ஆன்லைன் வர்த்தகம், ஷேர் மார்க்கெட்டில் பல லட்சம் இழப்பு கணவன், மனைவி தூக்கிட்டு தற்கொலை

புழல்: அம்பத்தூர் லெனின் நகரை சேர்ந்தவர் பகத்சிங். ஓய்வு பெற்ற எஸ்ஐ. இவரது மகன் முருகேசன் (45), தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி ஜெயந்தி (40). இவர்களுக்கு பத்மஸ்ரீ (16), புனிதன் (14) என்ற மகள், மகன் உள்ளனர்.  முருகேசன் தம்பி ராம்குமார், தங்கை பவானி. இவர்கள் கூட்டுகுடும்பமாக வசித்து வந்தனர். முருகேசன், ஆன்லைன் வர்த்தகம் மற்றும் ஷேர் மார்க்கெட்டில் ஈடுபட்டு வந்தார். கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு இதில் முருகேசனுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதனால், தனது தம்பி ராம்குமார், தங்கை பவானி ஆகியோரிடம் கடன் பெற்று, கடனை அடைத்துள்ளார். கடந்த 2 வாரத்துக்கு முன்பு ஆன்லைன் வர்த்தகத்தில் மீண்டும் நஷ்டம் ஏற்பட்டதால், முருகேசனுக்கு மீண்டும் கடன் ஏற்பட்டது.

இதையடுத்து,  தனது தம்பியிடம்  3 சவரனும், தங்கையிடம் 5 சவரனும், நண்பர்களிடமும் கடன் வாங்கியுள்ளார். தொடர் நஷ்டம் மற்றும் நண்பர்களிடம் கடன் வாங்கியது போன்றவற்றால் முருகேசன் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானார். கடன் கொடுத்தவர்கள், பணத்தை தரும்படி நெருக்கடி கொடுத்ததால் அவர் விரக்தியடைந்தார். இதை மனைவியிடம் கூறி அவ்வப்போது வருந்தியுள்ளார். இந்நிலையில்,  செங்குன்றம் அடுத்த எல்லையம்மன் பேட்டை பகுதியில் உள்ள தங்கள் வீட்டிற்கு நேற்று முன்தினம் முருகேசன் ஜெயந்தி சென்றனர். அதன்பிறகு அவர்கள் வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த பகத்சிங் முருகேசனுக்கு போன் செய்தார். ஆனால், அவர் போனை எடுக்கவில்லை.

இதையடுத்து, அப்பகுதியில் உள்ள ஒருவரை செல்போனில் தொடர்பு கொண்டு, பகத்சிங்  விசாரித்தார். அதற்கு அவர், ‘நேற்று காலையில் இருந்து வீட்டின் கதவு திறக்கப்படவில்லை’ என தெரிவித்தார். இதையடுத்து,  பகத்சிங், உடனடியாக செங்குன்றத்துக்கு சென்று வீட்டின் கதவை தட்டினார். நீண்ட நேரம் தட்டியும் திறக்கப்படவில்லை. அதனால் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றார். அப்போது, கணவன், மனைவி  தனித்தனியாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. செங்குன்றம் போலீசார், சடலங்களை கைப்பற்றி  அரசு  ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி  வைத்தனர்.

Related Stories: