குழந்தைகளுக்கான ஆர்த்ரைடிஸ்… தீர்வு என்ன?

நன்றி குங்குமம் டாக்டர்

ஓடுற பாம்பை மிதிக்கிற வயசு என்று இளம் பிராயத்தைச் சொல்வார்கள். ஆர்த்ரைடிஸ் என்ற மூட்டுவலி முதியவர்களுக்கு மட்டுமே வரும் என்றொரு தவறான நம்பிக்கை நம்மிடையே உள்ளது. ஆனால், இன்று சிறு குழந்தைகள்கூட ஆர்த்தரைடிஸ் எனும் மூட்டுப் பிரச்சனையால் அவதியுறுகிறார்கள்.  குழந்தைகளுக்கான ஆர்த்தரைடிஸ் எதனால் வருகிறது? இதற்குத் தீர்வு என்னவென விளக்குகிறார் எலும்பு மூட்டு மற்றும் விளையாட்டு மருத்துவ நிபுணர் ஏ.சண்முகசுந்தரம் அவர்கள்.

ஜூவனைல் ஆர்த்ரைடிஸ்

குழந்தைகளுக்கான மூட்டுவலி என்பதை ஆங்கிலத்தில் ‘Juvenile Arthritis’ என்பார்கள். இது, இன்று பதினாறு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளிடையே கணிசமாகக் காணப்படும் பொதுவான நிலை. இருப்பினும், இது ஒரு குறிப்பிட்ட நோய் அல்ல. பதின்வயது, பதின்வயதுக்கு முந்தைய குழந்தைகளிடையே ஏற்படும் அழற்சி, மூட்டு நோய்களுடன் தொடர்புடையவற்றைக் குறிப்பதற்கான பொதுச் சொல் இது. ஒரு குழந்தை மூட்டு வலியைப் பற்றி தொடர்ந்து புகார் கூறினாலோ அன்றாட பணிகளைச் செய்வதில் சிரமத்தை எதிர்கொண்டாலோ அந்தக் குழந்தைக்கு குழந்தைகளுக்கான ஆர்த்ரைடிஸ் இருக்க வாய்ப்பு உள்ளது. எனவே, தாமதிக்காமல் மருத்துவ உதவியை நாட வேண்டும்.

பெரும்பாலான குழந்தை மூட்டுவலி நிலைகள் நோயெதிர்ப்பு அமைப்புடன் தொடர்புடையவை. அவை ஆட்டோ இம்யூன் அல்லது தன்னியக்க அழற்சி நோய்களின் காரணமாக ஏற்படலாம். குழந்தைகளுக்கான மூட்டுவலியின் பெரும்பாலான நிலைகளில் மூட்டு வீக்கம், மூட்டுகளில் அழற்சி, வலி, உறுதியற்ற தன்மை​ ஆகியவற்றால் பாதிக்கப்படலாம்.

குழந்தைகளுக்கான மூட்டுவலி வகைகள்

குழந்தைகளுக்கான இடியோபதிக் மூட்டுவலி: குழந்தைகளுக்கு ஏற்படும் மூட்டுவலிகளில் இதுவும் ஒரு வகை. கைகள், கால்கள், மணிக்கட்டுகள், கணுக்கால், முழங்கால்கள் போன்றவற்றின் மூட்டுகளில் வலி மற்றும் வீக்கத்தை இது ஏற்படுத்துகிறது.குழந்தைகளுக்கான மையோசிடிஸ்: இந்த வகை மூட்டுவலியில் வீக்கம் ஏற்படுவதால் தசை பலவீனமடைகிறது. இது கண் இமைகள், தசைகளில் தடிப்புகளை ஏற்படுத்தலாம்.

குழந்தைகளுக்கான லூபஸ்: இது நோயெதிர்ப்பு அமைப்புடன் தொடர்புடைய ஒரு வகை மூட்டுவலி. இது ஆட்டோ இம்யூன் எனப்படும் நோய் எதிர்ப்பு மண்டலப் பிரச்சனைகளால் ஏற்படுகிறது. பெரும்பாலும் மூட்டுகள், தோல், சில நேரம் இதயம், சிறுநீரகம், நுரையீரல் போன்ற உறுப்புகளையும் பாதிக்கிறது.குழந்தைகளுக்கான ஸ்கெலரோடெர்மா: இந்த நிலையில் குழந்தைகளின் தோல் அதிகம் பாதிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட குழந்தை தடிமனான, கடினமான தோலைக் கொண்டிருக்கும்.

வாஸ்குலிடிஸ்: வாஸ்குலிடிஸ் என்பது ரத்த நாளங்களில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது. வீக்கமடைந்த ரத்தநாளங்கள் உடலில் சிக்கல்களையும் இதயம் தொடர்பான நோய் அபாயத்தையும் ஏற்படுத்தும். குழந்தைகளிடையே காணப்படும் வாஸ்குலிடிஸின் மிகவும் பொதுவான வடிவம் கவாசாகி நோய், ஹெனோச்-ஷோன்லீன் புர்புரா (HCP) ஆகியவை. ஃபைப்ரோமயால் ஜியா ஃபைப்ரோமயால் ஜியா தசை வலி, தசைகளில் விறைப்புத்தன்மையை ஏற்படுத்துகிறது. ஃபைப்ரோமயால்ஜியாவின் மற்ற அறிகுறிகளில் சோர்வு, தூங்குவதில் சிக்கல் ஆகியவையும் அடங்கும். இது சிறுமிகளிடையே காணப்படும். பருவமடைந்த பிறகு மிகவும் தீவிரமடையும்.

காரணங்கள்

பரம்பரையாக மரபணுக்கள் வழியாகத் தொடரும் பிரச்சினைகளுடன் வைரஸ்கள், பாக்டீரியாக்கள், பிற வெளிப்புற காரணிகள் தொடர்பு ஏற்படும்போது மூட்டுவலியை ஏற்படுத்துகின்றன. இந்த நிலையில் உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு வைரஸ்கள், கிருமிகளைத் தாக்குவதற்குப் பதிலாக அழற்சி ரசாயனங்களை வெளியிடுவதன் மூலம் ஆரோக்கியமான செல்கள், திசுக்களைத் தாக்கும்போது குழந்தைகளுக்கு மூட்டுவலி ஏற்படுகிறது. ஆரோக்கியமான செல்கள், திசுக்களையே பிரச்சனையை உண்டாக்கும் ஆதாரங்களாக நோயெதிர்ப்பு அமைப்பு தவறாக அடையாளம் கண்டு, அவற்றிற்கு எதிராக போராடும்போது எலும்புகளின் ஆரோக்கியம் அழிக்கப்படுகிறது.

பரிசோதனைகள்

எக்ஸ்ரேக்கள், ஸ்கேன்கள் போன்ற முறையான பரிசோதனைகள் மூலமும் அவசியம் எனில் ரத்தப் பரிசோதனை மூலமும் நோயின் தன்மையைக் கண்டறியலாம்.

சிகிச்சை

தொடக்க நிலையிலேயே கண்டறிந்தால் நல்ல தீர்வைப் பெற இயலும். ஆரம்பகால நோயறிதல், சிகிச்சைகள் மூலம் குழந்தைகளுக்கு நிவாரணம் அளித்து மேலும் சேதம் ஏற்படுவதைத் தடுத்துக்கொள்ள முடியும். எந்த அறிகுறிகளையும் புறக்கணிக்காமல் இருப்பது முக்கியம். ஏனெனில் இந்த நிலை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும், அத்துடன் இதனால் ஏற்படும் விளைவுகளை முழுமையாக மாற்ற முடியாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தொகுப்பு : ஜாய் சங்கீதா

Related Stories: