கருத்தரித்தலை நோக்கி…வழிமுறைகள் என்னென்ன?

நன்றி குங்குமம் டாக்டர்

இந்தியாவில் தற்போது 10 முதல் 15% தம்பதியினர் கருவுறாமையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 1% தம்பதியினர் அதற்கான சிகிச்சையை மேற்கொண்டு வருகின்றனர். பொதுவாக, பெண்கள் பருவமடையும் போது  கருவுறுவதற்கான வாய்ப்புகள் தொடங்கிவிடுகின்றன. சராசரி பெண்ணின் இனப்பெருக்க வயது காலம் சுமார் 12 முதல் 51 வயது வரை இருக்கும். அதன் பின் கருவுறுதல் தன்மை இயல்பாகவே குறைகிறது. அதற்குப் பின் இயற்கையான முறையில் கருத்தரிப்பது கடினமாகும்.

எனினும் தம்பதியினருக்குக் கருவுறுதல் தாமதம் என்பது ஒரு வருடத்துக்கு மேல் ஏற்பட்டால் அதற்கு பல காரணங்கள் கூறலாம். இதற்குத் தீர்வு காண உடனடியாகப் பெண்கள் நல மருத்துவர் அல்லது கருத்தரித்தல் மருத்துவரிடம் மருத்துவ ஆலோசனை பெறலாம்.

கருத்தரித்தலுக்கான சிகிச்சை  வழிமுறைகள்

1.தம்பதி இருவரின் கருத்தரித்தல் சார்ந்த உடல் பரிசோதனைக்கு பிறகு கருத்தரித்தலுக்கான மருந்துகள்.

2.கருத்தரித்தல் உறுப்புகள் பிரச்சனை எனில் அதற்கான அறுவைசிகிச்சை.

3.ஐவிஎஃப், ஐசியுஐ, ஐயுஐ போன்ற செயற்கைக் கருத்தரிப்பு முறைகள்.

கருத்தரித்தலுக்கான முதற்படி  

குழந்தைப்பேறு பெற விரும்பும் தம்பதியினர் இயற்கையான முறையில் கருத்தரிக்க போதிய நேரம் எடுத்துக்கொள்ள வேண்டும், கருத்தரித்தல் சிகிச்சை தொடங்குவதற்கு முன்பு குறைந்தது 12 முதல் 18 மாதங்கள் கருத்தரித்தலுக்கு ஏதுவாக தங்களின் அடிப்படை வாழ்வியல் முறையை  மாற்றிக்கொள்ளவேண்டும். தகுந்த ஆலோசனைகளுடன் உடற்பயிற்சி மேற்கொண்டு உடற் பொருண்மை எண் (பிஎம்ஐ) சரியாக பராமரிக்க வேண்டும்.

ஆரோக்கியமான சரியான உணவுமுறை

ஆரோக்கியமான சரியான உணவு முறை மேற்கொள்வது மிகவும் அவசியம். இது கருத்தரித்தலுக்கு ஏற்றவாறு அமைய வேண்டும். உடல் எடை குறைதல், க்ராஷ் டயட், நச்சு நீக்குதல் (டிடாக்சிங்) போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். கருவுறுதல் திறனை மேம்படுத்தும் வகையில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

ஏகேஏ ஃபாலிக் ஆசிட், கருவளர்வதில் பெரும் பங்கு வகிக்கிறது. மேலும் ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்த உலர்ந்த பழங்கள், கொட்டைகள், விதைகள் உடலுக்கு ஊட்டச்சத்து அளிக்கிறது. காஃபி யில் உள்ள காஃபைனை தவிர்ப்பது நல்லது.

மாதவிடாய் சுழற்சி - கவனிக்க வேண்டியவை

பெண்கள் தங்களின் மாதவிடாய் சுழற்சியை நன்றாக அறிந்திருக்க வேண்டும். அத்துடன் எல்எச் ஹார்மோன்களை கண்காணிக்க வேண்டும். இந்த ஹார்மோன்கள், கருப்பையில் இருந்து ஒரு முட்டையை வெளியிடுவதையும் தூண்டச் செய்கிறது. இந்த தகவல்கள் அடிப்படையில் தம்பதியினர் குழந்தைப்பேறுக்கான முயற்சியில் ஈடுபட வேண்டிய சரியான நேரத்தை தேர்ந்தெடுக்கலாம்.

கருவுறுவதற்கான திட்டமிடல்

கருமுட்டைகள் வெளியேறும் நாளின் முன் இரவு மற்றும் அதனை தொடர்ந்து காலை மற்றும் மாலை, உடன் அடுத்த நாள் காலை மற்றும் மாலை வேளை களில் தம்பதியினர் குழந்தைப் பேறுக்கான முயற்சியில் ஈடுபடலாம். இதுவே கருவுறுவதற்கான சரியான நேரம் என கூறலாம்.குழந்தைப் பேறுக்காக ஈடுபடும் ஆண்கள் முன் 3 முதல் 4 நாட்களுக்கு விந்து வெளியேறுவதை தவிர்க்க வேண்டும். மேலும் தகுந்த கருத்தரிப்பு மருத்துவரை அணுகி ஆலோசனை பெறலாம்.

இயல்பான கருத்தரிப்பு

குழந்தை உண்டாக்குவதில் சிக்கல் ஏற்படும்போது இயல்பான முறையின் மூலம் கருத்தரிப்பு மருத்துவரின் ஆலோசனைக் கேற்ப கருத்தரித்தல் சிகிச்சை மேற்கொள்வது நல்ல பயன்களை தரும். எனினும், பெண்களுக்கு, கருத்தரிப்பு சார்ந்த உறுப்புகள் பாதிப்பு அடைந்துள்ள போது அதற்கு மேல்சிகிச்சை மிகவும் அவசியம் தேவைப்படும்.

இவற்றிற்கு அறுவை சிகிச்சை முறையில் சரி செய்து குழந்தை பேறு பெற வாய்ப்புள்ளது. இதையும் கடந்து, சில மருத்துவக் காரணங்களால் கருத்தரிக்க முடியாத பெண்களுக்கு  ஐவிஎஃப் போன்ற பல நவீன மருத்துவ சிகிச்சைகள் மூலம் அவர்கள் செயற்கையாக கருத்தரிக்க வாய்ப்பு உள்ளது.

கருத்தரித்தலுக்கான பயணம் ஒவ்வொருவருக்கும் மாறுபடும். இந்தப் பயணத்தில் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஆதரவும் பக்கத்துணையும் அவசியம் தேவை, மேலும் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு நேர்மறையான கருவுறுதல் பயணத்தை உருவாக்க வேண்டும். நம்பிக்கையுடன் சிகிச்சை மேற்கொண்டால் தாய்மை என்பது தொலைவில் இல்லை.

Related Stories: