×

காலி குடங்களுடன் ஊராட்சி அலுவலகம் முற்றுகை

அவிநாசி, ஆக.7: சீரான குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் நடுவச்சேரி ஊராட்சி அலுவலகத்தை பெண்கள் நேற்று முற்றுகையிட்டு காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அவிநாசி ஒன்றியம் நடுவச்சேரி ஊராட்சி புதுக்காலனியில் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு, கடந்த 6 மாதங்களாக சீரான குடிநீர் வசதி இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந் நிலையில், ஏற்கனவே போடப்பட்டுள்ள போர்வெல் கிணற்றில் மின் மோட்டார் பொருத்தாமல் ஊராட்சி நிர்வாகம் காலம் தாழ்த்தி வருகிறது.குடிநீர் சீராக வினியோகம் செய்யப்படுவதில்லை. அவ்வாறு வழங்கினாலும், சில பகுதிகளில் உள்ள குடிநீர் குழாய்களுக்கு செல்வதில்லை. இதனால், அப்பகுதி மக்கள்  குடிநீரை விலைக்கு வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், தெருவிளக்கு வசதி இல்லாமல் இரவு நேரங்களில் தனியாக செல்லும் பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, புதுக்காலனியில் மின் மோட்டார் பொருத்தி, குடிநீரை முறையாக வினியோகம் செய்ய வேண்டும். பழுதடைந்த தெருவிளக்குகளை உடனடியாக சரி செய்ய வேண்டும்.  தேவையான இடங்களில் புதிய விளக்குகள் அமைத்து தரவேண்டும் என வலியுறுத்தி,   சிபிஎம்., சார்பில் கிளை செயலாளர் சுப்பிரமணியன் தலைமையில் கிராம பெண்கள் நடுவச்சேரி ஊராட்சி மன்ற அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து வந்த அவிநாசி வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன், சேவூர் போலீசார், முற்றுகையில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சீரான குடிநீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Tags :
× RELATED அமராவதி பூங்காவில் தென்னை மரங்கள், சிற்றுண்டிச்சாலை பொது ஏலம்