ரயில் இன்ஜின் அருகில் புகை பயணிகள் அலறி அடித்து ஓட்டம்-அரக்கோணத்தில் பரபரப்பு

அரக்கோணம் : ரயில் இன்ஜின் அருகில் இருந்து புகை வந்ததால் பயணிகள் அலறி அடித்து ஓடினர். இதனால் அரக்கோணம் ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னையில் இருந்து அரக்கோணம் வழியாக மும்பை செல்லும் மும்பை ரயில் நேற்று மதியம் 2.26 மணி அளவில் அரக்கோணம் ரயில் நிலைய முதல் பிளாட்பாரத்திற்கு வந்து நின்றது. பின்னர், அந்த ரயில் அங்கிருந்து மீண்டும் 2.28 மணி அளவில் புறப்பட  முயன்றது. அப்போது, இன்ஜின் அருகில் இருந்த பெட்டியில் இருந்து குபு குபு என புகை வந்தது.

இதை கவனித்த ரயில் ஓட்டுநர், மற்ற ரயில் பெட்டிகளில் இருந்த பயணிகள் மற்றும் பிளாட்பாரத்தில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். ஏதோ அசம்பாவிதம் ஏற்பட்டு தீ விபத்து நடந்து இருக்குமோ? என நினைத்து பயணிகள் சிலர் ரயிலில் இருந்து அலறி அடித்துக்கொண்டு இறங்கி ஓடினர்.

இதையடுத்து, ஓட்டுநர் ரயிலை அங்கே நிறுத்தி விட்டார். பின்னர் எதனால் புகை வந்தது என்பது குறித்து ரயில் ஓட்டுநர் மற்றும் ஊழியர்கள் ஆய்வு செய்தனர். அப்போது, சிறிய அளவிலான தீயணைப்பு கருவி உடைந்ததால் அதிலிருந்து தீ அணைக்க பயன்படுத்தக்கூடிய பவுடர் வெளியேறி உள்ளதும் இதனால், திடீரென புகை ஏற்பட்டுள்ளதும் தெரியவந்தது.

இந்த புகையால் வேறு எவ்வித அசம்பாவி சம்பவங்களும் ஏற்படவில்லை. தொடர்ந்து, தீ அணைப்பு கருவி அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. அதன் பின்னர் ரயில் 9 நிமிடங்கள் கால தாமதத்திற்கு பிறகு அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இதனால் அரக்கோணம் ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: