×

கவுன்சலிங் ரூம்

நன்றி குங்குமம் டாக்டர்

மருத்துவப் பேராசிரியர் முத்தையா


“எனக்கு வயது 38. காலில் சிறியதாக வெண்படலம் உருவாகியிருக்கிறது. இந்தப் பிரச்னை என் தாத்தாவுக்கு இருந்ததாகச் சொல்கிறார்கள். இது பரம்பரை வியாதியா? ஏன் இவ்வாறு வந்தது? இது உடல் முழுக்கப் பரவாமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்?”
- ஆர். ராமு செல்வம், திருச்சி.

“நமது தோல் செல்களில் உள்ள மெலனின் எனும் நிறமி அழிவதாலோ அல்லது அதன் உற்பத்திக் குறைவதாலோ தோலில் வெண்புள்ளிகள் (Vitiligo) உருவாகின்றன. வெண்புள்ளி ஒரு தொற்றுநோய் இல்லை. பாக்டீரியாவால் வரும் தொழுநோயும் இல்லை. இந்தப் பிரச்னை 10 சதவிகிதம் பரம்பரையாலும், 90 சதவிகிதம் பிற காரணங்களாலும் ஏற்படுகிறது. தன் நோய் எதிர்ப்புச் சக்தி பிரச்னை எனப்படும் ஆட்டோ இம்யூன் பாதிப்பாலும் விட்டிலிகோ பிரச்னை ஏற்படக்கூடும். அதாவது, நமது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு மண்டலம், உடலில் மெலனின் உற்பத்தியை உடலுக்கு எதிரானது எனத் தவறாகப் புரிந்துகொள்வதால், அவற்றை அழிக்கத் தொடங்கும்.

விட்டிலிகோ பிரச்னையால் ஒருவரது  வேலைத்திறனோ வாழ்க்கைத்தரமோ எந்த விதத்திலும் பாதிக்கப்படாது. அதே போல், இது தொற்றுநோய் கிடையாது என்பதால், மண வாழ்க்கைக்கும் இது தடையும் இல்லை. இந்தப் பிரச்னைக்கு தற்போது நிறைய நவீன சிகிச்சைகள் உள்ளன. தோல் மருத்துவரை அணுகி, முதலில் இது உடலின் பிற பாகங்களில் பரவுவதைத் தடுக்க வேண்டும். பிறகு, மெலனின் உற்பத்தி்க்கான மாத்திரை மருந்துகளை தோல் மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிடலாம். மருத்துவர் பரிந்துரைத்தால் லேசர் தெரப்பி, கிராஃப்டிங், ஆட்டோலோகஸ், மெலனோசைட் கல்ச்சர், நான்கல்ச்சர் சிகிச்சை போன்றவற்றின் மூலம் நிரத்தரத் தீர்வை நாடலாம்.

சிலர், வெண்படலத்தை மறைக்க தோல் நிறத்தோடு ஒத்துப்போகும் பச்சை குத்திக்கொள்வார்கள். ஒவ்வாமை ஏற்படுத்தாத பவுடர் அல்லது கிரீமையும் தடவிக்கொள்ளலாம். இதற்கு உணவுக் கட்டுப்பாடு என்று எதுவும் கிடையாது. ஆனால், வெண்புள்ளி உள்ள இடத்தில் சிராய்ப்போ காயங்களோ ஏற்படாமல் பாதுகாத்துக்கொள்வது நல்லது. சிலர் இந்தப் பிரச்னையால் மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பார்கள். அவசியம் எனில், அவர்கள் மனநல மருத்துவரைச் சந்தித்து கவுன்சலிங் பெற்றுக்கொள்ளலாம்.”

“எனக்கு 38 வயதாகிறது. உயர் ரத்த அழுத்தத்துக்கு மருந்து சாப்பிடுகிறேன். சர்க்கரை கட்டுக்குள் உள்ளது. என் முன்னோர் யாருக்கும் வழுக்கை கிடையாது. கடந்த சில மாதங்களாக தலை வாரும்போதும், குளிக்கும்போதும் அதிகமாக முடி உதிர்கிறது. முன்னந்தலை லேசாக வழுக்கையாகிவிட்டது. இதற்கு என்ன காரணம்? நான் என்ன சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்?”
- கே.அருண்மொழி, வந்தவாசி.


“திடீர் என்று முடி கொட்டப் பல காரணங்கள் உள்ளன. பரம்பரை இதில் முக்கியமான பங்கு வகித்தாலும், ஹார்மோன் குறைபாடு, உணவில் ஊட்டச்சத்துக் குறைபாடு ஆகியவற்றாலும் முடி கொட்ட வாய்ப்பு உள்ளது. வாழ்க்கைமுறை அமைப்பாலும் முடி கொட்ட நிறைய வாய்ப்பு உள்ளது. ‘ஸ்கால்ப்’ எனப்படும் தலையின் மேற்புறப் பகுதியில் ரத்த ஓட்டம் குறைவதாலும் முடி கொட்டலாம்.

தினசரி தலையை நன்றாக அலசி, தேங்காய் எண்ணெய் போன்றவற்றால் ஈரப்பதம் குறையாமல் வளமாக முடியை வைத்திருக்க வேண்டியது அவசியம். இதனைச் செய்யாமல் விடும்போதும் ஒருவருக்கு முடி கொட்டுகிறது. காற்றோட்டம் இல்லாத இடங்களில் பணிபுரிபவர்கள், அதிக டென்ஷனான வேலை செய்பவர்கள் ஆகியோரும் முடி உதிர்வால் அவதிப்படுகிறார்கள். காற்றின் மாசு, வாகனப் புகை, தொழிற்சாலை புகை, அதிக நேரம் ஹெல்மெட் அணிதல் ஆகிய காரணங்களாலும் முடி கொட்டும் வாய்ப்பு அதிகரிக்கும். ஆரோக்கியமான உடலில் சராசரியாக ஒரு நாளைக்கு 50 முதல் 100 முடிகள் வரை உதிரும். இதற்கும் அதிகமாக முடி உதிர்ந்தால் மட்டுமே அது முடி உதிர்வாகக் கொள்ள வேண்டும். சிலர் மிகக் குறைவாக உதிர்வதையே கண்டு அச்சப்படுவார்கள். இது தேவையில்லை.

ஒருவர் சாப்பிடும் வைட்டமின் மாத்திரைகளால் சில நேரங்களில் உடலின் எதிர்ப்புச் சக்தி அதிகரித்து முடியின் வேர்ப் பகுதியைப் பாதிக்கும்போது, கொத்துக் கொத்தாக முடி கொட்டும். வைட்டமின் ஏ மாத்திரைகள் அதிகம் எடுத்துக்கொள்வதால் முடி கொட்ட வாய்ப்பு உள்ளது. சில மருந்துகளின் வீரியத்தாலும் முடி கொட்டலாம். எதனால் முடிகொட்டுகிறது என்று கண்டறிந்து அதற்கான சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். உயர் ரத்த அழுத்தத்துக்கு எடுத்துக்கொள்ளும் மாத்திரை காரணமாக முடிகொட்டுகிறது என்றால், உங்கள் மருத்துவரை அணுகி தேவையான ஆலோசனை பெறுவது நல்லது.

Tags :
× RELATED வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!