நாளுக்கு நாள் அதிகரிக்கும் புத்தக வாசிப்பு பழக்கம் நூலகத்தை நோக்கி படையெடுக்கும் இளைய தலைமுறை

*கூடுதல் புத்தகங்கள் வழங்க வேண்டும்

*கட்டிட வசதிகள் செய்து தர கோரிக்கை

வேடசந்தூர் : வேடசந்தூர் பகுதியில் உள்ள கிளை நூலகத்திற்கு அதிகளவில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் வரத்தொடங்கியுள்ளதால் கூடுதல் புத்தகங்கள் மற்றும் உட்கார்ந்து படிக்க போதுமான கட்டிட வசதிகள் செய்து தர வேண்டும் என புத்தக வாசிப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வேடசந்தூர் பகுதியில் சுமார் 11,000 க்கு மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர் அரசு அலுவலகங்கள் தனியார் நிறுவனங்கள் கல்லூரி பள்ளி மாணவ மாணவிகள் இளைஞர்கள் என சுமார் நகரப் பகுதியில் 50 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் வேடசந்தூர் நேருஜி நகரில் நூலகம் செயல்பட்டு வருகிறது. கிளை நூலகம் வேடசந்தூர் பேரூராட்சி அலுவலக மாடியில் செயல்பட்டு வந்தது அங்கே போதிய இடவசதி இல்லை என்று நேருஜி நகர் பகுதியில் கட்டிடம் அமைக்கப்பட்டு அங்கு நூலகம் செயல்பட்டு வந்தது.

இந்நூலகத்தில் பள்ளி, கல்லூரி மற்றும் தொழில் கல்வி என அனைத்து பாடப்பிரிவுகளுக்கு தேவையான அனைத்து புத்தகங்களும் சட்டப்படிப்புக்கு தேவையான சுமார் 14 வகையான சட்ட புத்தகங்களும் புது நூல்கள் மற்றும் வரலாற்று நூல்கள் என பல்வேறு வகையான புத்தகங்கள் உள்ள நிலையில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பொது அறிவு வளர்த்துக் கொள்வதற்கு நூலகம் வருவதை குறைத்து இருந்த நிலையில் செல்போன் பயன்படுத்தி அனைத்து தேவைகளையும் நிறைவு செய்து வந்த இளைய தலைமுறை தற்போது நூலகத்தை நோக்கி மீண்டும் பயணிக்க துவங்கியுள்ளனர்.

இதனால் தங்கள் படிப்பிற்கு தேவையான கல்லூரி புத்தகங்கள் விலை கொடுத்து வாங்க முடியாத நிலையில் உள்ள விலை உயர்ந்த புத்தகங்கள் நூலகத்தில் இருப்பதை அறிந்து தங்களுக்கு தேவையான குறிப்புகளை எடுத்துக் கொள்ள நூலகத்திற்கு வந்து பெண்கள் கல்லூரி மாணவிகள் இளைஞர்கள் ஆகியோர் பயன்படுத்தி வருகின்றனர்.தற்போது அந்த கட்டிடமும் போதிய இடவசதி இல்லை என்கிற நிலையிலும் அதே நேரத்தில் அதிக இளைஞர்கள் மாணவிகள் கல்லூரி மற்றும் பயிற்சி சம்பந்தமான நூல்களை எடுக்க படிப்பதற்கோ போதிய இடவசதி பற்றாக்குறை உள்ளது என்றும் அதிக இட வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்நிலையில் நூலகத்தின் வாசிப்பு திறனை மேலும் வலுப்படுத்தும் வகையில் நூல் நூலகத்தின் அலுவலராக உள்ள சரவணன் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு வகையான நிகழ்ச்சிகளை நடத்தி வாசிப்புத் திறனை மேம்படுத்தும் வகையில் அந்தந்த மாதங்களில் முக்கிய நிகழ்வுகளை குறித்து நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகள் கவிதைப்போட்டி கட்டுரை போட்டிகளை நடத்தி வருகிறார. இதனால் நூலகத்திற்கு வராமல் இருந்த நிலை மாறி தற்போது நூலகத்திற்கு மீண்டும் வரும் சூழ்நிலையை வளர்த்து வருகிறார் இதனால் இளைய தலைமுறை மற்றும் பொதுமக்கள் இளைஞர்கள் ஓய்வு பெற்ற அரசு பணி ஊழியர்கள் ஆகியோர் வாசிப்பு திறனை மீண்டும் துவங்கும் நிலையில் நூலகம் உள்ளது.

மேலும் நூலகத்தில் இருந்து சிறைச்சாலையில் உள்ள சிறை கைதிகளுக்கு நூல்களைப் படிக்க நூல்கள் வழங்கி வருகின்றனர் இந்த நூலகத்தில் சட்டம் சார்ந்த மற்றும் வரலாற்று நூல்கள் உள்ளன தற்போது உள்ள நிலையில் நீட் தேர்வு மற்றும் நுழைவு தேர்வுகள் கல்லூரி தேர்வு வங்கி தேர்வு போன்ற தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்ற நூல்களை வழங்கி நூலகத்தை நவீனமயமாக்கி பயன்படுத்தவும் வகையில் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

புத்தக வாசிப்பு குறித்து அறிஞர்கள்...

தான் வாசிக்கும் புத்தகத்தை படித்து முடிக்க வேண்டும் என்பதற்காக அறுவை சிகிச்சையை ஒரு மணி நேரம் தள்ளி வைத்தார் பேரறிஞர் அண்ணா. புரட்சிப்பாதையில் கைத்துப்பாக்கிகளைவிட பெரிய ஆயுதங்கள் புத்தகங்களே என்றார் லெனின். தான் தூக்கிலிடுவதற்கு ஒரு நிமிடம் முன்புவரை புத்தகம் வாசித்துக்கொண்டிருந்தவர் பகத்சிங். ஒரு கோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள் கேட்டபோது ஒரு நூலகம் கட்டுவேன் என்று கூறினார் மகாத்மா காந்தி.

உடலுக்கு எப்படி உடற்பயிற்சியோ அதுபோல மனப்பயிற்சி புத்தகவாசிப்பு என்றார் அறிஞர் சிக்மண்ட் பிராய்டு. ஒவ்வொரு படமும் நடிக்க ஒப்புக்கொள்ளும் போது வரும் முன்பணத்தில் முதல் நூறு டாலருக்கு புத்தகம் வாங்குவார் சார்லி சாப்லின். வேறு சுதந்திரம் வேண்டாம் சிறையில் புத்தக வாசிப்பை மட்டும் அனுமதிக்க வேண்டும் என்றார் நெல்சன் மண்டேலா. எங்கே நல்ல புத்தகங்கள் எரிக்கப்படுகின்றனவோ, அங்கு நல்ல மனிதர்கள் எரிக்கப்படுவார்கள் என்றார் சேகுவாரா.

Related Stories: