நன்றி குங்குமம் டாக்டர்
சிறு வயதில் கரும்பை பல்லால் கடித்து, மென்று சாப்பிட்டு சுவைத்திருப்போம். தற்போதைய காலக்கட்டத்தில் பிள்ளைகள் முதல் பெரியோர்வரை கரும்பை பொங்கல் சமயத்தில் வாங்கி, கொஞ்சம் சுவைப்பதோடு சரி, ஆனால் கரும்பு எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளன என்பதை பலரும் அறிவதில்லை. அளவாக சாப்பிட அத்தனை பலன்களையும் பெறலாம்.
கரும்பின் சாறில் வைட்டமின் சி மிகுந்து இருக்கும். இதைக் குடிக்க தொண்டைப்புண், வயிற்றுப்புண் குணமாகும்.
கரும்பில் உள்ள பாலிஃபீனால் எனும் இயற்கை வேதிப்பொருள், ரத்த தட்டு அணுக்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து ஏற்படக்கூடிய ரத்த உறைதலை தடுப்பதுடன் ரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைக்கும் தன்மை கொண்டுள்ளது.
கரும்பில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளதால் மலச்சிக்கல் பிரச்னையை போக்கி, குடலை சுத்தப்படுத்தும் தன்மை கொண்டுள்ளது.
ஆன்டி – ஆக்ஸிடன்ட்ஸ் மற்றும் ஃப்ளேவனாய்ட்ஸ் இருப்பதால் புற்றுநோய் ஏற்படாமல் பாதுகாக்க உதவுகிறது. சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தி, தோல் சுருக்கம் வயதான தோற்றம் ஏற்படாமல் பாதுகாக்கும்.
கரும்பில் உள்ள இயற்கையான வேதிப்பொருள் ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்கும் தன்மை கொண்டது.
கரும்பு சாறில் பொட்டாசியம் நிறைந்துள்ளதால் ரத்த அழுத்தம், மன அழுத்தம் போன்ற பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்கும்.
கரும்பில் அதிக அளவில் பொட்டாசியம் மற்றும் குறைந்த அளவு சோடியம் சத்துகள் உள்ளதால் சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்தி, சிறுநீரக கற்கள் மட்டும் சிறுநீரக பாதிப்புகளை குணமாக்குகிறது.
இதில் உள்ள கால்சியம் மற்றும் மெக்னீசியம் எலும்பு மற்றும் பற்களுக்கு வலிமையை கொடுக்கிறது. கரும்பை கடித்து சாப்பிடுவதால் பற்கள் மற்றும் வாய்ப் பகுதியில் உள்ள கிருமிகளை அழித்து பற்களின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.
கெட்ட கொழுப்பை குறைக்கிறது. பித்தத்தைத் தணித்து உடல் சூட்டை குறைக்கிறது.
தேங்காய் பாலுடன் கரும்புச்சாறு சேர்த்து பருக சீதபேதி குறையும்.
உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்க, கரும்புச்சாறில் தேன் கலந்து குடிக்கலாம். ரத்த சோகையையும் குறைக்கும்.
தொகுப்பு: மகாலட்சுமி சுப்ரமணியன்
