3வது முறையாக தேர்வெழுத ‘நீட்’ பயிற்சி பெற்ற மாணவன் பள்ளி விடுதியில் தற்கொலை: தோல்வி பயத்தில் தூக்கில் தொங்கினார்

ஆத்தூர்: நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த மாணவன், தோல்வி பயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே அம்மம்பாளையம் கிராமத்தில் தனியார் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், நீட் தேர்வு பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. மாணவர்கள் பள்ளி விடுதியில் தங்கி, இந்த மையத்தில் பயிற்சி பெற்று வருகிறார்கள். இந்த மையத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராபாளையம் அருகே எடுத்தவாய்நத்தம் குன்றுமேடு பகுதியைச் சேர்ந்த நகைக்கடைக்காரர் முருகன் மகன் சந்துரு(19), விடுதியில் தங்கி நீட் பயிற்சி பெற்று வந்தார்.

 அவருடன் தங்கியிருந்த பாலாஜி என்ற மாணவன், நேற்று முன்தினம் விடுமுறை என்பதால், வீட்டுக்கு சென்று விட்டு, நேற்று காலை 11 மணியளவில் திரும்பி வந்துள்ளார். அப்போது, அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்ட நிலையில் சந்துரு சடலமாக தொங்கியதைக் கண்டு அவர், அலறியடித்தபடி விடுதி காப்பாளர் பிரவீன்குமாரிடம் தெரிவித்தார். இது குறித்து ஆத்தூர் போலீசார் விசாரணை நடத்தினர். சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம், எஸ்பி., சிவக்குமார் உள்ளிட்டோர் நேரில் வந்து மாணவனின் பெற்றோர் மற்றும் விடுதி நிர்வாகத்தினரிடம் விசாரணை நடத்தினர்.

இது குறித்து போலீசார் கூறுகையில், ‘டாக்டராக வேண்டும் என ஆசைப்பட்ட மாணவன் சந்துரு, ஏற்கனவே 2 முறை நீட் தேர்வு எழுதியுள்ளார். ஆனால், அதில் தேர்ச்சி பெற முடியாத நிலையில், 3வது முறையாக மீண்டும் இந்த பயிற்சி மையத்தில் சேர்ந்து, பயிற்சி பெற்று வந்தார். தேர்வுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், இந்த முறையும் தேர்ச்சி பெறாவிட்டால் அவமானமாக போய் விடும் என்ற பயத்தின் காரணமாக மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்’ என்றனர். மாணவன் சந்துருவுக்கு கவிதை எழுதுவதில் ஆர்வமுள்ளது. அவரது அறையில் உள்ள பெட்டி மற்றும் உடமைகளை போலீசார் சோதனை செய்த போது, நோட்டு புத்தகத்தில் ஏராளமான கவிதைகளை எழுதி வைத்திருந்தார். நீட் தேர்வு பயத்தில் மாணவன் தற்கொலை செய்து கொண்டதால், தனியார் பள்ளி வளாகத்தில் பதற்றம் நிலவியது.

Related Stories: