செரிமானத்தை சரியாக்கும் 7 உணவுகள்..!

நன்றி குங்குமம் டாக்டர்

இஞ்சி

நம் உடலில் சுரக்கும் மூன்று திரவங்கள், செரிமானத்துக்கு முக்கியமானவை. எச்சில் (Saliva), செரிமான அமிலம் (Hcl), கல்லீரலில் சுரக்கும் நொதியான பைல் (Bile). இந்த மூன்று திரவங்களின் சுரப்பையும் இஞ்சி ஊக்குவிக்கும்.இஞ்சி, ஜிஞ்சரால் (Gingerol) என்னும் எண்ணெய் கொண்டது. இது, வயிற்றில் செரிமான அமிலம் உணவைக் கரைக்கும்போது வெளிப்படும் வாயுவை வயிறு, குடல், உணவுக்குழாயில் தேங்கவிடாமல் ஏப்பம் மூலமாக வெளியேற்றுகிறது.இஞ்சி கலந்த வெந்நீரை தினமும் காலை மாலை இருவேளையும் குடிக்கலாம். சாப்பிட்டு ஒரு மணி நேரம் கழித்து பால் சேர்க்காத இஞ்சி டீ குடிக்கலாம். இதனால் செரிமானம் எளிதாகும்.

புதினா

சூயிங் கம் (mint chewing gum), புதினா கேப்ஸ்யூல் என அமெரிக்கர்கள் புதினாவை செரிமானக் கோளாறை சரிசெய்யும் உணவாகப் பயன்படுத்தி வருகின்றனர். நம்மூரில் அசைவ உணவுகள், ரசம் ஆகியவற்றில் செரிமானத்தை எளிதாக்க புதினா அதிகமாகப் பயன்படுத்தப்பட்டுவருகிறது.

புதினா, வயிற்றுக்கும் உணவுக்குழாய்க்கும் இடையில் உள்ள ஸ்பிங்டர் சதையை (Sphincter muscle) ரிலாக்ஸ் செய்கிறது. இதனால் சாப்பிட்டவுடன் மலம்கழிக்கத் தூண்டும் ‘இரிட்டபுள் பௌல் சிண்ட்ரோம்’ தடுக்கப்படுகிறது.மலக்குடலில் அமைந்திருப்பது ‘TRPM8’ என்னும் புரோட்டீன். இது, காரசாரமான மசாலா உணவுகளை உண்டு, அவை செரிமானமாகி, மலக்குடலில் பயணிக்கும்போது ஏற்படும். வலி மற்றும் எரிச்சலைப் போக்க உதவும். மசாலா உணவுக் கழிவுகள் மலக்குடலில் பயணிக்கும்போது இயல்பாகவே TRPM8, தனது வேலையைத் தொடங்கிவிடும்.  

புதினாவை உணவில் சேர்ப்பதால், இது தூண்டப்படும். இதனால் வாயுபிடிப்பு, வலி, எரிச்சல், புளிப்பு ஏப்பம் உள்ளிட்ட சிரமங்கள் இல்லாமல் நாம் சாப்பிடும் உணவு எளிதில் செரிமானமாகிவிடும்.​​​​​​​

லவங்கம் (Cloves)

இந்தோனேஷியாவின் மலுக்கா தீவுகளில் பிரபலமான லவங்கம், பின்னர், சீனா, கிழக்கு ஆப்பிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் பிரபலம் அடையத்தொடங்கியது. முதலில் சமையலில்  சுவை, வாசனைக்காக உலகநாடுகளால் பயன்படுத்திவந்த லவங்கம், அதன் மருத்துவப் பலன்களால் புகழ்பெறத் தொடங்கியது. குறிப்பாக, இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்டுகள் செரிமானத்துக்கு உதவுகின்றன. லவங்கம், செரிமான அமிலத்தால் வெளியாகும் வாயுவின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. இதனால் வாயுப்பிடிப்பு, வயிற்று உப்புசம், குமட்டல் உணர்வு (Nausea) நீங்கும். செரிமான நொதிகள் தயாரிப்பை ஊக்குவிக்கும்.

ஓமம் (Carom Seeds)

கிழக்கு இந்தியாவில் பயிரிடப்பட்ட ஓமச் செடி, அதன் அசிடிட்டி, செரிமானக் கோளாறு ஆகியவற்றைப் போக்கும் தன்மையால், இந்தூர், ஆந்திரப் பிரதேசம் ஆகிய பகுதிகளில் அதிகமாகப் பயிரிடப்படுகிறது. ரஸ்க் உள்ளிட்ட, தின்பண்டங்களில் சேர்க்கப்படுகிறது.  ஓமத்தில் உள்ள தைமோல் (Thymol) பீனால், செரிமான நொதிகள் தயாரிப்பை ஊக்குவிக்கிறது. அரை டீஸ்பூன் ஓமத்தை, ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்கவைத்து, அது அரை டம்ளராக ஆகும் வரை சூடாக்கி, தினமும் காலை, மாலை பருகிவந்தால், வயிற்று மந்தம் குணமாகும்.  

சீரகம் (Cumin)

இரும்பு, கால்சியம், பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின்கள், ஆன்டிஆக்ஸிடன்டுகள் உள்ள மூலிகைச் செடி சீரகம். மசாலா உணவுகள், பிரியாணி, அசைவ ரெசிபிக்களில் சுவை, மணம் கூட்டவும், செரிமானத்தை எளிதாக்கவும் பயன்படுத்தப்படுகிறது.இரைப்பை அலர்ஜியை குணமாக்குகிறது; நுண்தொற்றுக்களிடம் இருந்து இரைப்பையின் உட்பகுதியைப் பாதுகாக்கிறது.

நாள்பட்ட செரிமானக் கோளாறால், மலக்குடலில் ஏற்படும் ரத்தக்குழாய் வீக்கத்தைத் தடுக்க உதவுகிறது.

வெந்தயம் (Fenugreek)

ராஜஸ்தான் மாநிலத்தில் அதிகம் விளையக்கூடிய மூலிகைச் செடி வெந்தயம். வைட்டமின்கள் ஏ, சி, கே, கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம், ஃபோலிக் அமிலம் அதிகம் உள்ளது. கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கும். ஆன்டிஆக்ஸிடன்டுகளும் நார்ச்சத்தும் அதிகம் உள்ளதால், நாம் சாப்பிடும் அசைவ உணவுகளில் உள்ள நச்சுத்தன்மையை நீக்க உதவுகிறது. வெந்தையத்தை அப்படியே சாப்பிடுவதைவிட, இரவு தண்ணீரில் ஊறவைத்து, அதிகாலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.    

வெந்நீர்

சாப்பிட்டவுடன் குளிர்ச்சியான தண்ணீர் பருகுவதால், உணவில் கலந்துள்ள எண்ணெய் இறுகுகிறது. இதனால் செரிமானம் தாமதப்படுகிறது. இதனைத் தவிர்த்துவிட்டு, சாப்பிட்டவுடன், சிறிதளவு மிதமான சூடுள்ள நீர் பருகினால், உணவுப் பொருட்கள் எளிதில் உடையும்.

கடினமான அசைவ உணவுகளில் உள்ள நச்சுத்தன்மையை நீக்க உதவுகிறது வெந்நீர். இரவு உணவுக்குப் பின்னர், வெந்நீர் பருகுவதால், சிறு மற்றும் பெருங்குடல் செயல்பாடு தூண்டப்படுகிறது. அதனால், மலம் இளகி, மலச்சிக்கல் நீங்கும். வயிற்று வலி, உப்புசத்தைத் தடுக்கும்.

தொகுப்பு : இளங்கோ

Related Stories: