ரெட் அலெர்ட்!

நன்றி குங்குமம் டாக்டர்

குழந்தைகள் நோயியல் நிபுணர் சரத் பாபு

தக்காளிக் காய்ச்சல்… குழந்தைகளைக் காப்பது எப்படி?

மழைக் காலம் வந்துவிட்டாலே விதவிதமான நோய்கள் வைரஸ் தொற்றுகள் பரவத் தொடங்கிவிடுகின்றன. இதில் சமீபத்திய வரவு தக்காளி காய்ச்சல். டெங்கு, சிக்குன் குனியா போன்ற நன்னீர் கொசுக்களால் பரவும் வைரஸ் போன்றே தக்காளி காய்ச்சலின் வைரஸும் இருக்கிறது. தக்காளிக் காய்ச்சல் மிக அதிகமாகக் குழந்தைகளையே பாதிக்கிறது. நோய் எதிர்ப்பாற்றல் குறைவாக இருப்பதும், பள்ளிகளில் குழுவாக இவர்கள் சேர்ந்திருப்பதும் குழந்தைகளை இந்த நோய் தாக்க சாதகமாக இருக்கிறது. ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுடன் சின்னஞ்சிறு குழந்தைகளும் இந்தத் தொற்றுநோயால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே, யாருக்கேனும் தக்காளிக் காய்ச்சல் இருந்தால் வீட்டில் கைக்குழந்தைகள் வைத்திருப்பவர்கள் மிகவும் உஷாராக இருக்க வேண்டும்.

தக்காளி காய்ச்சல் என்பது கை, கால் மற்றும் வாய்ப் பகுதிகளில் ஏற்படும் நோய்த்தொற்றைக் குறிக்கப் பயன்படுகிறது. இது ஒரு மிதமான வைரஸ் தொற்று. பொதுவாக, 10 வயதுக்கு உட்பட்ட சிறு குழந்தைகளைப் பாதிக்கிறது.இந்தக் காய்ச்சல், ‘காக்ஸ்சாகி‘ எனப்படும் வைரஸால் ஏற்படுகிறது. இது, தோலில் சிவப்பு கொப்புளங்களை ஏற்படுத்துகிறது, அவை பெரியதாகவும் சிறு தக்காளியைப் போன்றும் இருக்கும். என்பதால் ‘தக்காளி காய்ச்சல்’ என்றழைக்கப்படுகிறது.

அறிகுறிகள்

* காய்ச்சல்

* மூட்டு வலி

* உடலில் சிவந்து தடித்தல்

உண்மையில் குழந்தைகளிடம் தொற்றியிருக்கும் வைரஸ், தக்காளி காய்ச்சல் தொற்றாக இருக்காது. மாறாக டெங்கு அல்லது சிக்குன்குனியா காய்ச்சலின் வெளிப்பாடாக இருக்கலாம். பொதுவாக, இந்த வயதுக் குழந்தைகளிடையே வைரஸ் தொற்றுகள் பரவலாக இருப்பதாலும், நெருங்கிய தொடர்பு மூலம் பரவுவதாலும், குழந்தைகள் தக்காளி காய்ச்சல் தொற்றுக்கு ஆளாக வாய்ப்பு அதிகம்.

அது மட்டுமில்லாமல், குழந்தைகள் டயபரைப் பயன்படுத்துகிறார்கள், அழுக்கு மேற்பரப்புகளைத் தொடுகிறார்கள், பல பொருட்களை நேரடியாக வாயில் வைப்பது போன்றவற்றால் அவர்களுக்கு அதிக ஆபத்து உள்ளது.

சிகிச்சைகள்

தக்காளி காய்ச்சலுக்கான சிகிச்சையானது சிக்குன் குனியா மற்றும் டெங்கு காய்ச்சலைப் போலவே உள்ளது. ஏனெனில், அவை ஒன்றுபோல் உள்ளன. இது மேலும் பரவாமல் இருக்க, நோய் குணமாகும் வரை நோயாளிகள் தனிமையில் இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். ஒரு குழந்தையிடம் அறிகுறிகள் தென்பட்டால், அவர்களை தனித்தனியாக வைத்திருக்க வேண்டும், அவர்கள் பயன்படுத்தும் பாத்திரங்கள், உடைகள், படுக்கைகளை வழக்கமாக சுத்தம் செய்துவர வேண்டும். அவர்கள் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

இதற்காக, அவர்களுக்கு ஜூஸ், எலெக்ட்ரால் கலவை, நீர் ஆகியவற்றை அதிகமாகக் கொடுக்க வேண்டும். மேலும் கொப்புளங்களை வெதுவெதுப்பான நீரில் சுத்தம் செய்ய வேண்டும். காய்ச்சல் அறிகுறிகளைக் குறைப்பதற்கு பாராசிட்டமால், சில பொதுவான அறிகுறிகளுக்கு அவ்வப்போது வேறு மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள்.

தடுக்க… தவிர்க்க!

பாதுகாப்பான தூரத்தைப் பராமரிக்கவும்: தக்காளி காய்ச்சல் நெருங்கிய தொடர்பு மூலம் பரவுகிறது. எனவே, பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து உரிய இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். அப்போதுதான் நோய் தொற்றுவதைத் தவிர்க்க முடியும். வீட்டில் ஒருவருக்கு தக்காளிக் காய்ச்சல் உருவானால் உடனடியாக அவரைத் தனிமைப்படுத்த வேண்டும். வாய்ப்பிருந்தால் மருத்துவமனையில் அனுமதிக்கலாம். அது தனிமைப்படுத்துவதற்கான நல்ல வழிமுறையாக இருக்கும்.

சரியான சுகாதாரத்தைக் கடைபிடிக்கவும்: குழந்தைகளுக்கு தக்காளி காய்ச்சல் இருந்தால் அதிக தண்ணீர் குடிக்க வேண்டும். எந்த வகையிலும், எந்த முறையிலும் நகங்களால் கொப்புளங்களை சொறிந்துவிடக் கூடாது. அப்படிச் செய்தால் இந்த தொற்றுநோய்க்கான ஆபத்து பெருமளவு அதிகரிக்கும். மேலும், அப்படிச் சொறியும்போது கொப்புளம் உடைந்து கிருமி வெளியேறி மற்றவர்களைத் தாக்கவும் வாய்ப்பாக இருக்கும்.

வீட்டு வைத்தியத்தைத் தவிர்க்கவும்: தக்காளிக் காய்ச்சலின் அறிகுறிகளைக் கண்டவுடன் மருத்துவரைச் சந்திப்பது உதவிகரமாக இருக்கும். சிவந்த தோல் கொப்புளங்கள், தோல் எரிச்சல், மூட்டு அசௌகரியம், மூக்கு ஒழுகுதல், அதிக காய்ச்சல், குமட்டல், உடல்வலி, இருமல், தும்மல், வயிற்றுப்போக்கு, சோர்வு ஆகியவை இதன் அறிகுறிகள். வீட்டு வைத்தியத்தை முயற்சிப்பதைத் தவிர்க்க வேண்டும். உடனடியாக, பாதிக்கப்பட்டவரை மருத்துவரிடம் கூட்டிச் செல்ல வேண்டும்.

Related Stories: