மனம் எனும் மாயலோகம்!

நன்றி குங்குமம் டாக்டர்

உணர்ச்சிவசப்பட்டு சாப்பிடுதல்

உங்களுக்கோ உங்கள் நெருங்கிய வட்டத்தில் இருப்பவர்களுக்கோ இத்தகைய ஸ்ட்ரெஸ் ஈட்டிங் (Stress Eating) பழக்கம் இருந்தால் எப்படி இயல்புக்கு மீள்வது என்று வழிமுறைகளைத் தேட வேண்டும். தீர்வுகள் நோக்கி முதல் அடி எடுத்து வைக்க வேண்டும்.

1 முதலில் ஒரு சுய அலசல் செய்யுங்கள். சமீப நாட்களில் உங்கள் உடல் எடையில் அசாதாரண மாற்றங்கள் இருக்கிறதா என கவனம் செலுத்துங்கள். உணவுப் பழக்கங்களில் ஏதேனும் மாற்றங்கள் உருவாகி உள்ளதா எனக் கவனியுங்கள்.மனநிலையில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறதா என்பதை ஆராயுங்கள். நெருங்கிய வட்டத்தில் உள்ள நண்பர்களிடம் தேவைப்பட்டால் இதனைப் பற்றி உரையாடுங்கள்.

2 ஒருவேளை மாற்றங்கள் இருக்கிறதென தெரியவந்தால், எவ்விதமான சூழலில் அதிக உணவு சாப்பிடுகிறீர்கள் அல்லது எவ்விதமான மனநிலையின் போது அதிகமாக உண்ணுவதற்கு உந்தப்படுகிறீர்கள் என்பதைப் பகுத்தறியுங்கள். பொதுவாக உங்களை எந்த காரணிகள் ஸ்ட்ரெஸ்க்கு உள்ளாக்குகின்றன என்பதைப் பட்டியலிட்டால் சுலபமாக இதனைக் கண்டறியலாம். துக்கம், சந்தோஷம், போர் (bore) அடிப்பது போன்றக் காரணங்கள்கூட இருக்கலாம். சிலர் வார விடுமுறை நாட்களில் வீட்டில் அதிக நேரம் இருக்கும் போதோ, டி.வி பார்த்துக்கொண்டோ, லேப்டாப் போன் பார்த்துக்கொண்டோ, பொழுது போகாமல், எதையாவது சாப்பிடுவதை பழக்கமாக்கிக்கொண்டிருப்பார்கள். எனவே, எப்போது எந்த மனநிலையில் அதிகமாக உண்ணுகிறீர்கள் என்பதைக் கண்டுகொண்டால், அதனை கையாள்வது சுலபம்.

3 இப்போது காரணிகளைத் தெரிந்துகொண்டாயிற்று. அடுத்து, அந்த காரணிகளால் தூண்டப்படும் போது, விழிப்புடன் அதனைக் கையாள வேண்டும். அதற்கான நேர்மறையான மாற்றுவழியை முன்னரே நாம் ஏற்பாடு செய்துவிடுவது நலம். ஸ்ட்ரெஸாக இருக்கும்போது போனிலிருக்கும் ஆப் களில் இஷ்டத்திற்கு ஏதாவது ஆர்டர் செய்து சாப்பிடுகிறீர்கள் என்றால் அவற்றை போனிலிருந்து நீக்கிவிடுங்கள். வீட்டில் வாரம் ஒருமுறை ஸ்னாக்ஸ் வாங்கி ஸ்டாக் செய்வீர்கள் என்றால் அதனையும் நிறுத்திவிடுங்கள். இப்படி உங்களுடைய தனிப்பட்ட பழக்கத்திற்கு ஏற்றவாறு வழி கண்டுபிடியுங்கள்.

4 உள்முகமாக உங்கள் உடல் மீது கவனமுடன் இருக்கும் போது, அதன் மொழிகளை நன்கு புரிந்துகொள்வீர்கள். உண்மையான பசிக்கும், உணர்வுகளால் எழும் உந்துதலுக்குமான வித்தியாசங்களை கவனிக்க முடியும். கீழே உள்ள இந்தக் குறிப்புகள் உங்களுக்கு உதவும்.

உண்மையான பசியின் அறிகுறிகள்:

உண்மையான பசி வயிற்றுப் பகுதிகளில் உருவாகும்.  உணவு சாப்பிட வேண்டும் என்ற தேவை மெல்ல மெல்ல உருவாகும். பொதுவாக காலை மதியம் இரவு என நாம் வழக்கமாக உணவு உண்ணும் நேரத்தில் வரும். உணவுகள் சாப்பிட்டதும் பசி அடங்கிவிடும்.

உணர்வுகளால் உந்தப்படும் அறிகுறிகள்:

அந்த உந்துதல் வயிற்றுப் பகுதியிலிருந்து வருகிறதா என்பதை நீங்கள் குறிப்பாகக் கண்டறிய முடியாது.Stress அல்லது துக்கம் போன்ற உணர்ச்சிகளால் தோன்றுவது.திடீரென எதிர்பாராத சமயத்தில் வருவது.அப்படி எழும்போது, உணவுக்கான தேடலாக இல்லாமல் அதிக இனிப்புச் சுவை மற்றும் உப்புச்சுவைக்கான urge ஆக இருக்கும்.

சாப்பிட்டாலும் அடங்காத உணர்வாக இருக்கும். இத்தகைய வேறுபாடுகளை புரிந்துகொண்டு அந்த urge களை கையாள வேண்டும்.

5 ஒரு குறிப்பேட்டில் என்னென்ன சாப்பிடுகிறோம் என்பதை ஒவ்வொரு நாளும் எழுதிக் கொண்டே வாருங்கள். இவ்வாறு செய்யும் போது, எதை எல்லாம் சாப்பிடுகிறோம் என்று நீங்கள் விழிப்புணர்வுடன் அதை மேற்பார்வையிட முடியும். இதற்கு சில ஆப்களும் உள்ளன. அவற்றையும் பயன்படுத்தலாம்.

6 உணர்வுகளை சரியாக கையாளத் தெரியாமல் இத்தகைய எமோஷனல் ஈட்டிங் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்கின்றனர் என்பதைப் பார்த்தோம்.

எனவே குறிப்பேட்டில் எழுதும் போது, சாப்பிடும் போது நீங்கள் எந்தவிதமான மனநிலையில் இருந்தீர்கள் என்பதையும் குறிக்கலாம். அல்லது தனியாகவே இந்த மனநிலை குறிப்பேட்டை(mood log) எழுதலாம். தினமும் நான்கு முறை என குறிப்பிட்ட நேரம், உங்களுடைய உணர்வுகளை அதில் (துக்கம், மகிழ்ச்சி, கோபம் etc) பதிவு செய்ய வேண்டும். அந்த உணர்வுகளால் உடலில் மாற்றங்கள் ஏதாவது நிகழ்கிறதா என்பதையும் குறிக்க வேண்டும். அந்நேரத்தில் உங்களுக்கு எத்தகைய உணவு சாப்பிட வேண்டும் என்ற urge எழுகிறது என்பதையும் எழுதிக்கொள்ளலாம்.

இவ்வாறு நம் கண்முன் பதிவுகள் இருக்கும் போது அதனை கண்காணிப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் வழி கிடைக்கும்.

7 மனதின் உணர்ச்சிகளை உள்ளே அழுத்திக் கொள்ளாமல் அதனை முறையாக வெளிக்காட்ட வேண்டும். ஏனெனில் அழுந்தப்பட்டவை காலப்போக்கில் வேறு பிரச்சனைகளாக வெடிக்கக்கூடும். மன அழுத்தம் போன்றவற்றை சரியாக கையாளும் வழிமுறைகளை கண்டடைய வேண்டும். ப்ரியமானவர்களிடம் மனம் விட்டு பேசலாம். உங்கள் உணர்ச்சிகளை எழுதலாம்.நல்ல பொழுது போக்குகள்- உதாரணத்திற்கு இசை கேட்பது, கைவினைப் பொருட்கள் செய்வது என ஈடுபடலாம்.

விளையாட்டும் உடல்பயிற்சியும் உடலுக்கு மட்டுமல்ல மனத்திற்கும் நல்விளைவுகள் ஏற்படுத்தும்.உங்களால் இந்தப் பிரச்சனைகளை நேர்மறையாகக் கையாள முடியவில்லை எனில் ஒரு மனநல நிபுணரை அணுக வேண்டும். அவர் சரியாக வழிகாட்டுவார்.

8 இதற்கான சிகிச்சை எடுத்துக் கொள்வதால் மட்டுமே நிரந்தரமான பலன்களை அடைய முடியும். ஏனெனில் சில சமயம் உங்கள் உளவியல் சக்தி மட்டுமே போதாது. இதனை கையாள ஒரு கொள்கைத் திட்டம் (Strategic plan) தேவை. எத்தகைய காரணிகளால் எமோஷனல் ஈட்டிங் தூண்டப்படுகிறது, உங்கள் உணர்வுகளை கையாள்வது, இதனை வெல்ல புதிய பழக்கங்களை (coping skills) தோற்றுவித்துக்கொள்வது - இவற்றை எல்லாம் மனநல நிபுணர் நெறிப்படுத்துவார்.

ஒருவேளை இந்தப் பழக்கம் உள்மறைந்திருக்கும் டிப்ரசன், ஆங்ஸிட்டி போன்ற மனநலக் குறைபாடுகளின் காரணமாக எனில் அதனைக் கண்டுபிடிக்கவும், அதற்கான சிகிச்சைகளுக்கும் வழிகாட்டுவார். எனவே தக்க சிகிச்சை மேற் கொண்டால் இதிலிருந்து மீளமுடியும் என நம்பிக்கையுடன் அணுகுங்கள்.

Related Stories: