×

ஆஸ்துமாவை வெல்வோம்!

நன்றி குங்குமம் டாக்டர்

குளிர்காலம் வந்துவிட்டாலே ஆஸ்துமா நோயாளிகளுக்கு அச்சமாக இருக்கும். குறிப்பாக, அதிகாலைப் பெழுதில் ஆஸ்துமாகாரர்கள் படும் அவஸ்தை வார்த்தையில் சொல்ல முடியாத வாதை. இது, வயதானவர்களுக்குத்தான் வரும் என்பது இல்லை. குழந்தைகளுக்குக்கூட இந்தப் பிரச்னை வருகிறது. உலக அளவில் 20 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட மக்கள் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆஸ்துமா என்றால் என்ன... அதற்கான சிகிச்சைகள் என்னென்ன என்று பார்ப்போம்!

ஆஸ்துமா

மூச்சுக்குழாயின் உட்சுவரில் ஏற்படும் வீக்கம், அழற்சி, சளி அடைத்துக்கொள்ளுதல் போன்ற காரணங்களால் மூச்சுக்குழாயின் பாதை சுருங்கி, மூச்சுவிட சிரமப்படும் பிரச்னையை ‘ஆஸ்துமா’ என்கிறோம்.

ஏன் ஏற்படுகிறது?

இது ஏன் ஏற்படுகிறது என்பதற்குத் தெளிவான காரணங்கள் இல்லை. ஆனால், மரபியல், சுற்றுச்சூழல் போன்ற காரணங்களால் ஏற்படுகிறது என்று அனுமானிக்கலாம். மரபியல்ரீதியாக ஆஸ்துமா பாதிப்பு உள்ளவர்கள், அதைத் தூண்டும் அலர்ஜியான சூழலில் வசிக்கும்போது, இது ஏற்படுவதற்கான வாய்ப்பு இரட்டிப்பாகிறது.

அறிகுறிகள்...

1.சுவாசித்தலில் சிரமம்
2.நெஞ்சு இறுக்கம்
3.நெஞ்சில் சளி அடைத்திருப்பது போன்ற உணர்வு
4.இளைப்பு
5.இருமல்
6.மூச்சுவிடும்போது விசில் அடிப்பது போன்ற மெல்லிய ஓசை (வீசிங்)
7. சிலருக்கு முகம், உதடு ஊதா
நிறத்தில் மாறும்
8. நெஞ்சு வலிப்பது போன்ற உணர்வு
ஆஸ்துமாவை ஏற்படுத்தும் காரணிகள்
1. சிகரெட், புகையிலைப் பழக்கம்
2. கயிறு துகள், மரத்தூள்
3. செல்லப் பிராணிகளின் முடி
4. காற்று மாசு
5. குளிர்ச்சியான சீதோஷ்ணம்
6. மனஅழுத்தம்
7. வாகனப் புகை
8. அடிக்கடி ஏற்படும் சளித்தொல்லை
9. தும்மல் பிரச்னை
10. பரம்பரைக் காரணம்
11.நிமோனியா காய்ச்சல்
12.நுரையீரல் தொற்றுகள்

பரிசோதனை

எக்ஸ்ரே, ஸ்கேன் உள்ளிட்ட இமேஜிங் பரிசோதனைகளை (Imaging tests) ஆரம்பத்தில் செய்வார்கள். பிறகு, `பி.எஃப்.டி’ (Pulmonary Function Test)  என்ற பரிசோதனையின் மூலம் மூச்சுக்குழாயின் சுருக்க அளவினைக் கண்டறிய முடியும். இந்தப் பரிசோதனையின்போது நோயாளியை ஓர் ஊதுகுழலில் வாய் வைத்து வேகமாக ஊதச் சொல்வார்கள். எவ்வளவு விநாடிகள், எவ்வளவு வேகமாக ஊத முடிகிறது என்பதைக் கணிப்பொறியில் கண்காணித்து, மூச்சுக்குழாயில் ஏற்பட்டுள்ள பாதிப்பின் அளவை மதிப்பிடுவார்கள்.

இதைத் தவிர சிலருக்கு, `மெத்தாகோலைன் பரிசோதனை’ (Methacholine challenge), `நைட்ரிக் ஆக்சைடு பரிசோதனை’ (Nitric oxide test), `அலர்ஜிக்கான பரிசோதனைகள்’ ( Allergy testing) `ஸ்பூடம் ஈசினோபில்ஸ் பரிசோதனை’ (Sputum eosinophils), `உடற்பயிற்சி பரிசோதனை’ (Provocative testing for exercise and cold-induced asthma) போன்ற பரிசோதனைகள் தேவையானால் செய்யப்படும்.  
 
சிகிச்சைகள்

ஆஸ்துமாவுக்கு மாத்திரைகள், டானிக் போன்றவை உள்ளன. ஆனால், இன்ஹேலர் சிகிச்சையே ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்தச் சிறந்த முறையாக இருக்கிறது. ஏனெனில், மாத்திரை, ஊசிகளைப் பயன்படுத்தும்போது உடலுக்குள் செல்லும் மருந்தின் அளவைக்காட்டிலும்,  இன்ஹேலரைப் பயன்படுத்தும்போது உடலுக்குள் செல்லும் மருந்தின் அளவு மிகக்குறைவு. இதனால், பக்கவிளைவுகள் தடுக்கப்படுகின்றன.

ஆஸ்துமாவுக்கான இன்ஹேலர் சிகிச்சைகளில் இரண்டு வகைக்ள உள்ளன. ஆஸ்துமாவைத் தடுப்பதற்காகத் தரப்படும் இன்ஹேலர்கள் ஒருவகை. ஆஸ்துமா பிரச்னையைக் குறைப்பதற்காகத் தரப்படும் இன்ஹேலர்கள் இன்னொரு வகை. இதில், தடுப்பு ஆஸ்துமா இன்ஹேலர்கள் எப்போதும் எடுத்துக்கொள்ள வேண்டியவை. இன்னொரு வகை பிரச்னை இருக்கும்போது மட்டும் மருத்துவர் பரிந்துரைப்படி எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால், இதயப் பிரச்னைகள் தொடர்பாக ஏற்படும் ஆஸ்துமாவுக்கு இன்ஹேலர் ஏற்றது அல்ல. எனவே,
மருத்துவரின் ஆலோசனை முக்கியம்.

 தொடர்ந்து இன்ஹேலர் பயன்படுத்தலாமா?

ஆஸ்துமாவின் தீவிரம் குறையும் வரை இன்ஹேலர் பயன்படுத்த வேண்டும். எவ்வளவு கால இடைவெளியில் பயன்படுத்த வேண்டும், எவ்வளவு காலம் பயன்படுத்த வேண்டும் என்பது ஆஸ்துமாவின் தீவிரத்தைப் பொறுத்து மாறுபடும். இன்ஹேலர் பயன்படுத்தும் முறை குறித்து மருத்துவரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்.

தடுப்பூசிகள்


ஆஸ்துமா பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரண்டு தடுப்பூசிகள் முக்கியமானவை. ஒவ்வொரு வருடமும் ஃப்ளூ தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். இதனோடு நிமோனியாவுக்கான தடுப்பூசி (Pneumococcal) ஐந்து ஆண்டுகளில் மூன்று தவணைகளில் போட்டுக்கொள்ள வேண்டும். இதை, கன்ஜுகேட் தடுப்பூசியை (Conjugate vaccine)  முதல் தவணையாகவும், ஓராண்டுகள் கழித்து பாலிசாக்கரைட் தடுப்பூசியும் (Polysaccharide vaccine) ஐந்தாம் ஆண்டில் பூஸ்டர் தடுப்பூசியுமாகப் போட வேண்டும்.   

ஆஸ்துமா தடுக்க... தவிர்க்க!

1. வீட்டைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். வீட்டை சுத்தம் செய்யும்போது மாஸ்க் அணிந்து கொள்ள வேண்டும்.

2.படுக்கையை அடிக்கடி வெயிலில் உலர்த்தி வைத்துக்கொள்ள வேண்டும். படுக்கை அறையில் உள்ள தலையணை உறை, பெட் ஷீட் ஆகியவற்றை அடிக்கடி மாற்ற வேண்டும்.

3. ஏ.சி-யில் இருப்பதை இயன்ற அளவு தவிர்க்கலாம். இயலாது எனில், வெளியில் உள்ள தட்பவெப்பத்தைவிட சற்று குறைவாக ஏ.சி-யை வைத்துக்கொள்ளலாம்.

4. ஹோட்டல் உணவுகளைத் தவிர்க்க வேண்டும். சுத்தமான உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும். வீட்டில் கரப்பான் பூச்சி, மூட்டைப் பூச்சிகள் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

5. இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது மூக்கை மறைத்தவாறு முழுமையாக ஹெல்மெட் அணிய வேண்டும், அல்லது மாஸ்க் கட்டிக்கொள்ள வேண்டும்.

6. தொழிற்சாலை அல்லது வேலை பார்க்கும் இடங்களில் தூசு அதிகம் இருந்தால், கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும்.

7. புகைபிடிக்கவும் கூடாது;  புகைப்பவர்கள் அருகில் நிற்கவும் கூடாது.

8. வீட்டில் செல்லப் பிராணி வளர்ப்பதைத் தவிர்க்க வேண்டும். இயலாது என்றால், அதனோடு புழங்குவதைத் தவிர்க்க வேண்டும்.

9. மலைப் பிரதேசங்கள், குளிர்ச்சியான சீதோஷ்ணம் நிறைந்த இடங்களில் வசிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

10. எதனாலாவது அலர்ஜி ஏற்படுகிறது எனத் தெரிந்தால், அதனைத் தவிர்க்க வேண்டும்.

ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்தும் உணவுகள்

சளித் தொந்தரவைக் குறைக்கும் தன்மை வைட்டமின் சி-க்கு அதிகம். இதனால், வைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய், ஆரஞ்சு, சாத்துக்குடி, எலுமிச்சை போன்றவற்றை அதிகம் எடுத்துக்கொள்ளலாம்.

தொகுப்பு : இளங்கோ கிருஷ்ணன்

Tags :
× RELATED வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!