கும்மிடிப்பூண்டி வட்டாரத்தில் பூச்சி தாக்கிய நெல் வயல்கள் வேளாண்துறை அதிகாரிகள் ஆய்வு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் கடந்த 29ம் தேதி விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. அப்போது விவசாயிகள் நெல் வயல்களில் பூச்சி நோய் தாக்கியுள்ளதாக மனுக்களை வழங்கினர். இதனைத் தொடர்ந்து மாவட்ட கலெக்டர் உத்தரவின் போில் வேளாண்மை இணை இயக்குநர் சுரேஷ் தலைமையில், வேளாண்மை துணை இயக்குநர் (நுண்ணீர் பாசனம்) தபேந்திரன், வேளாண்மை அறிவியல் நிலைய பூச்சியியல் வல்லுநர் விஜயசாந்தி, கும்மிடிப்பூண்டி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்  டில்லிக்குமார், விதை ஆய்வாளர் உமாமகேஸ்வரி ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு நேற்று கும்மிடிப்பூண்டி வட்டாரத்தில் உள்ள ஏனாதிமேல்பாக்கம், குருவாட்டுச்சேரி, சின்ன சோழியம்பாக்கம் மற்றும் பெரிய சோழியம்பாக்கம் ஆகிய கிராமங்களில் பாதிக்கப்பட்ட நெல் வயல்களை பார்வையிட்டனர்.

இந்த கிராமங்களில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்படாத நெல் விதை ரகம் எம்பிஆர் 606 மகிந்திரா ஆந்திரா தனியார் விதை உற்பத்தி நிறுவனம் மூலம் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. மேலும் இந்த கிராமங்களில் விவசாயிகளால் எம்பிஆர் 606 நெல் ரகம் நடவு செய்யப்பட்டு 30 நாட்கள் ஆகியுள்ள நிலையில், தண்டு துளைப்பான் மற்றும் பச்சைப் பாசியினால் பாதிக்கப்பட்டு கருகிய நிலையில் உள்ள வயல்களை பார்வையிட்டு விவசாயிகளுக்கு உரிய பயிர் பாதுகாப்பு வழிமுறைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்கள். தண்டு துளைப்பான் பாதிக்கப்பட்ட வயல்களுக்கு அசாடிராக்டின் ஏக்கருக்கு 0.03 சதவிகிதம் 400 மில்லி லிட்டர் அல்லது குளோரோன்டிரா நிலிப்ரோல் ஏக்கருக்கு 60 மில்லி லிட்டர் பரிந்துரை செய்யப்பட்டது.

மேலும், பச்சைப்பாசியால் பாதிக்கப்பட்ட வயல்களுக்கு ஒரு ஏக்கருக்கு காப்பர் சல்பேட் 2 கிலோ உடன் 20 கிலோ மணல் கலந்து உபயோகிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. விவசாயிகளுக்கு நெல் மகசூல் பாதிப்பு ஏற்படா வண்ணம்  பாதிக்கபட்ட நெல் வயல்களை தினமும் பார்வையிடுமாறு கும்மிடிப்பூண்டி வட்டார வேளாண்மை உதவி இயக்குநருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் விவசாயிகள் தங்கள் வயலில் பூச்சி நோய் பாதிப்பு தென்பட்டால் உடனடியாக வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தினை அணுகி பயன்பெற வேண்டும் என வேளாண்மை இணை இயக்குனர் எல்.சுரேஷ் தெரிவித்துள்ளார்.

Related Stories: