ஆர்த்ரைடிஸ் vs ஆஸ்டியோபொரோசிஸ் ஒரு பார்வை!

நன்றி குங்குமம் டாக்டர்

மூட்டுவலி (ஆர்த்ரைடிஸ்), எலும்பு வலுவிழப்பு நோய் (ஆஸ்டியோபொரோசிஸ்) இரண்டும் ஒருவரின் எலும்புகளை பாதிக்கும் நீண்ட கால, நாள்பட்ட நோய் நிலைகள். மூட்டுவலி என்பது மூட்டுகளில் வீக்கத்தை ஏற்படுத்தும் ஒரு நோயாகும். மாறாக, எலும்பு வலுவிழப்பு நோய் (ஆஸ்டியோபொரோசிஸ்) எலும்பு தாது அடர்த்தி குறைவதன் அடிப்படையில் வரையறுக்கப்படுகிறது. எலும்பு வலுவிழப்பு நோயை, மூட்டுவலியின் ஒரு வகையான மூட்டழற்சியுடன் (ஆஸ்டியோ ஆர்த்ரிடிஸ்) மக்கள் அடிக்கடி குழப்பிக்கொள்கிறார்கள்.

எலும்பு வலுவிழ்ப்பு நோய் காரணமாக எலும்பு முறிவு, எலும்பு உடைதல் அல்லது சேதமடைய அதிக வாய்ப்புள்ளது. மூட்டுவலி என்பது விறைப்புத்தன்மை, வலி, உடல் இயக்கநிலையின் வரம்பைக் குறைத்தல், பாதிக்கப்பட்ட மூட்டுகளில் சிக்கலை ஏற்படுத்தும். அதேவேளை இந்த வலி மிகவும் வேதனை தருவதாக இருக்கும்.

மூட்டுவலி பல்வேறு காரணிகளால் ஏற்படுகிறது. ஒரு ஆட்டோ இம்யூன் எதிர்வினை மூட்டுகளில் வீக்கத்தை ஏற்படுத்தும்போது, ​​அந்த நிலை முடக்குவாதம் என்று அழைக்கப்படுகிறது. மறுபுறம், மூட்டுகளில் குருத்தெலும்பு சிதைவினால் மூட்டழற்சி பெரிய அளவில் ஏற்படுகிறது. மூட்டுவலி, எலும்பு வலுவிழப்பு நோய் ஆகியவை மூட்டுகளிலும், எலும்புகளிலும் வலியை ஏற்படுத்தும். இருப்பினும், இரண்டுமே வித்தியாசமானவை.

ஒரே அறிகுறிகளை வெளிப்படுத்துவதால் பொதுவாக மூட்டுவலி, எலும்பு வலுவிழப்பு நோய் இடையிலான வேறுபாடு குறித்து மக்கள்  குழப்பமடைகிறார்கள். மூட்டுவலியும் எலும்பு வலுவிழப்பு நோயும் ஒருவரின் எலும்பை பாதிக்கின்றன. ஆனால் அவை ஒரே மாதிரியாக உருவாவதில்லை, வெளிப்படுவதும் இல்லை. மூட்டுவலி அறிகுறிகள் அடிக்கடி வெளிப்படுகின்றன. ஆனால், தங்கள் எலும்பு உடைந்து போகும் வரை எலும்பு வலுவிழப்பு நோய் இருப்பது பற்றிப் பலருக்கும் தெரியாது.

மூட்டுவலி, எலும்பு வலுவிழப்பு

நோய்களுக்கு இடையிலான ஒற்றுமைகள்

*உடற்பயிற்சி, வாழ்க்கை முறை மாற்றங்கள் இரண்டு நோய்களையும் தடுக்க உதவும்.

*இரண்டும் ஒருவரின் எலும்புகள், மூட்டுகளை பாதிக்கும் நீண்ட கால நோய் நிலைகள்.

*வயது, குடும்ப வரலாறு இரண்டும் இதுபோன்ற சந்தர்ப்பங்களில் ஒருவருக்கு நோய் வரும் ஆபத்தை அதிகரிக்கின்றன.

*உடல் பரிசோதனைகள், இமேஜிங், ரத்த பரிசோதனைகள் ஆகியவை இரண்டு நோயறிதல்களின் ஒரு பகுதியாகும்.

*எலும்பு முறிவை சரிசெய்வது அல்லது மூட்டை மாற்றுவது போன்ற சில சந்தர்ப்பங்களில் அறுவை சிகிச்சை தேவைப்படலாம்.

மூட்டுவலி, எலும்பு வலுவிழப்பு

நோய்களுக்கு இடையிலான வேறுபாடுகள்

*மூட்டு வலி, வீக்கத்தை ஆர்த்ரிடிஸ் ஏற்படுத்தும். அதேவேளை எலும்பு முறிவு ஏற்படும்வரை எலும்பு வலுவிழப்பு நோய் ஒரு அமைதியான நோயாக கருதப்படுகிறது.

*எலும்பு வலுவிழப்பு நோய்க்கான சிகிச்சையானது எலும்பு அடர்த்தியை அதிகரிப்பதில் கவனம் செலுத்துகிறது. அதே சமயம் மூட்டுவலிக்கான சிகிச்சையானது பாதிக்கப்பட்ட மூட்டுகளைப் பாதுகாப்பதுடன் வலி, வீக்கத்தைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

*எலும்பு வலுவிழப்பு நோயைவிட மூட்டுவலியில் பல்வேறு வகைகள் உள்ளன.

*சிலருக்கு ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வாழ்க்கை முறையால் எலும்பு வலுவிழப்பு நோயை முழுமையாகத் தடுக்க முடியும், அதே நேரத்தில் பல வகையான மூட்டுவலிகளைத் தடுக்க முடியாது.

மூட்டுவலிக்கான சிகிச்சைகள்

ஒருவரின் மூட்டுகளில் குறைவான அழுத்தத்தை ஏற்படுத்தும் ஆரோக்கியமான எடையை பராமரிப்பது மூட்டுவலியைத் தடுக்க உதவுகிறது. பிசியோதெரபி, உடல் மூட்டுகளை ஆதரிக்க பிரேஸ் அல்லது ரேப் அணிந்த உடற்பயிற்சி செய்வது மூட்டுவலிக்கு சிகிச்சையளிக்கும் சில முறைகள்.

எலும்பு வலுவிழப்புக்கான சிகிச்சைகள்

பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் எலும்பு உடைதலைக் குறைத்து, எலும்பு முறிவைத் தடுக்க உதவுகின்றன. கால்சியம், வைட்டமின் டி சத்துக்களுக்கான சப்ளிமென்ட்ஸ் எலும்பு ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமானவை. உங்கள் உணவில் அவை இல்லாததால் எலும்பு வலுவிழப்பு நோய், எலும்பு முறிவுகள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கும். அதிகப்படியான மது அருந்துவது உடலின் கால்சியம் சமநிலை, வைட்டமின் டி உற்பத்தி, ஹார்மோன் அளவுகளை சீர்குலைக்கும்.

சரியான நோயறிதல், சிகிச்சைக்கு மருத்துவரை நேரில் பார்ப்பது முக்கியம். இந்த இரண்டு நோய் நிலைகளும் ஒருவரின் வயது, குடும்ப வரலாற்றால் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. பொதுவாக, ஒவ்வொரு நிலைக்கும் வெவ்வேறு சிகிச்சைகளை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

தொகுப்பு : ஜாய் சங்கீதா

Related Stories: