விழுப்புரத்தில் அப்பாவி இளைஞர் இப்ராஹிம் துரதிருஷ்டவசமாக தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்தார் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்!!

சென்னை : தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், இன்று (30-3-2023) விழுப்புரத்தில் இஸ்லாமிய நபர் கத்தியால் தாக்கப்பட்டு உயிரிழந்தது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார். அவர் உரையில் பேசியதாவது, விழுப்புரத்தில் இஸ்லாமிய நபர் கத்தியால் தாக்கப்பட்டு உயிரிழந்தது பற்றிய அந்தச் செய்தியை,  எதிர்க்கட்சித் தலைவர் அவர்களும் மற்றும் உறுப்பினர் திரு. சிவக்குமார் அவர்களும் இந்த அரசினுடைய கவனத்திற்குக் கொண்டு வந்திருக்கிறார்கள். அதற்குரிய விளக்கத்தை நான் தங்கள் வாயிலாகத் தெரிவிக்க விரும்புகிறேன்.

விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் மேற்கு காவல் நிலைய சரகம், G.R.P தெருவைச் சேர்ந்தவரும், எம்.ஜி ரோட்டில் பழக்கடை நடத்தி வருபவருமான ஞானசேகர் என்பவருக்கு சாந்தி என்ற மனைவியும், ராஜசேகர், வல்லரசு என்ற இரண்டு மகன்களும் உள்ளனர்.   இந்நிலையில், ஞானசேகருக்கு வேறோரு பெண்ணிடம் தொடர்பு இருப்பதாகவும், அதனால் பழக்கடையில் வரும் வருமானத்தைக் குடும்பத்திற்குத் தருவதில்லை என்றும், சாந்தி தனது மகன்களிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, 29-3-2023 அன்று மாலை, ராஜசேகர் மற்றும் வல்லரசு  ஆகியோர் தனது தந்தையிடம் இதுகுறித்துக் கேட்க பழக்கடைக்குச் சென்றபோது, அங்கு அவர் இல்லாததால், அங்கிருந்தவர்களிடம் கேட்டு பிரச்சினை செய்திருக்கிறார்கள். அப்போது அப்பிரச்சனையில் தலையிட்ட இப்ராஹிம் என்பவரை வல்லரசு மற்றும் ராஜாசேகர் ஆகியோர் கத்தியால் குத்தி, காயம் ஏற்படுத்தியதாகத் தெரிகிறது. இச்சம்பவத்தில் காயம்பட்ட இப்ராஹிம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லக்கூடிய வழியில் உயிரிழந்திருக்கிறார்.  இச்சம்பவத்தில் ஈடுபட்ட வல்லரசு மற்றும் ராஜசேகர் ஆகியோர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.  காவல் துறையினர் மேல் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.  

இது தனிப்பட்ட குடும்பப் பிரச்சினையின் காரணமாக ஏற்பட்ட தகராறின் போது, அங்கு தடுக்க வந்த நபர், துரதிருஷ்டவசமாக தாக்குதலுக்கு உள்ளாகி, உயிரிழந்திருக்கக்கூடிய சம்பவம் என்பதைத் தங்கள் வாயிலாக இந்த அவைக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்,என்றார்.

Related Stories: