சீசன் முடிந்ததால் வெறிச்: கோடியக்கரையில் கடல் சீற்றம்.! மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

வேதாரண்யம்: கோடியக்கரையில் கடல் சீற்றமாக காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. சீசனும் முடிந்ததால் கோடியக்கரை வெறிச்சோடியது. நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் அக்டோபர் முதல் மார்ச் வரை மீன்பிடி சீசன் காலமாகும். இங்கு பல்வேறு ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான மீனவர்கள் வந்து தங்கி மீன்பிடித்து வந்தனர். நாள்தோறும் பிடிக்கப்படும் மீன்வகைகளான காலா, ஷீலா, வாவல், இறால், நண்டு வகைகள் டன் கணக்கில் ஆந்திரா, கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.

இந்நிலையில் கோடியக்கரை பகுதியில் வடக்கு திசை காற்று, தெற்கு திசை காற்றாக மாறுவதால் காற்றின் வேகம் அதிகரித்து வருவதோடு கடல் அலைகள் அளவுக்கு அதிகமாக எழும்பி கடல் சீற்றமாக காணப்படுகிறது. இதனால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. காற்று திசை மாறியதால் மீன்பிடி சீசன் நிறைவுக்கு வந்தது. இதனால் வெளியூர்களிலிருந்து வந்து தங்கி மீன்பிடித்த மீனவர்கள் சொந்த ஊருக்கு படகுகள் மற்றும் மீன்பிடி பொருட்களை எடுத்துக்கொண்டு புறப்பட்டு சென்றனர். 6 மாத கால மீன்பிடி சீசன் நிறைவடைந்ததால், பரபரப்பாக காணப்படும் கோடியக்கரை கடற்கரை தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது.

Related Stories: