அரசு மருத்துவமனை வார்டுகளில் மின் விசிறிகள் பழுதால் நோயாளிகள் அவதி

தர்மபுரி, ஜூன் 21: தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வார்டுகளில், மின்விசிறிகள் பழுதடைந்துள்ளதால், நோயாளிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். தர்மபுரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, கடந்த 2008ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 5 மாடிகள் கொண்ட இந்த மருத்துவமனைக்கு தர்மபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட 4 மாவட்டங்களை சேர்ந்த 3ஆயிரத்திற்கும் மேற்பட்ட புறநோயாளிகளும், 900 உள்நோயாளிகளும் தினசரி சிகிச்சை பெறுகின்றனர். மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை, ஆண்கள், பெண்கள் வார்டு, விபத்து அவசர சிகிச்சை வார்டு, கண், பல், எலும்பு, பிரசவம், பச்சிளங்குழந்தைகள் உள்பட 58 வார்டுகள் உள்ளன.

கடந்த ஒரு மாதமாத வார்டுகளில் மின்விசிறி பழுதடைந்துள்ளது. இதனால் நோயாளிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘தர்மபுரி அரசு மருத்துவமனை முதல் மாடியில் ஆண்கள், பெண்கள் சிகிச்சை பிரிவில் மின்விசிறிகள் இயங்குவதில்லை. மின்விசிறி பழுதடைந்தும், மின்விசிறி பழுது நீக்க கழற்றிய நிலையிலும் உள்ளது. இரவு நேரத்தில், கொசு தொல்லை அதிகமாக உள்ளது. பகலில் அனல் காற்று வீசுவதால், கடும் அவதிப்படுகிறோம். எனவே மருத்துவமனை நிர்வாகத்தினர், பழுதடைந்த மின்விசிறிகளை சரி செய்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.

Related Stories: