சுங்கச்சாவடிகளை அகற்றுவதில் அரசு உறுதியாக உள்ளது: அமைச்சர் எ.வ.வேலு தகவல்

சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளையும் முழுமையாக அகற்ற வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார். தமிழக சட்டப்பேரவையில், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, பொதுப்பணி துறை, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. விவாதத்தை தொடங்கி வைத்து பாலக்கோடு கே.பி.அன்பழகன் (அதிமுக) பேசியதாவது: இந்தியாவில் 816 சுங்கச்சாவடிகள் உள்ளன. நேற்று நள்ளிரவு 12 மணி முதல் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அமைச்சர் எ.வ.வேலு: தமிழகத்தில் 6,805 கிலோ மீட்டர் நீள நெடுஞ்சாலைகள் உள்ளது. இதில், 5,128 கி.மீ. நீள சாலையை ஒன்றிய அரசும், 1,677 கி.மீ. நீள சாலையை மாநில அரசும் பராமரித்து வருகிறது. தமிழகத்தில் 58 சுங்கச்சாவடிகள் உள்ளன. 38 சுங்கச்சாவடிகளில் இன்று (நேற்று) முதல் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 27 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1ம் தேதி முதல் கட்டணம் உயர்த்தப்படுகிறது. ஏற்கனவே போடப்பட்ட சட்டத்தின் அடிப்படையில் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்தபோதும் சுங்கக் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தினோம். 14 சுங்கச்சாவடிகளில் கட்டண வசூலை நிறுத்த கூறினோம்.

நகராட்சி பகுதிகளில் 10 கி.மீ. இடைவெளியில் உள்ள 5 சுங்கச்சாவடிகளை எடுக்க வலியுறுத்தினோம். இதுகுறித்து,  ஒன்றிய அரசுக்கு மார்ச் 18ம் தேதி கடிதம் அனுப்பியுள்ளோம். ஆனால், ஒன்றிய அமைச்சர் சுங்கக்கட்டணம் மூலம் வசூல் செய்வதற்கு பதில், புதிதாக App மூலம் கட்டணம் வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக கூறுகிறார். தமிழகத்தில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளையும் முழுமையாக அகற்ற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். பராமரிப்பு மேற்கொள்ளப்படும் பகுதிகளில் 40 சதவீதம் சுங்க கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்றும் தொடர்ந்து ஒன்றிய அரசை வலியுறுத்தி வருகிறோம். இவ்வாறு விவாதம் நடந்தது.

Related Stories: