிக்கு பூட்டு போட்டு திமுகவினர் ஆர்ப்பாட்டம் சேத்துப்பட்டு, போளூர் அருகே பரபரப்பு

சேத்துப்பட்டு, ஆக.14: சேத்துப்பட்டு, போளூர் அருகே கூட்டுறவு வங்கிக்கு பூட்டு போட்டு திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.சேத்துப்பட்டு அடுத்த மண்டகொளத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க நிர்வாகிகள் தேர்வையொட்டி, திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் சார்பில் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இதில் திமுக சார்பில் வேட்பு மனுதாக்கல் செய்த 37 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, அதிமுகவினர் பரிந்துரை செய்த வேட்பாளர்களின் மனுக்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.இதையடுத்து, வேட்பு மனு பரிசீலனையில் ஏற்கப்பட்டவர்களின் பெயர் பட்டியலை, நோட்டீஸ் பலகையில் ஒட்ட கடந்த 11ம் தேதி தேர்தல் அதிகாரி வங்கிக்கு வந்தார். தகவலறிந்த திமுகவினர் பெயர்பட்டியல் வெளியிடுவதை தடுத்ததால் அதிகாரி திரும்பி சென்றுவிட்டார்.இந்நிலையில், நேற்று காலை 10 மணியளவில் வங்கியை திறக்க வந்த அதிகாரியை திமுகவினர் முற்றுகையிட்டனர். முறையாக தேர்தல் நடத்தக்கோரியும், திமுகவினர் மனுக்கள் எந்த காரணத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது என்பதை தெரியப்படுத்த வலியுறுத்தியும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், வங்கிக்கு பூட்டு போட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, மேலதிகாரியிடம் இதுகுறித்து விசாரித்துவிட்டு வருகிறேன் என்று கூறிவிட்டு சென்ற அதிகாரி மீண்டும் வரவில்லை. இதையடுத்து, திமுகவினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.போளூர்:போளூர் காமராஜ் நகர கூட்டுறவு வங்கியில் தலைவர், துணைத்தலைவர், இயக்குனர்களுக்கான தேர்தலையொட்டி, தேர்தல் அலுவலராக சு.முருகானந்தம் நியமிக்கப்பட்டார். இவர் ஏற்கனவே பரிசீலனை செய்து தயார்நிலையில் உள்ள வேட்பாளர் பட்டியலை கடந்த 11ம் தேதி தகவல் பலகையில் ஒட்டினார். அதனை சிறிது நேரத்தில் யாரோ கிழித்துவிட்டனர்.இதைத்தொடர்ந்து, வேட்புமனு தாக்கல் செய்தவர்கள் நேற்று வங்கியில் தேர்தல் அதிகாரிக்காக காத்திருந்தனர். மாலை வரை தேர்தல் அலுவலர் வராததால் ஆத்திரமடைந்த திமுகவினர் வங்கிக்கு பூட்டு போட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த போளூர் சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சமாதானப்படுத்தினர். பின்னர், கூட்டுறவு துணைப் பதிவாளர் மாதவியிடம் போனில் பேசினர். பின்னர், காமராஜ் நகர கூட்டுறவு வங்கி தேர்தல் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

Tags :
× RELATED அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே...