கண்ணைக் கட்டிக்கொள்ளாதே

நன்றி குங்குமம் டாக்டர்

கண் மருத்துவர் அகிலாண்ட பாரதி

கண்களில் என்ன கார்காலம்?!

கண்ணில் இருந்து தண்ணீர் வடிவதற்கு என்னவெல்லாம் காரணம்? சொல்லுங்கள் பார்ப்போம் என்று கண் மருத்துவர் அல்லாத ஒரு மருத்துவ நண்பரிடம் கேட்டேன். யோசிக்க ஆரம்பித்தார். ஒரு விஷயம், மருத்துவர் போல் இல்லாமல் நீங்கள் பொதுஜனம் போல் யோசித்து பதில் சொல்ல வேண்டும் என்றேன். சொன்னார்.கண்ணில் தூசி விழுந்தால் தண்ணீர் வரும், கண்ணில் அடிபட்டால் தண்ணீர் வரும், கண்வலி வருவது, ஜலதோஷம் பிடிப்பது என்று அடுக்கிக்கொண்டே போனார். முக்கியமானதும், அடிக்கடி காணக்கூடியதுமான ஒன்றை மறந்து

விட்டீர்களே என்றேன். என்ன அது என்று யோசித்தார். அழுதால் கண்களில் கண்ணீர் வருமல்லவா என்றேன்.

"ஹா ஹா! ஆமாம்” என்றார்.கண்களில் இருந்து வழக்கத்தை விட அதிகமாக நீர் சுரப்பதற்கு மேலே சொன்ன இத்தனை காரணங்கள் இருப்பதைப் போல, ஒவ்வொரு காரணத்துக்கும் ஒரு வழிவகையும் இருக்கிறது. கண்ணீர் என்று ஒரே வார்த்தையில் நாம் பொதுமைப்படுத்தினாலும் கண்களில் சுரக்கும் நீரில் மூன்று வகைகள் இருக்கின்றன. நெருங்கியவர் ஒருவர் இறந்து போகிறார்; அந்த செய்தியைக் கேட்டவுடன் அதன் தாக்கம் மனதில் பதிந்து மூளை அந்த செய்தியை நரம்பின் வழியே கடத்தி கண்ணிற்கு அனுப்புகிறது. அதனால் கண்கள் அதிக கண்ணீரை சுரக்கின்றன (emotional tears). இது ஒரு வகை. உணவைப் பார்த்தவுடன் நாவில் எச்சில் ஊறுகிறதே அதைப்போலத்தான் இதுவும்.

கண்ணுக்கு வேறு ஏதாவது ஒரு வெளிப்புறக் காரணியால் ஆபத்து, அதை வெளியேற்ற வேண்டும் என்ற நிலை ஏற்படும் பொழுது அதற்கு உடனடி எதிர்வினையாக (reflex action) கண்ணில் சில வேலைகள் நடந்து அப்பொழுதும் கண்ணீர் சுரப்பு அதிகமாகிறது (reflex tears). கண்களில் விழுந்த தூசிகளில் பல இத்தகைய அதிக நீர் சுரப்பினால் எந்த விதத் தொந்தரவையும் கொடுக்காமல் தானாகவே வெளியேறி விடுவது இதனால் தான். ஒரு குறிப்பிட்ட பொருளுக்கு நம் உடல் ஒவ்வாமையை வெளிப்படுத்துகிறது என்றாலும் இதே வழிமுறைகளால் தான் அதிக கண்ணீர் சுரப்பு நிகழ்கிறது. இந்த வேலையை சிறப்புறச் செய்வது மூளையில் இருந்து வரும் மூன்றாவது நரம்பு (trigeminal nerve). இது இரண்டாவது வகையான கண்ணீர் சுரப்பு.

மூன்றாவது வகை ஒன்று உள்ளது. சராசரியாக ஒரு மனிதனுக்கு நிமிடத்திற்கு இரண்டு மைக்ரோ லிட்டர் என்ற கணக்கில் நாளொன்றுக்கு 150 முதல் 300 மில்லிலிட்டர் வரை இயல்பான கண்ணீர் சுரப்பு நிகழ்கிறது. வாயில் எச்சில் சுரப்பதை போல, தோலில் எண்ணெய்ப் பசை இருப்பதைப் போல எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும் கண்ணீர் படலம் இது (basal tears). நான் இதுவரை அழுததே இல்லை என்று கூறும் மனிதனுக்கு கூட இந்த வகையான கண்ணீர் சுரப்பு இருக்கத்தான் செய்கிறது. மேலே கூறிய பிற காரணிகளால் அந்தந்த நேரத்திற்கு அதிக கண்ணீர் சுரப்பு நிகழ்வதும் மீண்டும் பழையபடி சாதாரண கண்ணீர் படலம் மட்டும் இருப்பதும் இயல்பான ஒன்று.

சுவாரஸ்யமான ஒரு விஷயமாக, மன உணர்வுகளால் வெளிப்படும் கண்ணீரின் திட அமைப்பு சற்றே வித்தியாசமானதாக இருக்கிறது. அதில் புரதச்சத்துக்கள் அதிகம் இருக்கின்றன, கூடவே சில ஹார்மோன்களும் வெளியேறுகின்றன. ஒரு குறிப்பிட்ட வகையிலான எலி தன் உடலிலிருந்து இத்தகைய நீரை சுரக்குமாம். அதன் மணம், அதே இனத்தைச் சேர்ந்த படுபயங்கரமான எலிகளை இதன் அருகில் வராமல் செய்யவல்லது. சில உயிரினங்கள் தங்களைத் தற்காத்துக் கொள்வதற்காக துர்நாற்றம் வீசக்கூடிய திரவங்களை உடலில் சுரக்கும் அல்லது துப்பி விடும் என்பார்கள்.

அதைப் போன்ற ஒரு நடைமுறையாக இது பார்க்கப்படுகிறது. இதே ரீதியில் சிந்தித்து மனிதனின் கண்ணீரைப் பற்றிய ஆய்வுகளும் பல நடந்திருக்கின்றன. ஒருவர் அழுவதைப் பார்த்தவுடன் எனக்கு அழுகை வரும் என்று சொல்பவர்கள் பலர். மனம் விட்டு அழுவதால் உடலை வருத்தும் பல stress ஹார்மோன்கள் வெளியேறுவதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன. சக மனிதனின் கண்ணீர் இன்னொருவனை பல முக்கியமான முடிவுகள் எடுக்கத் தூண்டுவதும் நடைமுறைதானே.

வழக்கமான அளவிற்கே கண்ணீர் சுரப்பு நிகழ, அது அதிகமாகச் சுரப்பது போன்ற தோற்றம் சில சமயங்களில் ஏற்படும். அதற்குக் காரணம் நமது கண் இமைகளை சரியாக மூடி திறக்க முடியாத நிலை.  இதனை Epiphora என்போம். இதைப் பற்றி நன்றாக புரிந்து கொள்வதற்கு நம் இமைகளின் இடைவிடாத வேலையைப் பற்றியும் தெரிந்திருக்க வேண்டும். சராசரியாக நிமிடத்திற்கு 15 முதல் 20 முறை வரை நமது கண் இமைகள் இமைக்கின்றன.

இது எந்தவித உந்துதலும் இல்லாமல் தானாகவே நடக்கக்கூடிய (involuntary action) ஒரு நிகழ்வு. நடன அசைவுகள், சில வகையான பயிற்சிகள் மற்றும் பறந்து வரும் அயல் பொருட்களுக்கு எதிரான அனிச்சைச் செயலாக இதைவிட அதிகமான முறைகள் இமைக்க நேரலாம்.யாருடைய தொந்தரவும் இல்லாமல் இமைத்துக்கொண்டே இருக்கும் கண் இமைகள் கண்ணில் சுரக்கும் basal tearsஐ கண்ணின் மேற்புறத்தில் மெல்லிய படலமாக ஒன்று போல் சீராகப் பரவுவதை உறுதி செய்கிறது.

கூடவே, இமைகள் மூக்கின் அருகே சந்திக்கும் இடத்திற்கு அருகில் உள்ள சிறிய துவாரம் வழியாக கண்ணீரை வெளியேற்றவும் உதவுகிறது இந்த ‘இமைக்கும் பணி’. அந்த துவாரத்தின் வழியே கண்ணீர் பயணித்து, பின் மூக்கை அடைந்து மூக்கின் பின்பகுதி வழியாக எச்சிலுடன் கலந்துவிடுகிறது.இந்த சீரான நடைமுறைகளில் எந்த இடத்தில் பிரச்சனை தோன்றினாலும் கண்ணில் சுரக்கும் நீர் மூக்கிற்குள் இறங்காமல் வெளியே வடிகிறது.

உதாரணமாக முகவாதத்தை (Bell’s palsy) எடுத்துக் கொள்வோம். அதில் முகத்தின் ஒரு பாதித் தசைகளுக்கு வரக்கூடிய நரம்பு அமைப்பில் பாதிப்பு ஏற்படுவதால் கண்களை சரியாக மூடித் திறக்க முடியாது. வலது புறம் முகவாதம் என்றால், இடது கண்ணை மூடித் திறக்கும் அளவுக்கு வலது கண் இமை சரியாக வேலை செய்யாது. அதனால் கண்ணில் இயல்பாக சுரக்கும் கண்ணீர் உள்ளே இறங்க வழியின்றி வெளியே வடிந்துவிடும். இந்தப் பிரச்சனையிலும் நோயாளி, தனக்கு அதிகமாக கண்ணீர் வருகிறது என்ற அறிகுறியைத்தான் சொல்வார்.

சென்ற வாரத்தில் இரண்டு நோயாளிகள் என்னிடம் வந்தார்கள். ‘இந்த ஒரு கண்ணில் மட்டும் நிறைய தண்ணியா வடியுது’ என்பதுதான் அவர்களுடைய அறிகுறி. அவர்களைப் பரிசோதனை செய்து பார்த்தபின், ‘‘கண்களில் கண்ணீர் சுரப்பு அதிகமாகவில்லை. கண்களை மூடித் திறக்கும் அமைப்பு மட்டுமே பாதிக்கப்பட்டிருக்கிறது, முறையான மருந்து மாத்திரை, ஃபிசியோதெரபி சிகிச்சை மூலம் இதை சரி செய்யலாம்’’ என்று ஆலோசனை கூறி அனுப்பினேன்.

வயது முதிர்வின் காரணமாக சிலருக்கு கண்ணைச் சுற்றியுள்ள தசைகள் தளர்ந்து போய்விடுவதுண்டு. இதிலும் கண்ணில் அதிக நீர் வடிவது போன்ற தோற்றம் நோயாளிக்குத் தெரியும். ஆனால் உண்மையில் வயது மூப்பின் காரணமாக வழக்கமான கண்ணீர் சுரப்பு பாதிக்கும் கீழே குறைந்திருக்கும். காயங்கள், அவற்றால் ஏற்படும் தழும்புகள், சில நரம்பியல் பிரச்சனைகள் இவற்றிலும் கண்ணை சரியாக மூட முடியாது (lagophthalmos). தொழுநோயாளிகள் பலருக்கு அவர்களை அறியாமலேயே இந்த பிரச்சனை ஏற்பட்டு, கருவிழியில் நிரந்தர பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.

இதை சரிசெய்வதற்காக பல எளிய அறுவை சிகிச்சைகள் வழக்கத்தில் உள்ளன. அத்துடன் தூங்கும்போது கண்களை சிறிய பேப்பர் பிளாஸ்டரால் ஒட்டுவது, கண்கள் உலராமல் இருப்பதற்கான சொட்டு மருந்துகளை பயன்படுத்துவது, சின்னச் சின்னப் பயிற்சிகளைச் செய்வது இவையும் பலனளிக்கும்.

இது தவிர, கண்களில் இருந்து மூக்கின் பின்பகுதிக்குச் செல்லும் nasolacrimal duct குழாய்களில் ஏதேனும் அடைப்பு ஏற்பட்டு இருந்தாலும் கண்களில் நீர் வடிவது நிகழும். பிறந்த குழந்தைகளுக்குக் கூட இந்தத் தொந்தரவு நிகழலாம். ஆரம்பத்திலேயே கவனித்துவிட்டால் இதை மசாஜ், சிரிஞ்சின் மூலமாக சுத்தம் செய்வது போன்ற எளியவழிமுறைகளால் சரி செய்ய முடியும். கண்ணீர் வடிவதை கண்டுகொள்ளாமல் விட்டு விடுபவர்களுக்கு நீர்ப்பையில் தொற்று ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்ய நேரிடக்கூடும்.

கண்ணில் கண்ணீர் வடிகிறது என்றவுடனேயே அதன் காரணம் என்னவென்று அறிய முற்படாமல் வீட்டிலிருக்கும் சொட்டு மருந்துகளையோ அருகில் இருக்கும் மருந்துக்கடைகளில் உள்ள சொட்டு மருந்துகளையோ போடும் பழக்கம் பரவலாக இருக்கிறது. இவற்றால் அடிப்படைக் காரணத்தை எந்த விதத்திலும் சரி செய்ய முடியாது. மாறாக நோயறிதலை தாமதப்படுத்தி சிக்கலை அதிகமாக்கவே செய்யும்.இனி கண்களில் கார்காலம் தோன்றினால் அதன் காரணம் என்ன என்று அறிந்துகொள்ளவும், உரிய சிகிச்சை அளிக்கவும் முயல்வீர்கள்தானே!

Related Stories: