தேனீ நஞ்சின் நோய் தீர்க்கும் பண்புகள்

நன்றி குங்குமம் தோழி

வாசகர் பகுதி

மனிதர்கள் தோன்றுவதற்கு பல கோடிஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய உயிரினம் தேனீக்கள். இவை மலர்களில் இருந்து தேன் என்ற அபூர்வ இயற்கையான பொருளை வழங்கி வருகிறது. தேன் ஒரு சிறந்த மருத்துவத்தன்மை கொண்டது என நாம் அறிவோம். அதுபோல தேனீ நஞ்சும் சிறந்த மருத்துவத்தன்மைகள் நிறைந்த ஒன்றாகும்.

*தேனீ கொட்டினால் அந்த இடத்தில் தீராத வலி ஏற்படும். ஆனால் பல்வேறு நோய்களுக்கு குறிப்பிட்ட அளவில் தேனீயை கொட்ட வைப்பதின் மூலம் தேவையான நஞ்சு உடலில் செலுத்தப்பட்டு நோய் குணமாக்கும் தன்மை உண்டாக்கப்படுகின்றன. குறிப்பாக கீழ்வாதத்துக்கு தேனீ நஞ்சு மிகச் சிறப்பான மருந்து என்று ஆய்வு கூறுகிறது.

*இதில் பார்மிக் அமிலம், ஹைட்ரோகுளோரிக் அமிலம், ஆர்த்தோபாஸ்பாரிக் அமிலம் உள்ளன. மேலும் ஹிஸ்டமின், டிரிப்டோபான், கந்தகம் போன்றவை உள்ளன. மேலும் நஞ்சில் ஆவியாகும் எண்ணெய், புரதங்கள், பாஸ்போலைஸ், வையாலுரோனிடேஸ் உள்ளது. தண்ணீரிலும், அமிலங்களிலும் எளிதில் கரையும் என்பதால் உலர் நிலையில் வைத்திருந்தால் பல ஆண்டுகள் அதன் நச்சுத்தன்மை பாதுகாக்கப்படும். இதில் மெக்னீசியம், பாஸ்பேட், செம்பு, கால்சியம் போன்ற தாதுப்பொருட்களும் உள்ளது.

*தேனீ நஞ்சு நரம்பு மண்டலத்தை ஊக்குவிக்கும். நோயெதிர்ப்பு சக்தியைக் கூட்டும். தொற்று நோய்களிலிருந்து பாதுகாப்பைத் தரும். நீண்டகால நோய்களை குணமாக்கும்.

*நரம்புக்கோளாறுகளை குணப்படுத்தும். சில வகை கண் நோய்களையும் சீர் செய்யும். கருவிழி சவ்வுப்படல அழற்சி, விழிவெண்படல அழற்சி போன்றவற்றை சரி செய்யும். சில வகை தோல் நோய்களை குணமாக்கும். வாதநோய், நரம்பு அழற்சி, ரத்த அழுத்தம், மூட்டுவலி, ஒற்றைத்தலைவலி போன்றவற்றை குணப்படுத்தும். ஆனால், எலும்புருக்கி, இதய நோய், நீரிழிவு நோய், மேகநோய் போன்றவற்றிற்கு தேனீ நஞ்சு ஏற்றதல்ல.

*தேனீயை விட்டு இயற்கையாக கொட்ட வைத்து பயன்பெறலாம். அல்லது தேனீ நஞ்சை ஊசி மூலம் தோலில் செலுத்தலாம். நஞ்சை மெழுகாகவோ, மருந்து வடிவிலோ, பவுடர் வடிவிலோ

பயன்படுத்தலாம்.

*தேனீக்களைப் பிடித்து கண்ணாடியின் மீது வைத்து அதன் மேல் குறைந்த அளவு மின்சாரம் செலுத்துவதன் மூலமும் நஞ்சு சேகரிக்கப்படுகிறது. ஒரு வகையான இடுக்கியை பயன்படுத்தியும் தேனீயிலிருந்து நஞ்சு எடுக்கப்படுகிறது.

*தேனீ நஞ்சை தவறான முறையில் பயன்படுத்தினால் தீங்கு ஏற்படும். நாமாகவே தேனீ நஞ்சு மருத்துவம் செய்யக்கூடாது. தேனீ நஞ்சு சிகிச்சையை தகுதி வாய்ந்த அனுபவமுள்ள மருத்துவர்தான் நடத்த வேண்டும். சிலருக்கு ஒரு முறை தேனீ கொட்டினால் கூட எதிர்வினை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே முழு அனுபவம் உள்ளவர்களிடம் இச்சிகிச்சையை பெறவேண்டும்.

தொகுப்பு : சா.அனந்தகுமார், கன்னியாகுமரி.

Related Stories: