ஊட்டச்சத்து, ரத்த சோகையை தடுக்க 12 லட்சம் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள்

சேலம், ஆக.13:உலக சுகாதார நிறுவனத்தின் கணக்கின்படி, இந்தியாவில் அதிக அளவிலான குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் 50 சதவீதம் பேர் உடற்வளர்ச்சி குன்றியும், 43 சதவீதம் பேர் எடை குறைவாகவும் உள்ளனர். நாட்டில் 1 முதல் 14 வயதுடைய குழந்தைகளில் 24.1 கோடி பேர் குடற்புழு தொற்று ஏற்படக்கூடிய அபாய நிலையில் உள்ளனர். இதனை தடுக்க, ஆண்டுதோறும் இரு தவணைகளில் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநர் பூங்கொடி கூறியதாவது: குடற்புழு தொற்றினால் குழந்தைகளின் உடல் மற்றும் மனவளர்ச்சி பாதிக்கிறது.

பெண்களுக்கு எல்லா விதமான ஊட்டச்சத்து குறைபாடு, சோர்வு, பசியின்மை, வயிற்றுவலி, வயிற்றுப் போக்கு, குமட்டல், வாந்தி மற்றும் கர்ப்ப காலத்தில் ரத்த சோகையும், கர்ப்பத்தில் சிக்கலும் ஏற்படுத்துகிறது. ஆண்களுக்கு வேலை மற்றும் வருமானம் ஈட்டும் திறனை குறைகிறது. குடற்புழு தொற்றினால் பாதிக்கப்பட்ட நபர்கள் திறந்த வெளியில் மலம் கழிக்கும் போது, புழுக்களின் முட்டைகள் மண்ணில் கலந்து வளர்கின்றன. அசுத்தமான கைகள், சுகாதரமற்ற உணவுகள் உட்கொள்ளுதல், தோலின் வழியாக புழுக்கள் உடலினுள் செல்லுதல், குழந்தைகள் காலணிகள் அணியாததால் தோலின் வழியாகவும் இப்பாதிப்பு பரவுகிறது.

கழிவறைகளை பயன்படுத்துதல், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்தல், சுத்தமான குடிநீர் பருகுதல், காய்கறி பழங்களை கழுவிய பின் உட்கொள்ளுதல், காலணிகளை அணிதல், உணவுக்கு முன், பின் மற்றும் கழிவறையைப் பயன்படுத்திய பின் சோப்புப்போட்டு கைகளை கழுவுதல் போன்றவற்றால் இதனை தவிர்க்கலாம். நாடு தழுவிய அளவில், 6 மாதத்திற்கு ஒரு முறை குடற்புழு நீக்க நாள் திட்டம் அனுசரிக்கப்படுகிறது. அதன்படி இரண்டாம் சுற்றாக, கடந்த 10ம் தேதியிலிருந்து 1 முதல் 19 வயதுக்குட்பட்டவர்களுக்கு ‘அல்பெண்டசோல்’ எனும் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படுகிறது.

விடுபட்டவர்களுக்கு வரும் 17ம் தேதி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில், 11,96,326 குழந்தைகளுக்கு இந்த மாத்திரைகள் வழங்க திட்டமிடப்பட்டது. அனைத்து துறைகளைச் சார்ந்த 6,864 பணியாளர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே விடுபட்டிருந்தால், பொதுமக்கள் தங்களது குழந்தைகளுக்கு மாத்திரைகளை வழங்கி, ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு துணை இயக்குநர் பூங்கொடி தெரிவித்தார்.

Related Stories: