தாடண்டர் நகரில் அரசு அலுவலர்களுக்கு புதிய அடுக்குமாடி குடியிருப்பு ரூ.103 கோடியில் கட்டப்படும்: அமைச்சர் எ.வ.வேலு அறிவிப்பு

சென்னை: சைதாப்பேட்டை தாடண்டர் நகரில் 190 சி வகை அரசு அலுவலர்களுக்கான புதிய அடுக்குமாடி குடியிருப்பு ரூ.103 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் என அமைச்சர் எ.வ.வேலு அறிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவை 2023-24ம் ஆண்டிற்கான பொதுப்பணித்துறையின் மானிய கோரிக்கை மீதான விவாதங்களுக்கு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு பதிலளித்தார். மேலும், 17 புதிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். அவை பின்வருமாறு: சென்னை சைதாப்பேட்டை  தாடண்டர் நகரில் அரசு அலுவலர்களுக்கு இதுவரை 900 புதிய குடியிருப்புகள் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளன. தற்போது 190 பி வகை குடியிருப்புகளும், 190 சி வகை குடியிருப்புகளும் கட்டப்பட்டு வருகின்றன. 2023-24ம் ஆண்டு 190 சி வகை அரசு அலுவலர்களுக்கான புதிய அடுக்குமாடி குடியிருப்பு ரூ.103 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.

கீழ்பாக்கம் மனநல காப்பக மருத்துவமனை வளாகத்தில் உள்ள பொழுதுபோக்கு அரங்க பாரம்பரிய கட்டடம் ரூ.4.65 கோடியில் மறுசீரமைத்துப் புனரமைக்கப்படும். சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பழைய ஆவண அறை கோபுர பாரம்பரிய கட்டடம் ரூ.3.10 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைத்துப் புனரமைக்கப்படும். சென்னை கிண்டி கிங் நோய் தடுப்பு மருந்து மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் உள்ள இணைப்பு பாரம்பரிய கட்டடம் ரூ.5.25 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைத்துப் புனரமைக்கப்படும். மதுரையில் ஒரு புதிய பாரம்பரிய கட்டட மையம் மற்றும் பாதுகாப்புக் கோட்டம் மற்றும் சென்னை, வேலூர், திருநெல்வேலியில் புதிதாக மூன்று உபகோட்டங்கள் உருவாக்கப்படும்.

பொதுப்பணித்துறை கட்டடக்கலை அலகில் ஒரு இணைத் தலைமைக் கட்டடக் கலைஞர், ஓர் உதவிக்கட்டக் கலைஞர், 5 இளநிலைக் கட்டடக் கலைஞர் உள்ளிட்ட 8 பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும். பொதுப்பணித்துறையில் உள்ள மின் பிரிவினை மேம்படுத்துவதற்கு 5 புதிய மின் கோட்டங்கள், 15 புதிய மின் உபகோட்டங்கள், 10 மின் பிரிவுகள் 3 புதிய வானொலி உபகோட்டங்கள் திட்டம் மற்றும் வடிவமைப்பு வட்டத்தில் ஒரு புதிய மின் அலகு ஆகியவை தோற்றுவிக்கப்படும். தரக்கட்டுப்பாடு அலகினைப் பலப்படுத்தும் விதமாகத் திருச்சியில் ஒரு புதிய தரப்பட்டுப்பாடு கோட்டம் மற்றும் தஞ்சாவூர், திருவாரூரில் புதிய தரக் கட்டுப்பாடு உபகோட்டங்கள் உருவாக்கப்படும்.

     

கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி நிறுவன பராம்பரிய கட்டடம் ரூ.6.80 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைத்துப் புனரமைக்கப்படும். சிவகங்களை மாவட்டம், காரைக்குடி வட்டத்தில் உள்ள சங்கரபதி பாரம்பரிய கோட்டையை ரூ.9.09 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைத்துப் புனரமைக்கப்படும். மாநில அளவில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் தனியார் கட்டடக் கலைஞர்களின் தேர்ந்த பெயர் பட்டியல் தயாரிக்கப்படும். அரசுப்பொதுக் கட்டடங்களை திட்டமிட்டு நிர்மாணிப்பதில் புதிய வடிவமைப்புக் கொள்கை வெளியிடப்படும். ஆகிய அறிவிப்புகளை அமைச்சர் வெளியிட்டார்.

Related Stories: