நன்றி குங்குமம் டாக்டர்
முகப்பரு என்பது ஆண், பெண் என இருபாலரையும் கஷ்டப்படுத்தும் ஒரு விஷயமாக உள்ளது. ஆயில் ஸ்கின் கொண்டவர்களுக்கும், சரிவிகித உணவு எடுத்துக் கொள்ளாதவர்களுக்கும், தலையில் பொடுகு உள்ளவர்களுக்கும் முடியை சரியாக பராமரிக்காதவர்களுக்கும் பருக்கள் வருகின்றன. உணவை சரியான நேரத்தில் எடுத்துக் கொள்வதுடன், முகப்பரு வந்தால் முகத்தை அடிக்கடி தொடாமல் இருக்க வேண்டும். கீழ்க்கண்ட எளிய மாஸ்க்குகளை உபயோகப்படுத்தினால் பருக்கள் வருவது குறையும்.
முட்டை வெள்ளை பகுதியுடன் சிறிது தேனும், ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறும், முல்தானிமட்டியுடன் கலந்து போட்டு வர பருக்கள் கட்டுப்படும்.
கற்றாழை சாறுடன் கேரட் சாறு ஒரு தேக்கரண்டி, கடலைமாவு ஒரு தேக்கரண்டி சேர்த்து கலந்து பேக் போட்டு ஊறியதும் கழுவி வர பருக்கள் மறையும். மேலும் பருவினால் ஏற்பட்ட கருப்பு தழும்புகளும் மாறும்.
நாவற்பழத்தின் விதைகளை எடுத்துக் கொண்டு அரைத்து பருக்களின் மீது தடவி வர, மேலும் பருக்கள் வராது. இதில் உள்ள அமிலம் பருக்களின் அல்கலின் சீழை அகற்றிவிடும்.
லோத்ரா (simplocos Racemosa) பெண்களுக்கேற்ற டானிக் ஆன லோத்ரா, மலச்சிக்கலை அகற்றும். பருக்களின் பக்க விளைவாக ஏற்படும் சொறி, புண்களை குணப்படுத்தும்.
கடுகு பேஸ் மாஸ்க் போட்டு உடன் கழுவி வர, பருக்கள் வராது. இது மலச்சிக்கலை போக்குவதால், பருக்கள் வராமல் தடுக்கும்.
பப்பாளி கூழை தேனுடன் கலந்து மாஸ்க் ஆக போட, பருக்கள் ஏற்படுவது குறையும். இதை உள்ளுக்கு சாப்பிட ரத்தத்தை சுத்திகரிப்பதால் பருக்கள் வராது.
வசம்பு எண்ணெயை தடவி வர பாக்ட்ரியாவை கட்டுப்படுத்தும் பருக்களால் ஏற்படும் அரிப்பு, வலிகளை குறைக்கும்.
சந்தனத்தை அரைத்து மாஸ்க் ஆக போட்டு கழுவி வர பருக்களை போக்க செய்யும். நறுமண சந்தனம் ரத்தத்தை சுத்திகரிக்கும். பருக்களை போக்கும்.
பன்னீர் ரோஜா இதழ்களை பன்னீரோடு சேர்த்து அரைத்து பூசி வர அழற்சி குறையும். முகம் பொலிவு பெறும்.
தொகுப்பு:மகாலட்சுமி சுப்ரமணியன்
