நாகர்கோவில் அருகே கையில் கண்ணாடி விரியன் பாம்புடன் மிரட்டிய மூதாட்டி-மாநகராட்சி பணியாளர்கள், பொதுமக்கள் ஓட்டம்

நாகர்கோவில் : நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் கையில் கண்ணாடி விரியன் பாம்புடன் வலம் வந்த மூதாட்டியை கண்டு மாநகராட்சி பணியாளர்கள், பொதுமக்கள் ஓட்டம் பிடித்தனர்.

நாகர்கோவில், கேசவதிருப்பாபுரம் அருகே மூன்லைட் தெரு பகுதியில் உள்ள பாழடைந்த கட்டிடம் ஒன்றில் மூதாட்டி ஒருவர் வசித்து வருகிறார். அந்த வீட்டினை சுற்றிலும்  அவர் குப்பைகளை சேகரித்து குவித்து வைத்துள்ளார். இதனை அப்புறப்படுத்த மாநகராட்சி பணியாளர்கள் நேற்று லாரியுடன் சென்றனர்.

அவர்கள் குப்பைகளை சேகரித்து லாரியில் கொண்டு கொட்டினர். இதனை கண்ட மூதாட்டி கோபத்துடன் எழுந்து லாரியில் ஏறி அதில் இருந்த குப்பைகள் அனைத்தையும் கீழே கொட்டினார். அவரது வீட்டின் அருகில் பாம்புகள் அதிகம் காணப்படுகிறது. மாநகராட்சி பணியாளர்கள் குப்பைகளை அகற்றிய போது அந்த பகுதியில் இருந்த கல் இடையில் இருந்து கொடிய விஷப்பாம்பான கண்ணாடி விரியன் பாம்பு ஒன்று வெளியே வந்தது. அதனை பிளாஸ்டிக் காகிதத்தை சுருட்டி  பிடித்த மூதாட்டி அதனை கொண்டு வந்து தனது இருப்பிடம் அருகே அமர்ந்து கொண்டார். பாம்பை கண்டு எந்தவித அச்சமும் இன்றி மூதாட்டி அமர்ந்து இருந்தது கண்டு பொதுமக்கள் பதைபதைத்தனர்.

அவரிடம் இருந்து பாம்பை விடுவிக்க மக்கள் அவரை நெருங்கியபோது ஒருமுறை பாம்பை தூக்கி பொதுமக்கள் மீது திடீரென்று வீசினார். இதனை கண்டதும் மாநகராட்சி பணியாளர்களும், பொதுமக்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். பின்னர் மூதாட்டியே அந்த பாம்பை மீண்டும் பிடித்து அருகே இருந்த தோப்புக்குள் தூக்கி வீசினார். அதன் பிறகு அந்த பகுதியினர் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மூதாட்டி சற்று மன நலம் பாதிக்கப்பட்டவர் என்று அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Related Stories: