×

ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரியில் குண்டும், குழியுமான சாலையில் திணறும் ஆம்புலன்ஸ்கள்

நாகர்கோவில், ஜூன் 21:  ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்துக்குள் தார் சாலையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தினமும் ஏராளமான நோயாளிகள் வந்து செல்கிறார்கள். விபத்து, படுகாயம் உள்ளிட்ட நிலைகளில் உயிருக்கு ஆபத்தான கட்டத்தில் ஆம்புலன்சுகளில் பலர் இங்குள்ள அவசர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு வரப்படுகிறார்கள். ஏற்கனவே மருத்துவக்கல்லூரியின் பின்புற கேட் மூடப்பட்டு கிடப்பதால், பிரதான நுழைவு வாயில் வழியாகவே எல்லா ஆம்புலன்சுகளும் வர வேண்டும். நுழைவு வாயில் அருகே உள்ள மருத்துவக்கல்லூரியின் அலங்கார வளைவில் தொடங்கி அவசர சிகிச்சை பிரிவு, பொது மருத்துவ சிகிச்சை பிரிவு, பிரசவ வார்டு உள்ளிட்ட அனைத்து சிகிச்சை பிரிவுகளுக்கும் செல்லக்கூடிய சாலை மிகவும் மோசமாக உள்ளது. பல்வேறு இடங்களில் தார் முற்றிலும் இல்லாமல் மண் சாலையாக மாறி மழை காலங்களில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகின்றன.

சாலை மோசமாக இருப்பதால் நுழைவு வாயிலில் வேகமாக வரும் ஆம்புலன்ஸ் வேகம் குறைத்து உள்ளே வர வேண்டிய நிலை உள்ளது. உயிருக்கு போராடுகிறவர்களுக்கு ஒவ்வொரு வினாடியும் மிக முக்கியமானதாகும். எனவே ஆம்புலன்ஸ் வேகமாக வந்தால் மட்டுமே ஒரு சில உயிர்களை காப்பாற்ற முடியும். மருத்துவ கல்லூரி வளாகத்துக்குள் மோசமாக உள்ள சாலையில் ஆம்புலன்ஸ் குலுங்கி விழுந்து செல்வதால், உள்ளே உள்ள நோயாளி கடும் சிரமத்தை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி வளாக சாலையை நிரந்தரமாக சீரமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன் குண்டும், குழியுமான பகுதியில் சிமென்ட் போடப்பட்டு பேட்ஜ் ஒர்க் பார்த்தனர். ஆனால் இது நிரந்தர தீர்வாக அமைய வில்லை.  உடனடியாக தரமான வகையில் தார் சாலை அமைக்க வேண்டும் என நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதே போல் மருத்துவக்கல்லூரி கட்டிடத்தில் வர்ணம் பூசுதல், நீர் கசிவை சரி செய்தல், சிகிச்சை வார்டுகளில் உள்ள கட்டிட பிரச்னைகளை சரி செய்தல் உள்ளிட்ட பணிகளும் கிடப்பில் உள்ளன.

Tags :
× RELATED மழைநீர் வடிகாலில் கழிவை விட்ட...