×

வேலூரில் விபத்து தவிர்ப்பு விழிப்புணர்வு பிரசாரம் ரயில் நிலையம், பள்ளி, பொது இடங்களில் நடந்தது திருச்சி ரயில்வே கோட்டம் சார்பில்

வேலூர், ஜூன் 20:திருச்சி ரயில்வே கோட்டம் சார்பில் நடமாடும் வாகனம் மூலம் ரயில் விபத்துக்களை தவிர்ப்பது குறித்து பள்ளி மாணவர்கள் மத்தியில் வீடியோ காட்சிகள் மூலம் நேற்று வேலூரில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

சமீப காலமாக ஓடும் ரயிலில் ஏறும்போது தவறி விழுந்து இறக்கும் சம்பவங்களும், ரயில் வரும்போது பாதையை கடக்கும்போது சிக்கி உயிரை இழக்கும் சம்பவங்களும், லெவல் கிராசிங்குகளில் கேட் மூடப்பட்டிருந்தும் அதை கடக்கும்போது விபத்தில் சிக்குவது, ஆளில்லா லெவல் கிராசிங்குகளில் ரயில் வருவதை சட்டை செய்யாமல் கடக்க முயன்று விபத்தில் சிக்குவது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து வருகிறது.

இதனால் நாடு முழுவதும் ரயில் விபத்துக்களையும், மனித தவறுகளால் ஏற்படும் ரயில்வேயை சார்ந்து ஏற்படும் உயிர்பலிகளையும் தடுத்து நிறுத்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ரயில்வேத்துறை இறங்கியுள்ளது. அதன்படி, தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்டம் சார்பில் விழிப்புணர்வு வாகன பிரசாரம் கடந்த 7ம் தேதி திருச்சியில் இருந்து தொடங்கியது.

இதில் வாகனத்தின் இருபக்கமும் ரயில் விபத்துக்கள், அதை சார்ந்த விபத்துக்களை தவிர்ப்பது தொடர்பான விளக்கப்படங்களுடன் கூடிய பலகைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. அதோடு வாகனத்தின் உள்ளேயும் அதுபோன்ற விளக்கப்படங்களும், விபத்து சம்பவங்கள் அடங்கிய புகைப்படங்களும், அந்த விபத்து நேர்ந்ததற்கான காரணங்களும் குறிப்பிடப்பட்டு வைக்கப்பட்டிருந்தன. இதுதவிர வீடியோ படங்களும் திரையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

இந்த வாகனம் திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை என்று ஒவ்வொரு ஊரிலும் ரயில் நிலையங்கள், சுற்றுலா தலங்கள், பொதுமக்கள் அதிகளவில் புழங்கும் ரயில்வே லெவல் கிராசிங்குகளில் நிறுத்தப்பட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நேற்று காலை வேலூர் கன்டோன்மென்ட் ரயில் நிலையம், டவுன் ரயில் நிலையம், வசந்தபுரம், கஸ்பா லெவல் கிராசிங்குகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

தொடர்ந்து வேலூர் கோட்டையில் வாகனம் நிறுத்தப்பட்டு அங்கு வந்த பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதுடன், வீடியோ காட்சிகளும் திரையிடப்பட்டது. மேலும், பள்ளி மாணவர்களுக்கு ரயில் விபத்துக்களை தடுப்பது தொடர்பாகவும், லெவல் கிராசிங்குகளை கடக்கும்போது நடந்து கொள்ள வேண்டிய முறைகள் என பல்வேறு விபத்து தடுப்பு நடைமுறைகள் குறித்தும், விபத்துக்கான காரணங்கள் குறித்தும் திருச்சி ரயில்வே கோட்ட சீனியர் லோகோ பைலட் வெங்கடாசலம், மெக்கானிக் குமாரவேலு ஆகியோர் விளக்கினர்.

Tags :
× RELATED சர்ச் பாதிரியார் அதிரடி கைது மதமாற்றம் செய்ய முயன்றதாக பெண் புகார்