ஆயிரக்கணக்கான வண்ண மலர்களுடன் தேக்கடியில் 15வது மலர் கண்காட்சி

கூடலூர்: ஆயிரக்கணக்கான வண்ண மலர்களுடன் தேக்கடியில் 15வது மலர்கண்காட்சி நேற்று மாலை முதல் தொடங்கியது. கேரள மாநிலம், தேக்கடி வேளாண் தோட்டக்கலை சங்கம், குமுளி பஞ்சாயத்து நிர்வாகம், மன்னாரத்தரை கார்டன், குமுளி வியாபாரிகள் சங்கம் இணைந்து நடத்தும் தேக்கடி 15வது மலர்கண்காட்சி தேக்கடி - குமுளி ரோடு, கல்லறைக்கல் மைதானத்தில் நேற்று மாலை தொடங்கியது.

மே 14ம் தேதி வரை நடைபெறும் இந்த மலர் கண்காட்சியில் ஆயிரக்கணக்கான மலர்கள், நூற்றுக்கணக்கான மருத்துவ மூலிகைச்செடிகள், அலங்காரச்செடிகள், தோட்டச்செடிகள், சமையலறை தோட்டம் அமைக்க தேவையான செடி, நாற்றுகள் அனைத்தும் பார்வையாளர்களை கவரும் வகையில் இடம் பெற்றுள்ளன. மேலும் கண்காட்சியில் வேளாண் கருத்தரங்கம், பார்வையாளர்களுக்கான மலர் அலங்கார போட்டிகள், சமையல் போட்டி, குழந்தைகள் விளையாட்டரங்கம், கண்காட்சி, இன்னிசைக்கச்சேரி, வீட்டு வளர்ப்பு விலங்குகளின் கண்காட்சி போன்ற பொழுதுபோக்கு அம்சங்களும் இடம் பெற்றுள்ளன.

இதுகுறித்து குமுளி பஞ்சாயத்து தலைவர் சாந்தி ஷாஜிமோன் கூறுகையில், ‘‘இம்முறை மலர் கண்காட்சியில் ‘பழமையை நோக்கி ஒரு பயணம்’ என்ற தலைப்பில் இக்கால தலைமுறைகள் மறந்து போன பாரம்பரிய உணவுகள், அம்மி, உரல் உள்ளிட்ட பழங்கால பொருட்கள் இடம் பெற்றுள்ளன. மேலும், போதையினால் ஏற்படுத்தும் தீமைகள் குறித்து போலீசாரின் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் இடம் பெற்றுள்ளது. கண்காட்சிக்கு 7 வயது வரை உள்ள சிறுவர்களுக்கு இலவசம். பெரியவர்களுக்கு கட்டணம் ரூ.60, பள்ளி மாணவர்களுக்கு 50 சதவீதம் கட்டண தள்ளுபடியும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.

Related Stories: