தெப்ப திருவிழாவையொட்டி மலைக்கோட்டை பகுதியில் 120 கடைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்-மாநகராட்சி அதிரடி

திருச்சி : திருச்சி மலைக்கோட்டை தெப்பத் திருவிழாவையொட்டி 120 கடைகளில் ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.தென் கயிலாயம் என்று போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை மட்டுவார் குழலம்மை உடனுறை தாயுமான சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் பங்குனி உத்திரத்திற்கு முந்தைய நாளில் கோயில் தெப்பக்குளத்தில் தெப்பத்திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இதற்காக மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயிலில் இந்த ஆண்டு தெப்ப திருவிழா கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் வரும் 3ம் தேதி இரவு 7 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள் என்பதால் தெப்பக்குளத்தை சுற்றி உள்ள கடைகள் மற்றும் பெரியகடைவீதி, என்எஸ்பி சாலையில் உள்ள கடைகள் முன் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி முடிவு செய்தது. அதன்படி, வார்டு குழு அலுவலகம் 1ன் உதவி பொறியாளர் கணேஷ்பாபு தலைமையிலான மாநகராட்சி ஊழியர்கள் நேற்று கடைகள் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

இதில் பெரியகடைவீதியில் தைலா சில்க்ஸ் முதல் மலைக்கோட்டை வாசல் வரை மற்றும் என்எஸ்பி ரோடு முதல் கோட்டை வாயில் வரையிலான கடைகள் முன் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. இதற்கான ஜேசிபி மற்றும் டிப்பர் லாரி மற்றும் 30க்கும் மேற்பட்ட மாநகராட்சி பணியாளர்கள் பணியில் ஈடுபட்டனர். இதில் சுமார் 120க்கும் மேற்பட்ட கடைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு டிப்பர் லாரி மூலம் கொண்டு செல்லப்பட்டது.

அதனை தொடர்ந்து என்எஸ்பி ரோடு மற்றும் தெப்பக்குளத்தை சுற்றி உள்ள தரைக்கடைகள் குறித்து வழக்கு நிலுவையில் இருப்பதால் வியாபாரிகளே முன்வந்து அகற்றி கொள்வதாக கூறி அகற்றி வருகின்றனர். 3ம் தேதி நடைபெறவுள்ள தெப்ப உற்சவத்தை முன்னிட்டு ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டதால் பெரியகடைவீதி மற்றும் என்எஸ்பி சாலை பரபரப்பாக காணப்பட்டது.

Related Stories: