வேலூர் கீழ்மொணவூர் சர்வீஸ் சாலையோரம் குப்பை, மருத்துவ கழிவுகளுடன் இறந்து கிடந்த கன்றுக்குட்டி வீச்சு

*துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் அவதி

வேலூர் : வேலூர் கீழ்மொணவூர் சர்வீஸ் சாலையோரம் குப்பை, மருத்துவ கழிவுகளை தொடர்ந்து, இறந்த கன்றுக்குட்டி மர்ம ஆசாமிகள் வீசிவிட்டு சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.வேலூர் மாநகராட்சியில் தினமும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலம் வீடு, வீடாக சென்று மக்கும், மக்காத குப்பைகளாக தரம் பிரித்து சுமார் 200 டன் வரை குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. இதனை மாநகராட்சியில் உள்ள திடக்கழிவு மேலாண்மை மையங்களுக்கு கொண்டு சென்று உரம் தயாரிக்கப்படுகிறது. அதிகளவிலான குப்பைகள் மாநகராட்சியில் சேகரிக்கப்படுவதால், திடக்கழிவு மேலாண்மை மையங்களில் குப்பைகள் தேங்கிக்கிடக்கிறது.

வேலூர் பகுதிகளில் உள்ள கறிக்கடைகள் உட்பட பல்வேறு இடங்களில் சேரும் குப்பைகளை பலர் சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரம் கொட்டி வருகின்றனர். குறிப்பாக கொணவட்டம், சதுப்பேரி, கீழ்மொணவூர் ஆகிய பகுதிகளில் சர்வீஸ் சாலையோரம் இறைச்சி கழிவுகள், மருத்துவ கழிவுகள் அதிகமாக கொட்டப்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. குப்பை கொட்டுவதை தடுக்க அதிகாரிகள் பலமுறை எச்சரிக்கை விடுத்தும் எந்த பயனும் ஏற்படவில்லை.

இந்நிலையில், குப்பை, இறைச்சி, மருத்துவ கழிவுகளை தொடர்ந்து, நேற்று இறந்து போன கன்றுக்குட்டி மர்ம ஆசாமிகள் வீசிவிட்டு சென்றுள்ளனர். இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் அங்குள்ள பொதுமக்கள் மற்றும் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், `கொணவட்டம், கீழ்மொணவூர் ஆகிய பகுதியில் உள்ள இறைச்சி கடைகள் மட்டுமின்றி அருகே இருக்கும் பகுதிகளில் இருக்கும் கடைகளில் இருந்தும் கழிவுகளை மூட்டைகளில் கட்டி வீசி விடுகின்றனர். மேலும் மருத்துவ கழிவுகளை கொட்டி விட்டு செல்கின்றனர்.

இந்நிலையில், இறந்து போன கன்றுக்குட்டி சாலையோரம் வீசி உள்ளனர். இதனால் சர்வீஸ் சாலை முழுவதும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதுதொடர்பாக பல முறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் இதுவரை எந்ததொரு நடவடிக்கையும் இல்லை. இதனால் குப்பை, இறைச்சி, மருத்துவ கழிவுகள் தொடர்ந்து சாலையோரம் வீசிவிட்டு செல்கின்றனர். இனியாவது அதிகாரிகள் இந்த விஷயத்தில் மவுனம் காக்காமல் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

சிசிடிவி கேமராவால் கழிவு கொட்டுபவர்களை பிடிக்கலாம்

வேலூர் மாநகரின் பல பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் மாநகரில் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்களில் தொடர்புடைய நபர்களை அடையாளம் காணப்பட்டு கைது செய்வதற்கு உதவியாக உள்ளது. அதேபோல், மாநகராட்சி எல்லை ஆரம்ப பகுதியாக உள்ள கீழ்மொணவூர், மேல்மொணவூர், கொணவட்டம் பகுதியில் சர்வீஸ் சாலையோரம் சிசிடிவி கேமரா வைப்பதன் மூலம் குப்பை மற்றும் மருத்துவ கழிவுகளை கொட்டுபவர்களை அடையாளம் கண்டும் அவர்களுக்கு அபராதம் விதிக்கவும், போலீஸ் நடவடிக்கை எடுக்க உதவியாக இருக்கும். எனவே இப்பகுதியில் சிசிடிவி கேமரா வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: