×

கோம்பை மலையடிவாரத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் தொடர் மழை தடுப்பணைகள் நிரம்புவதால் நிலத்தடி நீர்மட்டம் உயர்கிறது

உத்தமபாளையம், ஆக. 13: கோம்பை மலையடிவாரத்தை ஒட்டி உள்ள நிலங்களில் கட்டப்பட்டுள்ள 400க்கும் மேற்பட்ட தடுப்பணைகள் தற்போது பெய்யும் மழையினால் நிரம்பி வருகிறது.கோம்பை மேற்குதொடர்ச்சி மலையடிவாரத்தை ஒட்டி பல ஆயிரக்கணக்கான ஏக்கர் மானாவாரி நிலங்கள் உள்ளன. தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை, கோடை மழை காலங்களில் பெய்யக்கூடிய மழையினால் நிலத்தடி நீர்மட்டம் உயரும்போது இங்கு பெரியளவில் விவசாயம் நடைபெறும்.இக்காலங்களில் அதிகளவில் காய்கறிகள், மானாவாரி மொச்சை, பாசிப்பயிறு, தட்டை, உள்ளிட்ட பயிர்களும், தக்காளி, மொச்சை, கம்பு, சோளம் உள்ளிட்ட பயிர்களும் விளையும். கடந்த 1996-97 காலகட்டத்தில் தமிழகத்தில் கருணாநிதி முதல்வராக இருந்தார். அப்போது இங்குள்ள விவசாயிகள் கோம்பை மலையடிவாரத்தை ஒட்டி உள்ள நிலங்களில் அதிகளவில் தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.அப்போதைய கலெக்டர் சத்தியகோபால் கோம்பை விவசாயிகளின் கோரிக்கையை கருணாநிதியிடம் கொண்டு சென்றார். இதையடுத்து வால்கரடு, செங்கதுரை உள்ளிட்ட இடங்களில் 8 மீட்டரில் தடுப்பணைகள் கட்டப்பட்டன. அப்போதே பல லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கு அடுத்தபடியாக கருணாநிதி அரசில் பொதுமக்கள் பங்களிப்போடு நமக்கு நாமே திட்டம் கொண்டு வரப்பட்டது. இதில் அரசும், பொதுமக்களும் இணைந்து நிதியை பகிர்ந்து தடுப்பணைகள் கட்டினர்.

கோம்பை சேர்மன் ராமராஜ் அப்போது இதற்கான முயற்சியில் தீவிரம் காட்டியதால் 250 தடுப்பணைகள் கட்டப்பட்டன. முன்னாள் சேர்மன் செல்வராஜ் உள்ளிட்ட விவசாயிகள், கோம்பை விவசாயிகள் சங்கம், முழுஒத்துழைப்பு அளித்தனர். இந்த தடுப்பணைகள் வனத்துறை, வேளாண்மை, பொறியியல்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மூலம் கோம்பை, கரியணம்பட்டி, பண்ணைப்புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மேற்குதொடர்ச்சி மலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்போது 440 தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. அதிகமான நிதி தி.மு.க. ஆட்சிக்காலத்தில் ஒதுக்கப்பட்டது. தற்போது மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் மழை கொட்டி வருகிறது. இதனால் தடுப்பணைகள் நிரம்பி வருகின்றன. இது விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.

வனக்குழு தலைவரும், கோம்பை முன்னாள் சேர்மனுமான ராமராஜ் கூறுகையில், 1996-97 காலகட்டத்தில் அதிகளவில் மேற்கு தொடர்ச்சி மலை அபிவிருத்தி திட்டம், மற்றும் பல்வேறு நிதிகள் பெறப்பட்டு தடுப்பணைகள் அதிகளவில் கட்டப்பட்டன. சாட்டிலைட் மூலம் தடுப்பணை கட்டுவதற்கு சாத்தியமான இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. இதனால் 250 தடுப்பணைகள் தனியாகவும், கருணாநிதி ஆட்சியில் பெயர் சொல்லும் அளவிற்கு சிறப்பான நமக்கு நாமே திட்டத்தின் மூலம் கோம்பை நிலத்தடி நீர்மட்டம் உயர தடுப்பணைகளும் கட்டப்பட்டன. இப்போது இவை நிரம்பி வருவது பெரும் மகிழ்ச்சியை தருகிறது’ என்றனர்.கருணாநிதி பெயர் சொல்லும் நமக்கு நாமே நமக்கு நாமே என அழைக்கப்படும் திட்டங்கள் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் பெரும் வரவேற்பை பெற்றது. இதனால் கிராமங்களில் பல்வேறு அடிப்படை கட்டமைப்பு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. தடுப்பணைகள், பாலங்கள், கட்டப்பட்டன. கோம்பையில் இன்று பெருமளவில் தடுப்பணைகள் நிரம்பி உள்ளன. கருணாநிதி ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட தடுப்பணைகளால் நிலத்தடி நீர்மட்டம் வீணாகாமல் சேகரிக்கப்பட்டுள்ளது. மறைந்தாலும் அவர் பெயர் சொல்லும் திட்டங்களால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



Tags :
× RELATED தேனி புதிய பஸ்ஸ்டாண்டில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்பு