இந்து முன்னணி தலைவர் கொலை வழக்கு விசாரணைக்காக திகார் சிறையிலிருந்து அழைத்து வரப்பட்ட காஜா மொய்தீன், சையத் அலி நவாஸ்: திருவள்ளூர் நீதிமன்றத்தில் விசாரணைக்காக ஆஜர்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் அடுத்த மண்ணூர்பேட்டையில் கடந்த 2014 ஆம் ஆண்டு திருவள்ளூர் மாவட்ட இந்து முன்னணி தலைவர் சுரேஷ்குமார் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 16 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கின் விசாரணை கடந்த 9 ஆண்டுகளாக திருவள்ளுர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வழக்கின் விசாரணைக்காக டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணைக் கைதிகள் சையத் அலி நவாஸ், காஜா மொய்தீன் ஆகிய 2 பேரை டெல்லி திகார் சிறையிலிருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ரயிலில் அழைத்து வரப்பட்டனர்.

பின்னர் இருவரும் திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைந்த அமர்வு நீதிமன்ற நீதிபதி சுபத்திரா தேவி முன்பு ஆஜர்படுத்தினர். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி மீண்டும் இருவரையும் ஏப்ரல் 25ம் தேதி ஆஜராக வேண்டுமென உத்தரவிட்டுள்ளார். துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் விசாரணை கைதிகள் இருவரை மீண்டும் ரயில் மூலம் திகார் சிறைக்கு அழைத்துச் சென்றனர்.  

திருவள்ளூர் நீதிமன்றத்திற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் இரு குற்றவாளிகளை அழைத்து வந்த சம்பவம் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: