சேய்த் தண்ணீர் மகத்துவம்!

நன்றி குங்குமம் டாக்டர்

சேய்த் தண்ணீர் என்றால் கருப்பட்டியை சுத்தமான தண்ணீரில் கரைத்து வடிகட்டிய திரவம். பிறந்த குழந்தையின் வாயில் மூத்த தாய்மாமன் இதைச் சில துளிகள் இடுவதைத் தொன்றுதொட்டு பழக்கமாகக் கொண்டுள்ளோம். சேய்த் தண்ணீர் இன்று சேனைத் தண்ணீராக பெயர் மாற்றம் பெற்றுள்ளது. குழந்தை பிரசவித்த பின் ஏற்படும் உடல்வலியையும் அடிக்கடி வரும் அழுகையையும் நிறுத்த சேய்த் தண்ணீர் பயன்படும்.

சேய்த் தண்ணீர் தயாரிப்பு முறை

100 மி.லி. காய்ச்சி ஆறிய தண்ணில் 24 கிராம் கருப்பட்டி அல்லது சர்க்கரையைக் கலந்து பின்னர் கரைத்து வடிகட்டி, குழந்தையின் வயது - எடைக்கு ஏற்ப வழங்கினால் வலியால் ஏற்படும் அழுகை உடனே குறையும். சேய்த் தண்ணீர் என்ற சர்க்கரை தண்ணீருக்கு வலியை நீக்கும் தன்மை 5 நிமிடம் முதல் 7 நிமிடம் வரை இருப்பதை ஆய்வாளர்கள் உறுதிசெய்துள்ளனர்.

சேய்த் தண்ணீர் அல்லது சர்க்கரை தண்ணீர் வழங்கும் அளவு

பிறந்தது முதல் ஒரு மாதம் வரைஉள்ள குழந்தைகளுக்கு 0.2 முதல் ஒரு மி.லி. சொட்டுவரை ஒரு வேளைக்கு வழங்கலாம். ஒரு நாளைக்கு 5 மி.லிக்கு (5 சொட்டுகள்) மேல் வழங்கக் கூடாது.ஒரு மாதம் முதல் 18 மாதம் வரையுள்ள குழந்தைகளுக்கு ஒரு மி.லி. முதல் 2 மி.லி.வரை ஒரு வேளைக்கு வழங்கலாம். ஒரு சொட்டு முதல் 2 சொட்டு வழங்கலாம். இந்த வகையிலும் ஒரு நாளைக்கு 5 மி.லிக்கு மேல் வழங்கக் கூடாது.

எதற்கெல்லாம் வழங்கப்படுகிறது?

தற்போது பச்சிளம் குழந்தைகளுக்கு ரத்த மாதிரி எடுக்க அதன் குதிகாலில் ஊசியால் குத்தும்போது, ஆண் குழந்தைகளின் பிறப்புறுப்பின் முன்தோலை நீக்கும் அறுவைசிகிச்சை முறை (Circumcision), நோய்த் தடுப்பு ஊசிகள் இடுவது ஆகிய செயல்பாடுகளுக்கு 30 விநாடி அல்லது 60 விநாடிகளுக்கு முன் சேய்த் தண்ணீர் (24 % sucrose) வழங்கப்படுகிறது. இதனால் வலியில்லாமல் செய்ய முடிகிறது என்பதை ஆய்வுகள் நிரூபித்துள்ளன.

காது குத்தும் நிகழ்வுகளில் வாயில் இனிப்பாகக் கருப்பட்டி, வெல்லம் அல்லது சீனியை இட்ட 1 நிமிடத்தில் காது குத்தும் செயல் தமிழகக் குழந்தைகளிடம் வலியை மறக்கடிக்கும் செயல்பாடாகத் தொடர்கிறது. பொற்கொல்லர் வலிநீக்கியாக பயன்படுத்தும் இந்த முறை உழைக்கும் மக்களின் பாரம்பரிய மருத்துவ அறிவியல் என்றால் மிகையாகாது.

மரபு அறிவியல்

நமது மரபு வாழ்க்கை முறை மூலம் பச்சிளம் குழந்தைகளின் வலி என்ற துன்பத்தில் இருந்து விடுதலை அளிக்கும் உன்னதமான மருத்துவ முறையான சேய்த் தண்ணீரை அமெரிக்க குழந்தைகள் நலச் சங்கம் அங்கீகரித்து நடைமுறைப்படுத்தி வருகிறது.

இது போன்ற சித்த மருத்துவக் கருத்துகள் தமிழர்களின் வாழ்க்கை முறையுடன் இரண்டறக் கலந்துள்ளது என்பதற்கு சேய்த் தண்ணீர் ஒரு ஆணித்தரமான எடுத்துக்காட்டு. தற்போது சேய்த் தண்ணீரைப் போன்ற 24% sucrose என்ற பொருளை பிரபல ஆங்கில மருந்து நிறுவனம் சந்தைப்படுத்துகிறது. நமது மரபு அறிவியல் கொடையே சித்த மருத்துவம். இனியாவது விழிப்புடன் அதைப் பின்பற்ற முயற்சிப்போம்.

தொகுப்பு : சரஸ்

Related Stories: