காவேரிப்பாக்கத்தில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது; கொங்கணீஸ்வரர் கோயில் புனரமைத்து கும்பாபிஷேகம் காண்பது எப்போது?

* ஆக்கிரமிப்பு வீட்டின் கழிவறையாக மாறிய விநாயகர் சன்னதி

* சிதிலமடைந்த கோயிலை சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை

காவேரிப்பாக்கம்: தொண்டை மண்டலத்தில் காஞ்சிக்கு அடுத்தபடியாக சிவ, விஷ்ணு ஆலயங்கள் அதிகம் காணப்படுவது, அவணி சதுர்வேத மங்கள் என்று அழைக்கப்படுகிற காவேரிப்பாக்கம் பகுதியில் தான். காவேரிப்பாக்கம் என்ற இந்த ஊரானது, பழங்காலத்தில் காவேரி பாகம் என்று அழைக்கப்பட்டு வந்துள்ளது. பின்னர் நாளடைவில் மருவி காவேரிப்பாக்கம் என்று தற்போது அழைக்கப்படுகிறது. இப்பகுதியில் ஊரின் நான்கு திசைகளிலும் கொங்கணீஸ்வரர் கோயில், முத்தீஸ்வரர் கோயில், பஞ்சலிங்கேஸ்வரர்கோயில், சோமநாத ஈஸ்வரர் கோயில் என்று நான்கு சிவன் கோயில்கள் பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்து வந்துள்ளனர்.

மேலும் இங்குள்ள கொங்கணீஸ்வரர் கோயில் 2ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயிலாக கருதப்படுகிறது. இக்கோயிலுக்கு பல்லவர்கள், சோழர்கள், கங்கர்கள், சம்புவராயர்கள், விஜயநகர பேரரசர்கள் என்று தங்கள் பங்களிப்பாக பல்வேறு பணிகளை மேற்கொண்டுள்ளதாக வரலாறு கூறுகிறது. மேலும் இக்கோயிலில் புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை அன்று சூரிய ஒளி மூலவர் மீது பட்டு, பக்தர்களுக்கு அற்புதமாக காட்சியளிக்கும் நிகழ்வு பரவசத்தை ஏற்படுத்தும். இக்கோயிலில் விராட தேசம், கொங்கணதேசம், அவந்தி தேசம், காந்தார தேசம், மத்ர தேசம் உள்ளிட்ட 56 தேசங்களை ஆண்ட மன்னர் கொங்கணர். போரில் அந்நாட்டின் யானைகள், குதிரைகள் இறந்துபோனது.

இதனை கண்ட கொங்கணர் விரக்தியடைந்து, துறவறம் பூண்டு கானகம் சென்று தவமிருந்தார். அப்போது, காகம் கொங்கணர் மீது எச்சம் செய்தது. அப்போது காகத்தை கோபத்துடன் பார்த்தபோது, காகம் எரிந்து சாம்பலானது. இந்த கொங்கணர் ஒரு நாளைக்கு ஒரு வேளை, ஒரு வீட்டில் மட்டுமே யாசித்து உணவருந்தும் பழக்கத்தை கொண்டுள்ளார். அப்போது இங்குள்ள சைவப் புரம் என்கிற கொண்டாபுரத்தில் திருவள்ளுவர் மனைவி வாசுகி வீட்டில் யாசித்தபோது காலதாமதமானதால் கொங்கணர் கோபத்துடன் பார்த்துள்ளார். அப்போது வாசுகி கொங்கணரை நோக்கி, ‘என்னை கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா’ என வினவியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கோபம் தணிந்து, கானகத்தில் நடந்த ஒரு சம்பவம், வீட்டில் உள்ள பெண்ணிற்கு எப்படி தெரியும் என்று நினைத்து அவரின் பக்தியை போற்றியுள்ளார். பின்னர் இங்குள்ள ஈசனை சில காலம் வழிபாடு செய்து வந்தார். இதனால் அந்த கோயில் கொங்கணீஸ்வரர் கோயில் என்றே அழைக்கப்பட்டது. இறுதியில் திருப்பதி மலையடிவாரம் சென்று ஜீவ சமாதி அடைந்துள்ளார். மேலும் இந்த ஊர் பழங்காலத்தில் ஆன்மீகத்திலும், விவசாயத்திலும் கொடிகட்டி பறந்த ஊராக இருந்துள்ளது.

இப்படி சிறப்பு மிக்க ஊரில் அமைந்துள்ள கொங்கணீஸ்வரர் கோயில், கோட்டை கோயில் என்றும், இக்கோயில் சுமார் 2ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயில் என்றும் போற்றப்படுகிறது. இக்கோயிலில் தற்போது ஒருகால பூஜையும் இன்றி கைவிடப்பட்டு கேட்பாரற்று, ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி சிதிலமடைந்து வருகின்றன. இக்கோயிலின் முன் பகுதியில் இருந்த விநாயகர் சன்னதி, கோயிலை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீட்டின் கழிவறை கட்டிடமாக மாறியுள்ளது. இதனால் இங்கிருந்த விநாயகர் கோயிலுக்குள் இடம் தேடி அமர்ந்துள்ளார்.

இதேபோல் 5 ஏக்கர் நிலப்பரப்பில் இருந்த கோயில் வளாகம் தற்போது ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி குடியிருப்புக்களாக மாறியதால் விஷ்ணு, உள்ளிட்ட நவக்கிரக சிலைகள் என்று அனைத்து பரிவார தெய்வங்களின் சிலைகளும் கோயில் அர்த்தமண்டபத்தில் வரிசையாக அணிவகுத்துள்ளன. இதேபோல் கோயிலின் குளமும் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி, வீட்டின் கழிவுநீர் வெளியேறும் குளமாக மாறியுள்ளது. இந்த பிரமாண்ட கோயில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.

இப்பகுதியைச் சேர்ந்த இந்து முன்னணி பிரமுகர் விஸ்வநாதன் தலைமையில் சிவ பக்தர்கள் மற்றும் இந்து முன்னணியினர் சார்பில் கோயில் வளாகத்தில் இருந்த முள்புதர்கள் அகற்றி சீரமைப்பு செய்யும் பணியை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து சிவ பக்தர்கள் பொதுமக்கள் உள்ளிட்டவர்களிடம் நிதி ₹5 லட்சம் வரை திரட்டி கோபுரங்கள் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர். அப்போது கோயில் வளாகத்தில் ஆக்கிரமிப்பு செய்திருந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பணிகள் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக தற்போது மீண்டும் கோயில் வளாகத்தில் முட்புதர்கள் மண்டி கோயில் சிதிலமடைந்து வருகின்றன.

காவேரிப்பாக்கத்தின் வரலாறு மற்றும் புராண சிறப்புமிக்க கொங்கணேஸ்வரர் கோயிலை சிதலம் அடைவதில் இருந்து காப்பாற்ற, இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு திருப்பணிகள் மேற்கொண்டு கும்பாபிஷேகம் நடத்த வேண்டும்.  முன்னதாக இக்கோயிலுக்கு சொந்தமான இடங்களை முழுவதுமாக மீட்பதுடன், கோயிலை சுற்றி நடந்துள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி கோயில் திருக்குளத்தையும் மீட்டெடுக்க வேண்டும் என்று காவேரிப்பாக்கம் பகுதி சிவ பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் தமிழகத்தில் உள்ள மிகவும் பழமைவாய்ந்த கோயில்கள் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். இதனையடுத்து ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் உள்ள கொங்கணீஸ்வரர் கோயில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள ₹24 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும், அதற்கான டெண்டர் அடுத்த மாதம் நடைபெற இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த தகவல் பொதுமக்கள் மத்தியிலும் சிவபக்தர்கள் மத்தியிலும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே வரலாறு மற்றும் புராண சிறப்பு மிக்க இக்கோயிலை விரைவாக புனரமைப்பு செய்து, கோயில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்பது இப்பகுதி பொதுமக்கள், மற்றும் சிவபக்தர்கள், சமூக ஆர்வலர்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது. இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘ெகாங்கணீஸ்வரர் கோயில் புனரமைக்க ேவண்டும் என்பது பக்தர்களின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது. இதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் ஆக்கிரமிப்புகளை அகற்றவும் நடவடிக்ைக எடுக்கப்படும், என்றார்.

கோயிலுக்கு சொந்தமான 30 கடைகள், 40 ஏக்கர் நிலம்

கொங்கணீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமாக பஜார் வீதியில் 30க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இதேபோல் 40ஏக்கர் நிலப்பரப்பில் விவசாய நிலங்களும் உள்ளன. இப்படி அந்த காலத்திலேயே கோயிலை பராமரிப்பதற்காக நிலங்களுடன் ஏராளமான சொத்துக்கள் இருந்தும், கோயில் சிதிலமடைந்து ஒரு கால பூஜை கூட இல்லாமல் பாழடைந்து கிடப்பது மக்களை வேதனையில் ஆழ்த்தி உள்ளது. எனவே இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

₹30 லட்சம் நிதி அரசு திரும்பியது

கொங்கணீஸ்வரர் கோயிலை சீரமைக்க, அப்பகுதியில் உள்ள சிவபக்தர்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இதன்காரணமாக கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ₹30 லட்சம் வரை இந்த கோயிலை புனருத்தாரணம் செய்ய ஒதுக்கீடு செய்ததாகவும், ஆனால் கொரோனா காலத்தினால், பணிகள் தொடங்கப்படாததால் அந்த நிதி மீண்டும் அரசுக்கே திரும்பி சென்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. எனவே கொங்கணீஸ்வரர் கோயிலை புனரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: