போலி சான்றிதழ் கும்பலில் அதிமுக ஒன்றிய செயலாளர்

தூத்துக்குடி: தூத்துக்குடி இந்திராநகரை சேர்ந்தவர் வந்தியத்தேவன் (64). இவர் தனது உறவினரின் கிரைய ஆவணம் தொலைந்து விட்டதாகவும், அதற்கு காவல் நிலையத்தில் மனு ரசீது பெற முயன்றார். அவரை  தூத்துக்குடி இந்திராநகரை சேர்ந்த  மகாராஜன், புதியம்புத்தூரை சேர்ந்த பொன்ராஜ் (66) என்பவரிடம் அழைத்துச்சென்றுள்ளார். அவர்கள் திரவியபுரம் மறவன்மடம் பகுதியை சேர்ந்த கிறிஸ்டோபர் (56), சிலுவைப்பட்டி இம்மானுவேல் (59), சுப்பையா முதலியார்புரம் பெருமாள் (54), ரஹ்மத்துல்லாபுரம் காளீஸ்வரன் (61) ஆகியோரை வந்தியத்தேவனிடம் அறிமுகம் செய்து ரூ. 30 ஆயிரம் பெற்றுக்கொண்டு போலியான தென்பாகம் காவல் நிலைய மனு ரசீது வழங்கியுள்ளனர்.  

பின்னர் வந்தியத்தேவன் ஆவணம் தொலைந்து விட்ட சான்று வேண்டி மீண்டும் மகாராஜனிடம் கேட்டபோது அவர் வந்தியத்தேவனை பெருமாள் வீட்டிற்கு அழைத்துச் சென்று வீட்டின் வெளியே நிற்க வைத்துள்ளார். வெகுநேரம் ஆனதால் வந்தியத்தேவன் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பொன்ராஜ், கிறிஸ்டோபர், இம்மானுவேல், பெருமாள், காளீஸ்வரன் மற்றும் புஷ்பாநகர் அசோகர் (65) ஆகியோர் சேர்ந்து அங்கு தாசில்தார், துணை தாசில்தார், தலைமையிடத்து தாசில்தார், கிராம நிர்வாக அலுவலர், பள்ளி நிர்வாக அலுவலர் போன்றோரின் போலி ரப்பர் ஸ்டாம்ப் முத்திரைகளையும், சொத்துவரி ரசீதுகள், மாநகராட்சி பிறப்பு, இறப்பு சான்று, வீட்டுவரி ரசீது, நத்தம் பட்டாக்கள், மருத்துவமனையில் வழங்கப்படும் பிறப்புச்சான்றிதழ், பள்ளி மாற்றுச்சான்றிதழ்கள், கிராம கணக்கு அடங்கல் கணக்கு புத்தகத்தாள்கள் போன்ற பல்வேறு போலிச் சான்றிதழ்களை தயார் செய்து போலி ரப்பர் ஸ்டாம்ப் முத்திரைகளை பயன்படுத்தி போலி ஆவணம் தயார் செய்தது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து வந்தியதேவன் அளித்த புகாரின் பேரில் தென்பாகம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் அசோகர், பொன்ராஜ், கிறிஸ்டோபர், இம்மானுவேல் மற்றும் காளீஸ்வரன் ஆகிய 5 பேரை கைது செய்து பல்வேறு போலி சான்றிதழ்கள் மற்றும் நூற்றுக்கணக்கான ரப்பர் ஸ்டாம்புகளை பறிமுதல் செய்தனர். கைதான பொன்ராஜ், ஓட்டப்பிடாரம் ஒன்றிய அதிமுக செயலாளர் என்பதும், எடப்பாடி அணியை சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்டர்நெட் சென்டர் உள்ளிட்ட பகுதிகளிலும்,  பொன்ராஜிக்கு சொந்தமான ரப்பர் ஸ்டாம்ப் செய்யும் கடையிலும் போலீசார் சோதனை  நடத்தினர்.  தலைமறைவான பெருமாள், மகாராஜன்  மற்றும் இன்டர்நெட் சென்டர் நடத்தி வரும் இருவர் என 4 பேரை போலீசார் தேடி  வருகின்றனர்.

Related Stories: