ஏகாம்பரநாதர் கோயில் பங்குனி மாத விழாவில் அறுபத்து மூவர் உற்சவம் கோலாகலம்: இன்று தேரோட்டம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் பங்குனி உத்திர பிரமோற்சவத்தின் சிறப்பு நிகழ்வான அறுபத்து மூவர் உற்சவம் நேற்று காலை கோலாகலமாக நடைபெற்றது. இன்று காலை இரதோற்சவம் எனப்படும் தேரோட்டமும், இரவு மகா அபிஷேகமும் நடக்க உள்ளது. கோயில் நகரமான காஞ்சிபுரத்தில் பஞ்சபூத தலங்களில் மண் ஸ்தலமாக விளங்கும் ஏலவார்குழலி அம்மை உடனுறை ஏகாம்பரநாதர் சுவாமி கோயில் பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழா மார்ச் 25ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

14 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் காலை மற்றும் மாலை வேளைகளில் பவழக்கால் சப்பரம், சிம்ம வாகனம், சூரியப் பிரபை, சந்திரப்பிரபை, பூத வாகனம், தங்கமயில் வாகனம், நாக வாகனம், வெள்ளி இடப வாகனம், வெள்ளி அதிகார நந்தி சேவை, ஸ்ரீ கைலாசபீட இராவண வாகனம் ஆகிய வாகனங்களில் ஏலவார் குழலி உடனுறை ஏகாம்பரநாதர் எழுந்தருளி ராஜ வீதிகளில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதனை தொடர்ந்து விழாவின் சிறப்பு நிகழ்வாக நேற்று காலை அறுபத்து மூன்று நாயன்மார்கள் திருக்கூட்டத்துடன் கண்ணாடி விமானத்தில் எழுந்தருளி ராஜவீதிகளில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில், காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். இரவு பிரபல உற்சவமான வெள்ளித்தேர் உற்சவம் நடைபெற்றது.

இன்று காலை இரதோற்சவம், இரவு மகா அபிஷேகம், 2ம் தேதி காலை ஆறுமுகப்பெருமான் எடுப்பு ரதகாட்சி, மாலை 5 மணிக்கு பிட்சாடனர் தரிசனம், இரவு வெள்ளி குதிரை வாகனம், 3ம் தேதி பகல் ஆள்மேல் பல்லக்கு, இரவு தல மகிமை காட்சியான வெள்ளி மாவடி சேவை, 4ம் தேதி பகல் சபாநாதர் தரிசனம், இரவு பங்குனி உத்திரம் திருக்கல்யாணம் (5ம் தேதி விடியற்காலை), 5ம் தேதி பகல் கந்தப்பொடி உற்சவம், இரவு நூதன வெள்ளி உருத்திரகோடி விமானம், 6ம் தேதி பகல் புருஷாமிருக வாகனம், இரவு பஞ்சமூர்த்திகள் வீதியுலா, 7ம் தேதி பகல் சந்திரசேகரர் வெள்ளி இடத்தில் எழுந்தருளிச் சர்வ தீர்த்தத்தில் தீர்த்தவாரி, உற்சவ சாந்தி சிறப்பு, இரவு யானை வாகனத்துடன் கொடி இறக்கம் நடைபெறுகிறது‌.

மேலும், 8ம் தேதி பகல் 108 கலசாபிஷேகம், சங்காபிஷேகம், இரவு பொன் விமானத்தில் திருமுறை உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் வேல்மோகன், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் வான்மதி, உதவி ஆணையர் லட்சுமிகாந்தன் பாரதிதாசன், செயல் அலுவலர் முத்துலட்சுமி, ஆய்வர் பிரீத்திகா, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் வரதன், ஜெகன்நாதன், விஜயகுமார், வசந்தி சுகுமாரன் ஆகியோர் செய்து வருகின்றனர்.

Related Stories: