போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு தீர்வாக ரூ.15 ஆயிரத்து 626 கோடி மதிப்பில் சென்னை எல்லை சாலை திட்டம்: 132.87 கி.மீ நீளத்தில் 6 வழி இரட்டை பாதையாக அமைகிறது

சென்னை: சென்னையில் போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு தீர்வாக, ரூ.15 ஆயிரத்து 626 கோடி மதிப்பில் சென்னை எல்லை சாலை என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்ற அறிவிப்பு, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை கொள்ளை விளக்க குறிப்பில்  வெளியாகியுள்ளது. தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டை கடந்த மாதம் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அதை தொடர்ந்து, தமிழ்நாடு சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. சட்டசபையில் ஒவ்வொரு நாளும் துறை ரீதியாக மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் உயர்கல்வி, பள்ளிக்கல்வித் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. தினசரி துறை ரீதியாக மானியக் கோரிக்கைகளைத் தாக்கல் செய்யும் அமைச்சர்கள் பல்வேறு அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறார்கள். அதன்படி நேற்று நெடுஞ்சாலைகள், சிறு துறைமுகங்கள் துறை, பொதுப்பணித்துறை, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்தது.

இதில், முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியானது. தலைநகர் சென்னையில் ஒவ்வொரு நாளும் போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. குறிப்பாக, பீக் ஹவர்ஸ் நேரத்தில் வெளியே சென்றால் நிச்சயம் குறிப்பிட்ட நேரம் டிராபிக்கில் மாட்டிக் கொள்ளும் சூழலே நிலவி வருகிறது. எனவே, சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சியுடன் சேர்ந்து எடுத்து வருகிறது. இதற்காக மெட்ரோ திட்டம், புதிய மேம்பாலங்கள் என்று பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், சென்னை எல்லை சாலை என்ற புதிய திட்டம் குறித்த அறிவிப்பு நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை கொள்கை விளக்க குறிப்பில் வெளியாகி உள்ளது.

மாநகராட்சியின் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், தமிழகத்தின் தென் பகுதியில் இருந்து வரும் வாகனங்களும் நேரடியாக எண்ணூர், காட்டுப்பள்ளி துறைமுகத்திற்கு செல்லும் வகையிலும் இத்திடம் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் வணிகம் மற்றும் தொழில் வளர்ச்சியை மேம்படும் என்றும் இதற்காகவே சென்னை எல்லை சாலை திட்டம் செயல்படுத்தப்படுவதாக கூறப்பட்டுள்ளது. 132.87 கிலோ மீட்டர் தொலைவுக்கு 6 வழி இரட்டை பாதையாக இது அமைய உள்ளது. மேலும், இருபுறமும் இருவழி சர்வீஸ் சாலைகளும் அமைய உள்ளது.

மொத்தம் ரூ.15,626 கோடி மதிப்பில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த சாலை திட்டம் மூலம் பொதுத்துறை மற்றும் தனியார் வாகனங்களை பயன்படுத்தும் மக்கள் பயன்பெறுவர் என்று கூறப்பட்டுள்ளது. இது நகரில் போக்குவரத்து மற்றும் பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தைக் குறைக்கவுள்ளது. மேலும், தற்போதுவரை இந்தத் திட்டத்திற்காக ரூ.550 கோடி செலவிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. சென்னையில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் மிகுதியாகவே காணப்படுகிறது. வணிக பயன்பாடு வாகனங்களும் நகர்ப்புறத்தில் செல்வதால் போக்குவரத்து பாதிப்பு மோசமாக இருக்கிறது. எனவே, இந்த சென்னை எல்லை சாலை திட்டம் செயல்பாட்டிற்கு வந்தால், நகரில் போக்குவரத்து நெரிசல் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: