×

அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் சிறப்பாசிரியர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு 133 பேர் பங்கேற்பு

வேலூர், ஆக.14:அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள், ஆதிதிராவிடர் நலத்துறை, வனத்துறை பள்ளிகளில் காலியாக உள்ள சிறப்பாசிரியர் பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்புப்பணி வேலூர் வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.தமிழக அரசுப்பள்ளிகளில் சிறப்பாசிரியர்கள் இதுவரை வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையிலேயே நியமிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் போட்டித்தேர்வுகள் மூலம் இப்பணியிடங்களை நிரப்ப பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது. அதன்படி, மாநிலம் முழுவதும் அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள், ஆதிதிராவிடர் நலத்துறை, வனத்துறை, பழங்குடியினர் நலத்துறை, மாநகராட்சி, நகராட்சி உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் தையல், ஓவியம், இசை, உடற்கல்வி பாடப்பிரிவுகளில் 1,325 சிறப்பாசிரியர்களை நேரடி நியமனம் மூலம் நியமிக்க கடந்த ஆண்டு செப்டம்பர் 23ம் தேதி போட்டித்தேர்வு நடத்தப்பட்டது.

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடந்த இந்த தேர்வில் 25,781 பேர் கலந்து கொண்டனர். தேர்வு முடிவுகள் கடந்த ஜூலை மாதம் 27ம் தேதி வெளியானது. இதில் 2,845 பேர் ஒரு காலி பணியிடத்துக்கு 2 பேர் என்ற அடிப்படையில் தகுதி பெற்றனர். இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு அனைத்து மாவட்டங்களிலும் ஆகஸ்ட் 13ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு அதற்கான கடிதங்களும் தேர்வர்களுக்கு ஆன்லைன் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
வேலூர் மாவட்டத்தில் வேலூர் வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சிறப்பாசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்புப்பணி நேற்று காலை 10 மணியளவில் தொடங்கியது. இப்பணியை முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் தொடங்கி வைத்தார். இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 133 பேர் கலந்து கொண்டனர். சான்றிதழ் சரிபார்ப்பில் கல்விச்சான்றிதழ்கள், சாதி சான்று, வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அட்டை ஆகியவை ஆய்வு செய்யப்பட்டன.

சான்றிதழ் சரிபார்ப்பில் முக்கிய அம்சமாக வேலைவாய்ப்பு பதிவு மூப்பு கருத்தில் கொள்ளப்பட்டது. இதில் பதிவு மூப்பு காலத்துக்கு ஏற்ப மதிப்பெண் அளிக்கப்படும் என்றும், அதிகபட்சமாக 5 மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்ததும், எழுத்துத்தேர்வு மதிப்பெண், இடஒதுக்கீடு அடிப்படையிலான மெரிட் பட்டியல் தயாரிக்கப்பட்டு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் வெளியிடப்படும். இந்த பட்டியலின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு கலந்தாய்வு நடத்தப்பட்டு பணி நியமன ஆணை வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags :
× RELATED சர்ச் பாதிரியார் அதிரடி கைது மதமாற்றம் செய்ய முயன்றதாக பெண் புகார்