திருவள்ளூர் மாவட்டத்தில் ஏரி மண்ணை பயன்படுத்த விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் ஏரி மண்ணை தூர்வாரி பயன்படுத்த விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்திருப்பதாவது: திருவள்ளூர் மாவட்டத்தில் நீர்வளத்துறை பராமரிப்பில் உள்ள 429 ஏரிகளிலும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 44 ஏரிகளிலும் அமைந்துள்ள களிமண், வண்டல் மண், சாதாரண மண், கிராவல் மண் போன்ற சிறுகனிமங்களை தூர்வாரி விவசாயம், மண்பாண்ட தொழில் மற்றும் வீட்டு உபயோக பயன்பாட்டிற்காக இலவசமாக எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்படும்.  

எனவே விண்ணப்பதாரர்கள் உரிய ஆவணங்களுடன், மண்பாண்ட தொழிலாளர்கள் சங்க சான்று, கிராம நிர்வாக அலுவரிடம் நில உரிமை குத்தகையில் பயிரிடுவதற்கான சான்று பெற்று விண்ணப்பிக்க வேண்டும். மனுதாரரின் வசிப்பிடம் அல்லது வேளாண் நிலம் அமைந்துள்ள கிராமமும், வண்டல் மண்ணை தூர்வாரி எடுத்துச் செல்ல அனுமதி கோரும் நீர்நிலைகள் உள்ள பகுதியும் அதே வருவாய் கிராமம் அல்லது அதற்கு அருகிலுள்ள வருவாய் கிராமத்தில் அமைந்திருக்க வேண்டும். மேலும் விவசாய பயன்பாட்டிற்கு இலவசமாக வழங்கப்படும் மண்ணின் அளவு விவசாய பயன்பாட்டிற்கு 1 ஏக்கர் நன்செய் நிலத்திற்கு வண்டல் மண், களிமண் 25 டிராக்டர் லோடுகள் என்ற அளவில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்படும்.

விவசாய பயன்பாட்டிற்கு 1 ஏக்கர் புன்செய் நிலத்திற்கு வண்டல் மண், களிமண் 30 டிராக்டர் லோடுகள் என்ற அளவில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்படும். வீட்டு உபயோக மற்றும் மண்பாண்ட தொழில் பயன்பாட்டிற்கு, வீட்டு உபயோக பயன்பாட்டிற்கு சாதாரண மண், கிராவல் மண் 30 கன மீட்டருக்கு மிகாமல் எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்படும். இதுகுறித்த  கூடுதல் விவரங்களை சம்பந்தப்பட்ட வட்டாட்சியர்கள், புவியியல் மற்றும் சுரங்கத்துறை துணை இயக்குநர்களை தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம்.

இந்த அனைத்து நடைமுறைகளும் அரசின் வழிகாட்டுதல் மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டு அனுமதி வழங்கப்படும். அனுமதி வழங்கப்பட்ட வண்டல் மண்ணை பிற பயன்பாட்டிற்கு பயன்படுத்தக் கூடாது. பிற பயன்பாட்டிற்கு பயன்படுத்துவது தெரியவந்தால் சட்டத்திற்கு புறம்பானது என கருதி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related Stories: