படம் அல்ல வெப்சீரிஸ் காக்கா முட்டை மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி

சென்னை: காக்கா முட்டை டைரக்டர் மணிகண்டன் இயக்கத்தில் மீண்டும் நடிக்கிறார் விஜய் சேதுபதி. ஆனால் இது படம் கிடையாது. வெப்சீரிஸ் ஆகும். படங்களில் பிசியாக நடித்து வந்தாலும் இந்தியில் பர்ஸி என்ற வெப்சீரிஸில் விஜய் சேதுபதி நடித்தார். இதன் மூலம் அவருக்கு நல்ல புகழ் கிடைத்தது. இந்நிலையில் முதல்முறையாக தமிழ் வெப்சீரஸில் அவர் நடிக்கிறார். இதைத்தான் மணிகண்டன் இயக்குகிறார். காக்கா முட்டை, கிருமி, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை, கடைசி விவசாயி ஆகிய படங்களை இயக்கியவர் மணிகண்டன். இந்த படங்கள் அனைத்தும் சினிமா விமர்சகர்களாலும் ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டவை. வியாபாரத்துக்காக இல்லாமல் கலைப் படைப்புகளாக தனது படங்களை மணிகண்டன் உருவாக்கி வருகிறார்.

ஆண்டவன் கட்டளை, கடைசி விவசாயி படங்களுக்கு பிறகு அவருடன் மீண்டும் இந்த வெப்சீரிஸில் விஜய் சேதுபதி இணைகிறார். இது டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது. இந்த வெப் சீரிஸிற்கு இசையமைப்பாளர் ராஜேஷ் முருகேசன் இசையமைக்க, சண்முக சுந்தரம் ஒளிப்பதிவு செய்கிறார். அஜித் குமார் எடிட்டராகவும், இம்மானுவேல் ஜாக்சன் கலை இயக்குநராகவும் பணியாற்றுகிறார்கள். வெப் சீரிஸின் ஒலி வடிவமைப்பை அஜயன் கே. அடாத் மற்றும் ஆடை வடிவமைப்பை கவிதா கையாள்கின்றனர். இதில் நடிக்க உள்ள மற்ற நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

இதுகுறித்து விஜய் சேதுபதி இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ‘மணிகண்டன் இயக்கத்தில் ஹாட்ஸ்டாரில் நேரடியாக ஒளிபரப்பாக உள்ள சீரிஸில் நடிப்பது மகிழ்ச்சி. இது நேரடியாக நான் நடிக்கும் முதல் தமிழ் வெப் சீரிஸ்’ என தெரிவித்துள்ளார்.

Related Stories: