பெரியசோலையில் சுற்றுச்சூழல் சுற்றுலா பயிற்சி மையம் அமைப்பதை கண்டித்து 15 கிராம மக்கள் வனத்துறை அலுவலகத்தை முற்றுகை

கோத்தகிரி : கோத்தகிரியில் குயின்ஸ் கொனோபி என்ற இங்கிலாந்து அரசின் பசுமை நிழற்குடை அங்கீகாரம் பெற்ற பெரியசோலை வனப்பகுதியில் வனத்துறை சார்பில் சுற்றுச்சூழல் மையம் அமைக்கப்பதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.இதற்காக இங்கு குபாட்டா இயந்திரத்தை பயன்படுத்தி அரியவகை தாவரங்கள், செடி கொடிகள், மரங்களை வேரோடு பிடுங்கி, 15 கிராமங்கள் பயன்படுத்தக்கூடிய முக்கிய இயற்கை குடிநீர் ஆதாரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதனை கண்டித்து கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 15 கிராமத்தை சேர்ந்த மக்கள் நேற்று கோத்தகிரி வன அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.பொதுமக்கள் கூறுகையில், கோத்தகிரி பெரிய சோலை வனப்பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக உள்ளது. இங்கு கரடி, சிறுத்தை, காட்டு மாடு உள்ளிட்ட வனவிலங்குகள் ஏராளமானவை உள்ளன.

தற்போது பெரிய சோலை வனப்பகுதியில் இருந்து இயற்கை குடிநீரானது, கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகள், கேர்பெட்டா, புதூர், டானிங்டன், அரவேனு, தவிட்டு மேடு, ராப்ராய், ஜக்கனாரை, சக்கத்தா உள்ளிட்ட சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள பொதுமக்கள் தடையின்றி 24 மணி நேரமும் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது கோத்தகிரி பெரிய சோலை வனப்பகுதியில் இயற்கை சுற்றுச்சூழல் சுற்றுலா பயிற்சி மையம் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும், அப்படி இங்கு இயற்கை சுற்றுச்சூழல் சுற்றுலா பயிற்சி மையம் அமைத்தால் இயற்கையின் வளம் பாதிக்கப்படும் என்பதாலும் கோத்தகிரி வனத்துறையினரிடம் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து கோரிக்கை மனு அளித்திருந்தனர்.  

ஆனால் முறையாக பாதுகாக்கப்பட்டு வரும் பெரியசோலை வனப்பகுதியில் தனியார் வணிக நிறுவனமோ அல்லது சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் ஏதேனும் கட்டிடம் கட்டப்பட்டால் தேவையான அனைத்து வசதிகளும் இங்கேயே செய்யப்பட வேண்டும்.

அவ்வாறு செய்யப்பட்டால் அங்கு இயற்கையாக உருவாகக் கூடிய இயற்கை குடிநீர், வனம் மற்றும் வனத்தில் வாழக்கூடிய விலங்குகள் பெரும் சிரம்மத்தை அனுபவிக்க நேரிடும், அவ்வாறு வனப்பகுதியில் வாழும் விலங்குகள் தங்களுக்கு தேவையான உணவு மற்றும் குடிநீர் தேடி நகர்புற பகுதிகளுக்கு செல்ல வாய்ப்பு அதிகமாக உள்ளது.

எனவே இயற்கையை காக்கும் பொருட்டும், வருங்கால சந்ததியினர் எந்தவொரு வனவிலங்கு மோதல்களுக்கும் ஆளாக கூடாது மற்றும் வனத்தின் பாதுக்காப்பு முற்றிலும் பாதிக்கப்படும் என்பதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு விரைந்து இப்பகுதியில் நடக்கக்கூடிய இயற்கைக்கு பாதகம் விளைவிக்கும் நடவடிக்கையை தவிர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், என்றனர்.

Related Stories: